சாதிக்கும் பிள்ளைகளுக்கு பத்து ரூபாய் மணியார்டர்!


பழனிக்குமார்

ஆசிரியர் பணியை அறப்பணி என்பார்கள். மனதுக்கு நெருக்கமாக அதைச் செய்யும்போது அந்தப்பணியால் பல நூறுபேருக்கு ஏணியாகவும் உருவெடுக்க முடியும். அதைச் செவ்வனே செய்து புருவம் உயர்த்தவைக்கிறார் ஆசிரியர் பழனிக்குமார்.

தென்காசி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும்பள்ளியான திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருக்கும் பழனிக்குமாரை பத்து ரூபாய் ஆசிரியர் என உற்சாகம் ததும்ப மாணவர்கள் கொண்டாடுகிறார்கள். இதன் பின்னணி மிகவும் சுவாரஸ்யமானது.

பத்து ரூபாய் பரிசுபெற்ற அரசுப்பள்ளி குழந்தைகள்

ஆசிரியர் பழனிக்குமார் கல்வியைப் போதிப்பதோடு மட்டுமல்லாது மாணவர்களின் நலனிலும், அவர்களுக்குள் இருக்கும் தனித்திறன்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதிலும் முன்வரிசையில் நிற்கிறார். அதற்கென அவர் முன்னெடுக்கும் உத்திகளில் ஒன்றுதான் ‘பத்துரூபாய் பரிசுத்திட்டம்’. அதைப்பற்றிய அறிமுகத்தோடு நம்மிடம் பேசத் துவங்கினார் பழனிக்குமார்

“ஊக்குவிப்பவர்கள் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான் என ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, மாணவ- மாணவிகளை நாம் தட்டிக்கொடுத்து ஊக்குவித்தாலே போதும். தமிழகம், புதுச்சேரியில் படிக்கும் பள்ளிப் பிள்ளைகளின் எந்த ஒரு திறமைப் பற்றி தெரியவந்தாலும் உடனே அவர்களது பள்ளி முகவரிக்கோ, அல்லது வீட்டு முகவரிக்கோ மணியார்டர் மூலம் பணம் அனுப்பிவிடுவேன். அதுவும் பெரிய தொகையெல்லாம் இல்லை. பத்து ரூபாய்தான் அனுப்புவேன்.

அதேநேரம் தபால்காரர், ஒரு குழந்தையைத் தேடிச்சென்று கையெழுத்து வாங்கிவிட்டு பத்துரூபாய் கொடுக்கும்போது அந்தக் குழந்தை அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆடல், பாடல், கல்வி, பேச்சுப் போட்டி, கட்டுரை, ஓவியம், மரம் வளர்த்தல், ஒழுக்கம் என குழந்தைக்கு என்ன திறமை இருந்தாலும் அதை ஊக்குவிக்கும் வகையில் பத்து ரூபாய் மணியார்டர் அனுப்பிவிடுவேன்.

எங்கள் ஊரில் இருக்கும் ‘கனிந்த இதயங்கள்’ என்னும் அமைப்பும், ‘எஸ் டூ எஸ்’ என்ற அமைப்பின் நிறுவனர் ரவி சொக்கலிங்கமும் இதற்குத் தொடர்ச்சியாக நிதி உதவி செய்துவருகின்றனர். இதுவரை மொத்தம் ஏழாயிரம் குழந்தைகளுக்கு இப்படி பத்து ரூபாய் மணியார்டர் அனுப்பியுள்ளோம்” என்கிறார் பழனிக்குமார்.

பள்ளிக்கே சென்று பட்டுவாடா...

தினமும் குறைந்தபட்சம் பத்திலிருந்து 25 மணியார்டர்கள் வரை அனுப்புவது என்பதை இலக்காகவே வைத்திருக்கிறார் ஆசிரியர் பழனிக்குமார். பத்து ரூபாய் மணியார்டரை அனுப்ப தபால் நிலையங்களில் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மணியார்டர் வழியைத் தேர்ந்தெடுத்தது குறித்து மீண்டும் நம்மிடம் பேசத்துவங்கினார் பழனிக்குமார்.

“கையெழுத்து வாங்கிவிட்டு தான் மணியார்டர் பணத்தை தபால்க்காரர் கொடுப்பார். இது அந்தக் குழந்தைகளுக்கு கையெழுத்தின் மேன்மையைச் சொல்லும். இன்னும், சொல்லப்போனால் வளர்ந்து, நல்ல அதிகாரியாக உருவெடுத்து கையெழுத்துப் போடவேண்டும் என்னும் சிந்தனையை இப்போதே குழந்தையின் ஆழ்மனதில் இது விதைக்கும். இன்று பத்து ரூபாய் பரிசு பெற கையெழுத்து போடுகிறோம். நாளை உயர் அதிகாரியாகி மக்களுக்கு நல்லதிட்டங்களை நிறைவேற்ற கையெழுத்திட வேண்டும் என்னும் முனைப்பும் இதன்மூலம் உருவாகும். இதை உருவாக்குவதே எனது நோக்கம்’’ என்றார் பழனிக்குமார்.

‘திருநாவுக்கரசு பி.எஸ்’ என்னும் பெயரில் உள்ள பள்ளியின் முகநூல் பக்கத்தை இயக்கும் அதிகாரம் பெற்ற பழனிக்குமார் அதன் மூலம் தங்கள் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தார். அவர்களின் பங்களிப்போடு இந்தப்பள்ளியில் இரு ஸ்மார்ட் வகுப்பறைகள், மாணவ - மாணவிகள் அனைவருக்குமே நான்கு விதமான சீருடைகள், சேர், டேபிள் என தனியார் பள்ளிகளுக்கு இணையாக தான் பணிசெய்யும் பள்ளியை மிளிரச் செய்தார். இதன் அடுத்த பாய்ச்சலே பத்து ரூபாய் மணியார்டர் திட்டம்.

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து சிறந்த ஆசிரியருக்கான பாராட்டு

“சில ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த மாணவர் ஒருவரின் பாடல் திறனைப் பற்றி தெரியவந்தது. அதைப் பாராட்டி அந்த மாணவனுக்கு பத்து ரூபாய் மணியார்டர் அனுப்பினேன். அந்த மாணவன் பற்றி எங்களுக்குத் தெரிவித்த ஆசிரியை ஜெயமேரி, ‘கண்ணா... இந்த பத்துரூபாயை வைத்து என்ன செய்வாய்?’ என அந்த மாணவனிடம் கேட்டிருக்கிறார். உடனே அந்த மாணவன், ‘இரண்டு ரூபாய் எனக்கு, இரண்டு ரூபாயை என் அக்காவுக்குக் கொடுப்பேன். ஒரு ரூபாயை உண்டியலில் போடுவேன். ஐந்து ரூபாய் அம்மாவுக்கு காய்கறி வாங்கக் கொடுப்பேன்’ என மழலை மொழியில் சொல்லியிருக்கிறான். ஒருவகையில் இது குழந்தைகளின் சேமிப்புப் பழக்கத்திற்கும் அச்சாரமிடும். அவனையே அறியாமல் கிடைப்பதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்னும் உயர்ந்த குணம் அவனுக்குள் இருப்பதையும் இதன்மூலம் அறிந்து கொண்டோம்.

இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை அன்னபூர்ணா மோகன் அவரது மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத்திறன்பற்றி தகவல் தந்தார். அரசுப்பள்ளியில் பயிலும் அந்த மாணவர்கள் பேசும் வீடியோவைப் பார்த்துவிட்டு பத்து பேருக்கு தலா பத்து ரூபாய் அனுப்பினேன். அதில் மூன்றாம் வகுப்பு மாணவிக்கு மணியார்டரில் பத்து ரூபாய் வந்ததைப் பார்த்த அவரது அம்மா அழுதேவிட்டார்.

அரசுப்பள்ளியில் படிக்கும் இந்தக் குழந்தைகள் மிகச்சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பெற்றோரும் எளிய தொழில் செய்பவர்கள். கல்வியின் மீது அவர்களுக்கு இது போன்ற தருணங்கள் இன்னும் ஆழமான பிடிப்பை உருவாக்கும். இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. ஒரு வகுப்பில் ஏதாவது ஒரு மாணவனுக்கு மணியார்டர் போய் கிடைக்கும்போது சகமாணவர்களுக்கு அவர்களுக்கும் மணியார்டரில் பத்து ரூபாய் பெற வேண்டும் என ஊக்கம் கிடைக்கும். அவர்களும் அதை நோக்கி முன்னேற முயற்சிப்பார்கள்.

புதுச்சேரியில் ஒரு பள்ளியில் 4 பேருக்கு முதலில் மணியார்டர் அனுப்பினோம். அடுத்த மாதமே அதே பள்ளியில் 86 பேருக்கு மணியார்டர் அனுப்பும் அளவுக்கு பல திறனிலும் அசத்தி கவனம் ஈர்த்தனர். இப்படி ஒவ்வொரு பத்து ரூபாயின் பின்னாலும் வாழ்வியல் கதைகளும் இருக்கிறது. எனது இந்த முயற்சிகளுக்கு எங்கள் பள்ளியின் நிர்வாகி செல்லம்மாளும், பள்ளிக்கல்வி உறுப்பினர் ரெங்கநாயகி, ஆசிரியர் பெருமக்கள் ஆகியோரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து என்னை ஊக்குவித்து வருகின்றனர்’’ என்றார் பழனிக்குமார்.

பத்து ரூபாய் தானே என நாம் சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், அதை வைத்து இப்படியும் பள்ளிப் பிள்ளைகளை மோட்டிவேட் செய்ய முடியும் என நிரூபித்துக் கொண்டிருக்கும் பழனிக்குமார், உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய நல் ஆசான் தான்!

x