`அச்சப்படாதீங்க, நாங்க இருக்கோம்'- மாணவர்களிடம் போலீஸ் விழிப்புணர்வு


``பள்ளி மற்றும் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும் தவறான செயல்கள் நடைபெற்றால் அது குறித்து அச்சமடையாமல் உடனே அப்பகுதிகளுக்கு ரோந்து வரும் காவலர்களிடமோ அல்லது தலைமையாசிரிடமோ சொல்ல வேண்டும்'' என பள்ளி மாணவர்களிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருச்சி தில்லைநகர் காவல் நிலையம் சார்பில் குழந்தை உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் தில்லைநகர் காவல் நிலைய ஆய்வாளர் சிந்துநதி கலந்துகொண்டு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பதில் குழந்தைகளின் பங்கு, போதை பொருளினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடினர். அப்போது பேசிய அவர், "பள்ளி மற்றும் குடியிருக்கும் பகுதிகளுக்கு அருகில் ஏதேனும் தவறான செயல்கள் நடைபெற்றால் அது குறித்து அச்சமடையாமல் உடனே அப்பகுதிகளுக்கு ரோந்து வரும் காவலர்களிடம் சொல்லலாம். அல்லது உங்கள் தலைமையாசிரியர் அவர்களிடம் சொல்ல வேண்டும்.

மாணவ, மாணவிகளுடன் பேசும் ஆய்வாளர் சிந்து நதி

இதில் மாணவர்களின் பங்கு தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் உணர வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் வாழ்வதற்கான உரிமை, வளர்வதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, பங்கேற்பதற்கான உரிமை ஆகியன உள்ளது. உங்கள் வீட்டிலோ, பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளவர்களாலோ பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் உடனே சொல்ல வேண்டும்.

அந்நியர்கள் யாரையும் தொட்டு பேச அனுமதிக்க கூடாது. செல்போனில் யாராவது வீடியோ காட்டினாலும் அதுபற்றி தகவல் தர வேண்டும். உங்கள் பாதுகாப்புக்கு 24 மணி நேரமும் நாங்கள் இருக்கிறோம்" என்று தைரியம் தந்து பேசினார்.

விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குதல்

காவலர் நிறைவாழ்வு பயிற்சித் திட்ட பயிற்றுநர் மற்றும் அன்னை தெரசா டிரஸ்ட் இயக்குநர் பிரபு பேசும்போது, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதும் வேலைக்கு அமர்த்துவதும் சட்டப்படி குற்றம் என்பது குறித்தும், குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்படி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பது, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு வழங்கினார்.

குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098, குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். காவல் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், துரைராஜ் மற்றும் காவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

x