படித்தது ஆங்கிலம்... பிடித்தது தமிழ்!


கற்பிப்பதையும் தாண்டி சமூக விழிப்புணர்வுடன் செயல்படும் ஆசிரியர்கள் எப்போதும் தனித்துவத்துடன் மிளிர்வார்கள். மரம் நடுதலின் அவசியம், வாசிப்பின் மகத்துவம் போன்றவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் க. தங்கவேல் அவர்களில் ஒருவர்.

அரசுப் பள்ளி ஆசிரியரான தங்கவேல், தற்போது இணையத்தில் ஒரு சேனலைத் தொடங்கி திருக்குறள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் கூறுகையில், “திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலமும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை ஆங்கிலமும் பயின்றேன். தற்போது நாமக்கல் என். புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ளேன். இளங்கலை ஆங்கிலம் பயின்றபோது மாத இதழ் ஒன்று ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்’ எனும் தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றேன். எனக்கு ‘கவிஞர்’ என்ற பட்டமும் வழங்கினர். அதுபோல் திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்று முதல் பரிசு வெற்றேன். அதைத் தொடர்ந்து, கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

ஆசிரியப் பணியில் இணைந்தவுடன் கவிதை, கட்டுரை மட்டுமன்றி மரம் நடுவதன் அவசியம், அதனால் கிடைக்கும் பயன்கள், வாசிப்பின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். 500 மரக்கன்றுகளுக்கு மேலாக நடவு செய்து பராமரித்துவருகிறேன்” என்றார் தங்கவேல்.

மேலும், “திருக்குறள் மீதான ஆர்வம் கல்லூரி நாட்கள் முதலே உள்ளது. 1,330 குறளும் அதன் பொருளுடன் தெரியும். இதைத் தெரிந்து வைத்துக்கொள்வது நல்ல விஷயம்தான். எனினும், அதை மற்றவர்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு கொண்டுசேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் தற்போது இணையத்தில் சேனல் ஒன்றைத் தொடங்கி திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

விழிப்புணர்வு மட்டுமன்றி வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை என திருக்குறள் தொடர்பான தகவல்கள், திருக்குறள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளை அடையாளப்படுத்துவது போன்ற பணியில் ஈடுபட்டுள்ளேன். படித்தது ஆங்கிலம் என்றாலும் தமிழ் மீதுதான் தணியாத ஆர்வம்” என்கிறார் தங்கவேல்.

நாமக்கல் ஆசிரியரின் நல்முயற்சிகள் வெற்றி பெறட்டும்!

x