பொன்முடிக்கு ஜோதிமணி நன்றி


ஜோதிமணி

தமிழகத்தில் 10 இடங்களில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள் துவக்கப்படும் என்று அறிவித்துள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு கரூர் எம்பி-யான ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 11-ம் தேதி பேரவையில் நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையின் மீது பேசிய தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, "166.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மணப்பாறை, செஞ்சி, தளி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதிதாக அரசு கலைக் கல்லூரிகள் நடப்பாண்டில் துவங்கப்படும் என்று அறிவித்தார்.

இதில் மணப்பாறை, அரவக்குறிச்சி ஆகிய இரண்டு கல்லூரிகள் கரூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகின்றன. இங்கு கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து ஜோதிமணி எம்பி கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் பொன்முடிக்கு ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களைச் சந்தித்து அரவக்குறிச்சி, மணப்பாறை, விராலிமலை சட்டமன்ற தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தேன். பிறகு தமிழக முதலமைச்சரிடமும் இந்த வேண்டுகோளை முன்வைத்தேன்.

அந்த கோரிக்கையை ஏற்று மணப்பாறை, அரவக்குறிச்சி தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களுக்கும் அரவக்குறிச்சி, மணப்பாறை தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

x