தேசிய சட்டக் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுக!


விருதாம்பிகை

‘தேசிய சட்டக் கல்லூரிகளில் ஓபிசி மற்றும் பட்டியலினத்தவர் இட ஒதுக்கீட்டை சரியாகப் பின்பற்ற வேண்டும்’ என மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியதாவது: “தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் சார்பில் இந்தியா முழுவதும் 23 சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 15 கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. இதுதவிர மேலும் 9 சட்டக் கல்லூரிகளில் பட்டியலின மாணவர்களுக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை.

இந்திய அரசியலமைப்புக்கு எதிரான இந்தச் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதை தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய போதும்கூட, இதுவரை அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

நம்முடைய பிரதமர் அவர்கள் “இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து நான் பிரதமராக வந்திருக்கிறேன், அவர்களின் வேதனையும் வலியும் எனக்கு புரியும்” என்று மேடைதோறும் பேசி வருவதால் மட்டும், இதர பிற்படுத்தப்பட்டோரின் நிலையை உயர்த்திவிட முடியாது. இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டால்தான், அதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதை பிரதமர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உடனடியாக பிரதமர் தலையிட்டு, தேசிய சட்டக் கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கு இட ஒதுக்கீட்டை சரியான முறையில் பின்பற்ற அவர் உத்தரவிட வேண்டும்” என்று விருதாம்பிகை கேட்டுக்கொண்டார்.

x