சென்னை: கல்லூரி ஆசிரியர்களுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மறைந்த குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கற்றல், கற்பித்தல் பணியில் சிறந்து விளங்கும் பள்ளி - கல்லூரி ஆசிரியர்களுக்கு மத்திய - மாநில அரசுகளால் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி கல்லூரி ஆசிரியருக்கான தேசிய நல்லாசிரியர் விருது பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் கடந்தாண்டு முதல் வழங்கப்படுகிறது.
உயர்கல்வித் துறையில் கலை மற்றும் அறிவியல், பொறியியல், சட்டம், வணிகம், மேலாண்மை, அறிவியல் உட்பட பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 25, பாலிடெக்னிக் பிரிவு ஆசிரியர்களுக்கு 10 என மொத்தம் 35 விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கான அறிவிப்பை யுஜிசி கடந்த மே மாதம் வெளியிட்டது. தொடர்ந்து விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் ஜூன் 20-ம் தேதி நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் அவகாசம் ஜூலை 1-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தகுதியான பேராசிரியர்கள், ஐடிஐ பயிற்றுநர்கள், பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் ஆகியோர் www.awards.gov.in என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்வாகும் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது, சான்றிதழ் மற்றும் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இவற்றை குடியரசுத் தலைவர் டெல்லியில் செப்டம்பர் 5-ம் தேதி அளித்து கவுரவிப்பார். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.