7 தொல்லியல் அகழாய்வுகள், 2 களஆய்வுகளுக்கான பணிகளை காணொலி வாயிலாக முதல்வர் தொடங்கிவைத்தார்


தொல்லியல் அகழாய்வுகளுக்கான பணிகளை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கும் முதல்வர்

அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021-2022-ம் ஆண்டு 7 இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் – மாளிகைமேடு ஆகிய 2 அகழாய்வுப் பணிகளைக் காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். தலைமைச் செயலகத்தில் இன்று(பிப்.11) தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையைப் புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னோக்கி எடுத்துச் சென்றுள்ளது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் வரலாற்றுக்காலம் வரையிலான தொல்லியல் இடங்களில் அகழாய்வு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் (கொந்தகை, அகரம், மணலூர்) 8-ம் கட்டம்; தூத்துக்குடி மாவட்டம், சிவகளையில் 3-ம் கட்டம்; அரியலூர் மாவட்டம். கங்கைகொண்டசோழபுரத்தில் 2-ம் கட்டம்; கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறையில் 2-ம் கட்டம்; விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் முதல் கட்டம்; திருநெல்வேலி மாவட்டம், துலுக்கர்பட்டியில் முதல் கட்டம்; தர்மபுரி மாவட்டம், பெரும்பாலையில் முதல் கட்டம் ஆகிய 7 இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் 20.1.2022 அன்று அறிவித்தார்.

அதற்கிணங்க, 15 இலட்சம் ஆண்டுகள் கொண்ட இந்நிலப்பகுதியின் தொன்மை வரலாற்றைத் தொகுத்து எழுதுவதற்கு அதிக அளவிலான சான்றுகள் தேவை. எழுதப்படுகின்ற வரலாறானது அறிவியல் அடிப்படையிலான சான்றுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். அன்று முதல் இன்று வரையிலான காலகட்டங்களில் விடுபட்டுள்ள வரலாற்றைப் பூர்த்திசெய்து எழுத அகழாய்வுகள் செய்வது அவசியமாகும்.

தொடக்க வரலாற்றுக் காலம் கி.மு. 6-ம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருத்ததென்றும், தென்னிந்தியாவில் காணப்படவில்லை என்னும் கருதுகோள் ஆய்வாளர்களிடம் இருந்தது. கீழடி அகழாய்வானது கங்கைச் சமவெளியில் நிலவியது போன்ற நகர நாகரிகம் மட்டுமின்றி படிப்பறிவும் எழுத்தறிவும் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே நிலவியது என்பதை நிலைநிறுத்தியுள்ளது.

ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை ஆகியத் தொன்மை வாய்ந்த ஊர்களைப் பெற்றுள்ள தண் பொருநை ஆற்றங்கரை (தாமிரபரணி) நாகரிகம் 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சிவகளை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற உமி நீங்கிய நெல்மணிகளின் வழிப் பெறப்பட்ட காலக் கணக்கீடு நிலை நிறுத்தியுள்ளது.

அத்தகைய எண்ணங்களையும் நோக்கங்களையும் நிறைவு செய்வதற்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையானது ஏற்கெனவே அகழாய்வுகளை மேற்கொண்டு வரும் கீழடி, சிவகளை, கங்கைகொண்டசோழபுரம், மயிலாடும்பாறை ஆகிய இடங்களில் மட்டுமின்றி புதிதாக திருநெல்வேலி மாவட்டம் – துலுக்கர்பட்டி, விருதுநகர் மாவட்டம் - வெம்பக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் - பெரும்பாலை ஆகிய இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிதி ஆண்டில் ரூ.5 கோடி நிதியில் மேற்படி 7 தொல்லியல் அகழாய்வுகள், 2 களஆய்வுகள் மற்றும் சங்ககால கொற்கைத் துறைமுகத்தை அடையாளம்காண முன்களப் புல ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளக் கூடிய இந்நிகழ்வை, இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டப்பேரவை உறுப்பினர் ஆ.தமிழரசி, ஆட்சித் தலைவர் ப.மதுசூதன்ரெட்டி, அரியலூர் மாவட்டத்திலிருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், சட்டப்பேரவை உறுப்பினர் க.சொ.க. கண்ணன், ஆட்சித் தலைவர் பெ.ரமண சரஸ்வதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

x