செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு


முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வுசெய்து புதிய நூல்களை வெளியிட்டார்.

கடந்த 2004-ம் ஆண்டு அக்.12 அன்று ஒன்றிய அரசால் தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. இச் செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு நிறுவனம் தொடங்கப்பட வேண்டுமென அப்போதைய முதல்வர் கருணாநிதியின் விருப்பத்தை நிறைவேற்ற, 2006-ம் ஆண்டு இந்திய மொழிகளுக்கான நடுவண் நிறுவனத்தின் அங்கமாகச் செம்மொழிக்கென்று ஒரு நிறுவனம் அமைக்கப்பட்டது. பின்னர் 2008?ல் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் எனத் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகச் சென்னையில் அமையப்பெற்றது.

2007-ம் ஆண்டு சென்னை, பெரும்பாக்கத்தில் 16.86 ஏக்கரில் தமிழக அரசு நிலம் ஒதுக்க, அங்கு ரூ.24.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிறுவனக் கட்டிடத்தை கடந்த 12-ம் தேதி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காணொலி வழியே திறந்து வைத்தார்.

இந்தக் கட்டிடத்தை முதல்வர் இன்று நேரில் பெரும்பாக்கம் சென்று அங்குள்ள நூலகத்தைப் பார்வையிட்டார். நிறுவனத்தின் ஆய்வுசார் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார். பின்னர், இந்நிறுவனம் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டிய ஆய்வுகள் குறித்தும் அறிவுறுத்தினார். மேலும் நிறுவனத்தின் 8 புதிய நூல்களை முதல்வர் வெளியிட, தொழில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக்கொண்டார்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழாராய்ச்சி மற்றும் பதிப்புகள் தவிர இந்தக் கழகத்தின் பணிகளில் மாணவர்கள் மற்றும் தமிழார்வலர்களை அடையும் வகையில் செயல்பாடுகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்மொழியின் பெருமைகளை வெகுமக்கள் அறியச்செய்ய தக்க ஊடக வழிகள் மற்றும் கருத்தரங்கங்கள் ஆகியவற்றை நடத்த முயற்சி செய்யவேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களும் இம்மையத்தின் பணிகளை அறியச் செய்ய, பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறையுடன் ஆலோசனை மேற்கொண்டு செயல்பட வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் விர்ச்சுவல் அகாடமி போன்ற மாநில அரசின் தமிழ்ப் பிரிவுகளுடன் இயன்றவரை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மேலும் 2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்களுக்கு வரும் ஜன.22 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ள விழாவில் விருதுகள் வழங்கப்படும்” என கூறினார்.

x