அதிருப்தியில் ஆசிரியர்கள்... தீர்த்துவைக்குமா திமுக அரசு?


அரசுப் பள்ளி மாணவர்கள்

திமுகவின் பெரும் பலமே அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்தான். அவர்களில், ஆசிரியர்கள் தமிழக அரசின் மீது கடுமையான வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. அந்தக் கோபத்துக்கும், வருத்தத்துக்கும் காரணம், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததும் அவர்களின் குறைகள் களையப்படாததும்தான் என்கிறார்கள். இதன் பின்னணி என்ன?

திமுக ஆட்சியில் பலன் பெற்றவர்கள்

ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குச்சாவடிகளிலும், வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பணியாற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக பிரதான கட்சியான அதிமுக குற்றம்சாட்டுவது வாடிக்கை. அந்த அளவுக்கு வெளிப்படையாக திமுக ஆதரவு மனநிலையில், பெரும்பாலான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இருப்பார்கள். பெரும்பாலான ஊழியர் சங்கங்களும் திமுக சார்பு நிலைப்பாட்டில்தான் இருக்கும்.

அதற்குக் காரணம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் பெரும்பான்மையினர் திமுக ஆட்சியின்போது நியமனம் செய்யப்பட்டவர்கள்தான். திமுக ஆட்சியின்போதுதான் அவர்களுக்கான ஊதியம் உயர்த்தப்படுவதும், பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதும் நடக்கிறது. அவர்களில் பெரும்பான்மையினர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பதன் பின்னணி இதுதான்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதை நிரூபிக்கும் வகையில் 23 தொகுதிகளில் தபால் வாக்குகளின் தயவால்தான் திமுக வெற்றிக்கோட்டைத் தொடமுடிந்தது. அந்த தபால் வாக்குகள் பெரும்பாலும் ஆசிரியர்கள் வாக்களித்துள்ளதுதான் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் அந்த ஆசிரியர்கள் திமுக அரசின் மீது வருத்தத்திலும், கோபத்திலும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கோபத்தின் பின்னணி

அப்படி என்ன கோபம் என்று ஆசிரியர்கள் வட்டாரத்தில் விசாரித்தேன். அவர்கள் தங்கள் கோபத்துக்கான காரணங்களைக் கொட்டித் தீர்த்துவிட்டார்கள். ’’திமுக ஆட்சி வந்துவிட்டால் அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எந்தக் கவலையும் இருக்காது என்பதுதான் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையாக இருக்கிறது. நாங்களும் அப்படித்தான் நம்பினோம். ஆனால் இந்தமுறை பதவியேற்று இருக்கிற திமுக அரசு, எங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றவில்லை. பெருத்த ஏமாற்றத்தைத்தான் இதுவரையிலும் அளித்து வருகிறது. எங்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அரசாங்கம் முயலவில்லை.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்பது திமுகவின் பிரதான வாக்குறுதி. 2009-ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களில் ஜனவரி மாதம் சேர்ந்தவர்களுக்கும் டிசம்பர் மாதம் சேர்ந்தவர்களுக்கும் இடையே பெருத்த வேறுபாடு நிலவுகிறது. அடுத்தடுத்த ஊதியக்குழுவால் அந்த வேறுபாடு விகிதம் மிகவும் அதிகமாகிவிட்டது. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் அந்த விகிதம் களையப்படும் என்று நம்பிக்கொண்டிருந்தோம். அதுவரை இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இதுவரை அதைப் பற்றி இந்த அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போது கரோனா காலச்சூழலால் அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மிக அதிகமாக உயர்ந்திருக்கிறது. தனியார் பள்ளிகளில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களை, பொருளாதாரச் சிக்கல் காரணமாக அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்த்துவருகிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி எந்தப் பணியிடத்தையும் அரசாங்கம் உருவாக்கவில்லை. இஎம்ஐஎஸ் என்ற முறையைக் கொண்டுவந்திருக்கிறார்கள். எல்லா நடைமுறைகளையும் ஒரே இடத்தில் கொண்டுவருவற்காக இணையவழியில் கொண்டுவரப்பட்ட இம்முறையின் நடைமுறையில், ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அதைக் கடைபிடிப்பது பெரிய சுமையாகவே இருக்கிறது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன்

கரோனாவுக்கான கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கறாராக உத்தரவிடுகிறார்கள். ஆனால் அதற்கான கட்டமைப்பு வசதிகள் பள்ளியில் இல்லை. இருக்கும் ஒன்று அல்லது இரண்டு கட்டிடத்துக்குள் எத்தனை மாணவர்களை இடைவெளிவிட்டு அமரவைக்க முடியும் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? ஆனால் அதை செய்யச் சொல்கிறார்கள்.

தொற்று அபாயம்

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அங்கு மாலை நேரத்தில் நடைபெறுகிற ‘இல்லம் தேடி கல்வி திட்ட’த்தை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். கரோனா 3-வது அலை வேகமெடுத்துள்ள இந்த நேரத்தில், மாணவர்களின் கற்றல் திறன் குறித்த பயிற்சி ஆசிரியர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களை ஒரே இடத்தில் அடைத்து இப்படி பயிற்சி கொடுப்பதன் மூலம், ஆசிரியர்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகிறார்கள். 17 சங்கங்கள் வேண்டாம் என்று மறுத்தும்கூட வலுக்கட்டாயமாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், இது புதிய பயிற்சியாகக்கூட இல்லை. 2019-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பயிற்சியையே இப்போது திரும்ப கொடுக்கிறார்கள்.

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்போது, இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி உயர்வு கொடுத்து அவர்களுக்கு 30 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு பரிசீலிக்கவில்லை” என்று அரசின் மீதான கோபத்தை அடுக்கிக்கொண்டே போகிறார்கள்.

சலுகைகளே இல்லை

இதுகுறித்து, இன்னும் விரிவாகப் பேசுகிறார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் ந.ரெங்கராஜன்.

’’பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; புதிய ஓய்வூதியத் திட்டம் விலக்கிக்கொள்ளப்படும் என்பது திமுக அரசின் மிக முக்கியமான வாக்குறுதி. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும். இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்பதும் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதையும் செயல்படுத்துவதற்கு எந்த முனைப்பும் காட்டப்படவில்லை. மத்திய அரசு அமல்படுத்தியதற்குப் பிறகு அகவிலைப்படி மட்டும் உயர்த்தி வழங்கியிருக்கிறார்கள். அரசால் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 101 அரசாணையும் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும்.

அதன் மூலம் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு யாரைத் தொடர்புகொள்வது, யாருக்கு அதற்கான அதிகாரம் இருக்கிறது என்பது உட்பட பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. பள்ளிக் கல்வி ஆணையர் பதவி இல்லாதபோது நேரடியாகப் பள்ளிக் கல்வி இயக்குநரைச் சந்தித்து குறைகளைச் சொல்லி களைந்துகொள்ள முடிந்தது. தற்போது அதுவும் முடியவில்லை. இதனால் ஆசிரியர்களுக்கு நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தற்போது நடந்து வருகிற கலந்தாய்விலும் ஆசிரியர்களுக்குப் பெரிதாகப் பயனில்லை. பணி நிரவலின்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த தேதி பணிமூப்பு காட்டாமல் பணிநிரவலில் சென்ற தேதியே முன்னுரிமைப் பட்டியலில் காட்டுகிறது. இதனால் அவர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

பதவியேற்று இத்தனை நாட்களில் ஆசிரியர்களுக்குச் சலுகை என்ற பெயரில் ஒரே ஒரு உத்தரவுதான் பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. அந்த உத்தரவும் ஆசிரியர்களுக்கு எதிரானதாகத்தான் இருக்கிறது. பணியின்போது மேற்படிப்பு படித்தவர்களுக்கு மாநில அரசால் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதை மாற்றி மத்திய அரசின் விதிகளுக்கு ஏற்ப வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அது ஒரு முறை மட்டும் ஊக்கத்தொகை வழங்கும் முறை. அந்த முறையால் ஆசிரியர்களுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்படும். மேற்படிப்பை முடித்துவிட்டு 6,600 ஆசிரியர்கள் அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதுவரை அதற்கான ஒப்புதல் அரசிடமிருந்து கிடைக்கவில்லை.

அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

இந்த ஒரு உத்தரவைத் தவிர வேறு புதிதான சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. செய்வதாகச் சொன்ன எதையும் செய்து தரவில்லை. அதனால் விரைவில் தொடக்கப் பள்ளி அளவிலான ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, இதுகுறித்த போராட்ட அறிவிப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம்” என்கிறார் ரங்கராஜன்.

‘உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்!’

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசினேன். ‘’மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அதேநேரத்தில் மாநிலத்தின் நிதி நிலைமையைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் நலன்காக்கவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அவர்களின் கோரிக்கைகளையும், வருத்தங்களையும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வோம்” என்றார் அமைச்சர்.

பெண்களுக்கான மாத மதிப்பூதியம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட முக்கியமான சில வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றாதது, பொங்கலுக்கு ரொக்கப் பணம் தராதது, பொங்கல் பொருட்கள் தரமில்லாதது, நீட் தேர்வை ரத்துசெய்ய இயலாதது, எழுவர் விடுதலையில் தாமதம் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருக்கும் இந்த நேரத்தில், திமுகவின் பலமாகக் கருதப்படும் ஆசிரியர்களும் அரசின் மீது வருத்தத்தில் இருப்பது மு.க.ஸ்டாலின் அரசுக்குப் பின்னடைவாக இருக்கும் என்றே கருதப்படுகிறது!

x