நீட் தேர்வில் வெற்றி பெற்று, 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் தமிழ் வழியில் அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவக் கல்வி தொடர்பான சந்தேகங்கள் விளக்கங்களுக்கு வழிகாட்டும் வகையில் வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
‘தமிழினி புலனம்’ என்ற வாட்ஸ்அப் குழு வெகுநாட்களாக இயங்கி வருகிறது. இக்குழுவில் மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்களாக உள்ளவர்களே பெரும்பாலும் இடம் பெற்றிருக்கின்றனர். அவர்களின் மன இறுக்கம் போக்கும் வகையில் கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது இந்தக் குழு.
இக் குழுவின் சார்பில், தற்போது அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றிருக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ‘தமிழினி துணைவன்’ என்ற புதிய வாட்ஸ்அப் குழுவை இன்றுமுதல் தொடங்கி உள்ளார்கள். நீட் தேர்வில் வெற்றிபெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தமிழ்நாடு முழுதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெற்றுள்ள அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு, மருத்துவக் கல்வியை எளிதாக படித்திட, தமிழினி- மருத்துவக் கல்வி வழிகாட்டுதல் குழுவை, ‘தமிழினி துணைவன்’ என்ற பெயரில் உருவாக்கி உள்ளார்கள்.
இதன் மூலம் அனுபவமிக்க மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியர்கள் இணையவழியில் ஆலோசனைகளை வழங்கி தமிழ் வழிக் கல்வியில் படித்து மருத்துவம் படிக்கத் தேர்வாகி இருப்பவர்களுக்கு உதவிட திட்டமிட்டுள்ளனர். தமிழகம் முழுதும் மருத்துவம் படிக்கத் தேர்வாகி இருக்கும் 291 மாணவ மாணவிகளுக்கு, அவர்களது செல்போன் எண்ணுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று, (ஜன 4) மாலை 6 மணிக்கு இணையம் வழியாக முதல் அமர்வு நடைபெற உள்ளது. தமிழினி துணைவன் அமைப்பை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் மு.பூவதி அவர்கள் தொடங்கிவைக்க உள்ளார். இந்நிகழ்வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் திருவேங்கடம், திருச்சி மணப்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மலைத்துரை, திருச்சி உடலியங்கியல் துறை பேராசிரியர் (ஓய்வு) மருத்துவர் S.சரயு மற்றும் சென்னை கதிரியக்க நிபுணர் மருத்துவர் தென்றல் ஆகியோர் பங்கேற்று மருத்துவ மாணவ-மாணவிகளுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் வழிகாட்டுதல், ஆலோசனைகள் வழங்கிட உள்ளனர்.
மேலும், வாரம்தோறும் முதலாமாண்டு உடற்கூறு இயல், உடலியங்கியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகிய பாடங்கள் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அனுபவமிக்க பேராசிரியர்கள் மூலம் இணையவழி வகுப்புகள் மூலம் எளிதில் அவர்கள் புரிந்துகொண்டு படிப்பதற்கு ஏதுவாக ‘தமிழினி துணைவன்’ தொடர்ந்து உதவிட உள்ளது.
இதற்கு உரிய ஒருங்கிணைப்புப் பணியை திருச்சி, சமூக மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவர் வீ.சி.சுபாஷ் காந்தி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி செவிலிய ஆசிரியர் உமா திருவேங்கடம் மற்றும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஆ.தமயந்தி ஆகியோர் செய்துள்ளனர்.