பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு: இரவு, ஞாயிறு ஊரடங்குகள் ரத்து!


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், இன்று(ஜன.27) நடைபெற்றது. அதன் அடிப்படையில் முக்கிய முடிவுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, பிப்.1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும். ஒன்றாம் வகுப்புக்கு கீழான மழலையர் வகுப்புகளுக்கு அனுமதி இல்லை. உயர்கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை, கரோனா கேர் மையமாக செயல்படும் கல்லூரி வளாகங்கள் தவிர்த்து இதர கல்லூரிகளுக்கான வகுப்புகள் பிப்.1 முதல் முழுமையாக நடைபெறும்.

நடைமுறையில் இருந்த, இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவை விலக்கிக்கொள்ளப்படுகின்றன. அதன்படி இரவு ஊரடங்கு நாளை(ஜன.28) இரவு முதல் விலக்கிக்கொள்ளப்படுகிறது. பிப்.15 வரை அமலில் இருக்கும் இந்தத் தளர்வுகள், அதன்பின்னர் தமிழக அரசால் மீண்டும் ஒருமுறை பரிசீலனை செய்யப்பட்டு இதேபோல அறிவிப்பாக வெளியாகும்.

தொற்றுப்பரவல் குறைந்திருப்பது, அவசியமான மருத்துவக் கட்டமைப்புகள் தயார்நிலையில் இருப்பது, சிகிச்சை பெற்றுவரும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக அரசின் புதிய தளர்வுகள் அறிவிப்பாகி உள்ளன. இவற்றின் வாயிலாக பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வியும், வர்த்தக நடைமுறைகளும் முழுமையான இயல்புக்கு திரும்ப உள்ளன.

x