நீட் தேர்வுக்கு எதிராக பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட மாணவர் அமைப்பினர் கைது


பிரச்சாரப் பயணம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியலூர் மாவட்டம் குழுமூரிலிருந்து சென்னைக்கு பிரச்சார நடைபயணம் துவக்கிய மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

தடுத்து நிறுத்தும் காவல்துறையினர்

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஒருமித்த கருத்து நிலவுகிறது. திமுக அரசு அமைந்த பிறகு சட்டப்பேரவையில் இரண்டு முறை நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவர் அமைப்புகள் உள்ளிட்டவை நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து போராடிய வண்ணம் உள்ளன. அவ்வகையில் நீட் தேர்வுக்கு எதிரான தமிழக மாணவர்கள் என்ற அமைப்பினர் அனிதாவின் சொந்த ஊரான குழுமூரில் இருந்து சென்னை வரை எட்டு நாட்கள் பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

குழுமூர் கிராமத்தில் நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவு நூலகத்தில் இருந்து இந்தப் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார்கள். நீட் தமிழக அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டியும், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டும் இந்த பிரச்சாரப் பயணத்தை தொடங்கினர்.

கைது செய்யப்பட்டவர்கள்...

எட்டு நாட்கள் நடைபயணமாக வழி நெடுகிலும் பிரச்சாரம் மேற்கொண்டு சென்னை வரை செல்வது மாணவர்களின் திட்டம். இந்தப் பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில் செந்துறை போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைதானவர்கள் மத்திய அரசையும் காவல்துறையையும் கண்டித்து முழக்கமிட்டனர். கைதுசெய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

x