வேலை தேடுவோருக்கு வழிகாட்டும் வானொலி நிகழ்ச்சி!


தாங்கள் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தேடுவோரும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் இனி வார இறுதியில் வானொலி கேட்பது பலன் தரும்.

ஆம்! முதல் அகில இந்திய வானொலி நிலையம், இதற்காக வாராந்திர சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்புகிறது. இந்தத் தகவலை அகில இந்திய வானொலி நிலையத்தின் செய்திச் சேவைப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு, 100.1 எஃப்எம் கோல்டு வானொலியில், ‘அபியாஸ்’ எனும் பெயரில் இந்நிகழ்ச்சி ஒலிபரப்பப்படும். அரை மணி நேரம் ஒலிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு குறித்த விளக்கங்கள், தரவுகள் உள்ளிட்டவை இடம்பெறும். ஒவ்வொரு வாரமும், கல்வித் துறையைச் சேர்ந்த ஒருவர் கலந்துகொண்டு நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.

இந்நிகழ்ச்சியை @airnewsalerts எனும் ட்விட்டர் பக்கத்திலும், airnewsofficial எனும் யூடியூப் சேனலிலும், NewsonAir செயலியிலும் நேயர்கள் கேட்கலாம்.

அடுத்த வாரம் சனிக்கிழமை ஒலிபரப்பாகவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் கேள்விகளை 928 909 4044 எனும் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பலாம் அல்லது abhyaas.air@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அடுத்த வார நிகழ்ச்சிக்கான கேள்விகளை ஏப்ரல் 5-ம் தேதி வரை அனுப்பலாம்.

இன்று இரவு 9.30 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில் நவீன வரலாறு குறித்த தகவல்கள் இடம்பெறும். அடுத்த வாரம் இடம்பெறவிருக்கும் தலைப்பு இந்திய அரசியல் மற்றும் அரசமைப்புச் சட்டம் ஆகும்.

இந்நிகழ்ச்சி இந்தி மொழி பேசுபவர்களுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது. மாநில மொழிகளில் இந்நிகழ்ச்சியை நடத்துவது குறித்த அறிவிப்பு எதுவும் வானொலி நிலையத்தின் செய்திச் சேவைப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.

x