ஆன்லைன் வகுப்பில் ஆப்சென்ட்; தேர்வெழுத அனுமதி மறுப்பு?


‘காடு ஆறு மாதம்... நாடு ஆறு மாதம்’ என்கிற விக்ரமாதித்தன் கதை போல, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் சில நாட்கள் நேரடியாகவும், சில நாட்கள் ஆன்லைன் வாயிலாகவும் நடந்துவருகின்றன. கரோனா அச்சம் காரணமாக நேரடி வகுப்புகளுக்கு சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயங்கினார்கள். இந்நிலையில், கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் தொடங்குமென, உயர் கல்வித் துறை அறிவித்தது. இதற்கான தேர்வு அட்டவணைகளை கல்லூரி, பல்கலைக்கழகங்கள் வெளியிட்டன.

இந்நிலையில் போதிய வருகைப் பதிவு இல்லாத காரணத்தால் மதுரை மண்டலத்தில் சில கல்லூரிகள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளன. இதனால் அந்த மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கவலையில் இருக்கிறார்கள். ஏற்கெனவே கரோனா காரணமாக கல்வி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது தேர்வெழுதாவிட்டால் படிப்பு மேலும் கெட்டுவிடும் என்கிறார்கள் அவர்கள்.

இதுகுறித்து அகில இந்திய மாணவர் கழக மதுரை மாவட்ட செயலாளர் மு.காளீஸ்வரன் கூறும்போது, “மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மற்றும் தேனி, திண்டுக்கல் அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு வருகைப் பதிவை காரணம் காட்டி அபராதத்தொகை விதித்தது மட்டுமல்லாமல், ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக கரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நடைபெற்று வருகின்றன.

2021-2022ம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கரோனா தொற்று பரவல் குறைந்த காரணத்தால், தமிழ்நாடு முழுவதும் 01.09.2021 அன்று முதலாமாண்டு மாணவர்கள் தவிர்த்து இதர கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் திறக்கப்பட்டன. பின் 04.10.2021 அன்று கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் சுழற்சி முறை, தனிமனித இடைவெளி, 18 வயது நிரம்பிய மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்படுவதற்கு முன்புவரை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வந்தனர். பின் அனைத்து கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 22.11.2021 அன்று வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் எனவும் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் நேரடியாக ஜனவரி 20.2022-க்கு மேல் நடைபெறும் எனவும் உயர் கல்வித் துறை அறிவித்தது.

டிசம்பர் 2021 கடைசியில் ஓமைக்கரான் தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியதை அடுத்து 05.01.2022 அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என உயர் கல்வித் துறை அறிவித்தது. அது 31.01.2022 வரை நீட்டிக்கப்பட்டது.

இப்படி ஆன்லைன் வகுப்புகள், நேரடி வகுப்புகள், ஆன்லைன் தேர்வு, நேரடித் தேர்வுகள், கரோனா லாக்டவுன் விடுமுறை என மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டும், கரோனா தொற்றின் அச்சத்தாலும் மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கும் இக்கட்டான இச்சூழலில் மாணவர்களின் நலனைக் காக்க வேண்டிய கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு விரோதமாக நடந்திருப்பது கண்டனத்துக்கு உரியதாகும். இதேபோல் பல கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு இணையதள மற்றும் கைப்பேசி வசதி முழுமையாக கிடைக்காத சூழ்நிலையும் உள்ளதால், கல்லூரி சம்பந்தமான தகவல்கள் சில மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை.

இதனால் குறிப்பிட்ட தேதிகளில் செமஸ்டர் தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக கட்டமுடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். தேர்வுக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக கட்ட முடியாததால், பல மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளையும் எழுத முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அரசும், உயர் கல்வித் துறையும் இதுபோன்ற விஷயங்களில் தலையிட்டு ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி வழங்குமாறு அகில இந்திய மாணவர் கழகம் சார்பில் வலியுறுத்துகிறோம்” என்றார்.

x