நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை: ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன் வலியுறுத்தல்


ஈரோட்டில் நடைபெற்ற ஒலி மாசுவால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை ஐஎம்ஏ தேசிய தலைவர் அசோகன் தொடங்கி வைத்தார்.

ஈரோடு: நீட் தேர்வு குளறுபடிகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பில் ஒலி மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பேரணி ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவ - மாணவியர் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஒலி மாசுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

ஈரோடு காலிங்கராயன் இல்லத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் தொடங்கி வைத்தார். ஈரோட்டின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் முடிவடைந்தது.

அங்கு, இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் அசோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நீட் தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு குளறுபடிகள் நடந்துள்ளதால், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். குளறுபடிக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினையில், 1,653 மாணவர்களுக்கு மட்டும், மீண்டும் நீட் தேர்வு வைப்பதால் மட்டுமே தீர்வு கிடைக்காது.

நீட் தேர்வு விவகாரத்தில், லட்சக்கணக்கான மாணவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் சரியான முறையில் நீதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறோம். நாடு முழுவதும், மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையேயான உறவு தகர்ந்து விட்டது. மருத்துவர்கள் சரியான முறையில் நடப்பதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ சங்கம் எடுத்துவருகிறது” என்றார்.

x