மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஜெ.குமார் நியமிக்கப்படுவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவித்துள்ளார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பணியாற்றிவந்த மு.கிருஷ்ணனை கடந்த ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம்செய்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. காலியாக இருந்த காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பையும், பல்கலைக்கழக நிர்வாகப் பொறுப்பையும் ஒருங்கிணைப்பு குழுவினர் கவனித்துவந்தனர்.
இந்நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமியும், உறுப்பினர்களாக பேராசிரியர்கள் எம்.ராஜேந்திரன், பி.மருதமுத்து ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதி வாய்ந்த 10 பேரை இந்தக்குழு நேர்முகத்தேர்வுக்கு அழைத்தது. அதில் 3 பேரைத் தேர்வுசெய்து, பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பிவைத்தது அந்தக் குழு.
இந்த நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஜெ.குமாரை நியமிப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அறிவித்துள்ளார். அதற்கான ஆணையையும் அவர் ஜெ.குமாரிடம் வழங்கினார். பேராசிரியர் பணியில் 29 ஆண்டுகள் அனுபவம் கொண்ட குமார், 3 ஆண்டுகள் இந்தப் பதவியில் இருப்பார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.