இன்னும் படிப்பேன் தம்பி...


குருமூர்த்தியைப் பாராட்டும் துணைவேந்தர் பார்த்தசாரதி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தின் மயிலாடுதுறை அலுவலகத்துக்கு வந்த அந்த முதியவரை அங்கிருந்தவர்கள் ஏதோ பேரன், பேத்திக்கு துணைக்கு வந்திருக்கிறார் என்றுதான் முதலில் நினைத்துக் கொண்டனர். ஆனால் அவர், தனது சேர்க்கைக்கான அனுமதிக் கடிதத்தை காட்டி, ‘எம்ஏ போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன்’ படிப்புக்கான புத்தகங்களைத் தருமாறு கேட்டபோது, அனைவரும் ஆச்சரியத்தில் அசந்துபோனார்கள்.

உடனடியாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பார்த்தசாரதிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் வந்து அந்த முதியவரை விசாரித்தபோது, அங்கே இன்னும் வியப்பு கூடிப்போனது. அந்த முதியவருக்கு இது 25-வது பட்டப்படிப்பாம். இதைக் கேட்டதும் அவருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டிய துணைவேந்தர், பாடப்புத்தகங்களையும் தன் கையாலேயே வழங்கி மகிழ்ந்து, வழியனுப்பி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்திக்கு தற்போது வயது 82. பியுசி படித்துவிட்டு தலைமைச் செயலகப் பணிக்குச் சென்றவர் பல அரசுத் துறைகளில் பணியாற்றி, இறுதியாக அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியராக ஓய்வுபெற்றார். பெயரிலேயே குரு இருப்பதாலோ என்னவோ, கல்வி மீது தீராத தாகம் கொண்டு இதுவரை 24 பட்டப் படிப்புகளை படித்து முடித்துவிட்டார் குருமூர்த்தி.

குருமூர்த்தி

விஷயத்தைக் கேட்டு வியப்பு விலகாமல் குருமூர்த்தியிடம் பேசினோம். “பியுசி படித்துவிட்டு காலேஜ் எல்லாம் போய் படிக்கவேண்டும் என்பது எனக்குள் இருந்த ஆசை. ஆனால் எனது தகப்பனார், ‘படித்ததுபோதும் வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாத்துப்பா’ என்று சொல்லிவிட்டார். அதனால் அப்போதைக்கு எனக்குள் இருந்த ஆசைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு, 1957-ல் அரசு வேலைக்குப் போனேன். தலைமைச் செயலகத்தில் ஸ்டெனோகிராபர் வேலைதான் முதல் உத்தியோகம். வேலைக்குப் போய் ஓரளவுக்கு குடும்ப பொருளாதார நிலைமை சரியானதும் படிப்பைத் தொடங்கினேன்.

1964–ல், டெல்லி பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம் படிப்பைத் தொடர்ந்தேன். பிஏ ஹானர்ஸ், பிஏ பாஸ் என்ற இரண்டு படிப்புகள் இருந்தது. அதில் பிஏ பாஸ் டிகிரியை படித்து முடித்தேன். டிகிரி படிக்கவேண்டும் என்ற ஆசை நிறைவேறினாலும் அதற்குப் பிறகும் மனது அடங்கவில்லை. எதாவது உயர்கல்வி படித்தால் நன்றாக இருக்கும் என்று கருதினேன்.

சென்னை சட்டக் கல்லூரியில் 1968-ல், மாலை நேரக்கல்லூரியில் பிஎல் தொடங்கினார்கள். அதில் சேர்ந்து படித்து பிஎல் பட்டம் பெற்றேன். அடுத்தது என்ன என்று யோசித்தபோது எம்ஏ படித்தால் தேவலையே என்று மனசு சொன்னது. அதனால், சென்னை விவேகானந்தா கல்லூரியில் மாலைநேர வகுப்பில் சேர்ந்து எம்ஏ எக்னாமிக்ஸ் முடித்தேன். அப்புறம், அப்படியே அடுத்தடுத்து ஒவ்வொரு படிப்பாக படித்து 1998-ல் ஓய்வு பெறும்போது 12 டிகிரிகள் வாங்கியிருந்தேன்.

இப்படியே படிப்பு, படிப்பு, வேலை என்று இருந்ததால் திருமணமே செய்துகொள்ளவில்லை. அதனால் ஓய்வுக்குப்பிறகு சொந்த கிராமமான கதிராமங்கலத்துக்கே வந்துவிட்டேன். இங்கே என்னுடைய தம்பி வீட்டில் அவர்களோடு இருக்கிறேன். வேலையிலிருந்து ஓய்வுபெற்றாலும் படிப்பிலிருந்து என்னால் ஓய்வுபெற முடியவில்லை. படிக்கும் ஆசை எனக்கு ஓய்வு கொடுக்கவில்லை. அதனால், திரும்பவும் திறந்தநிலைப் பல்கலைக் கழகங்கள், தொலைதூரக் கல்வி மையங்கள் வழியாக படித்துக்கொண்டே இருக்கிறேன்.

அப்படித்தான் ஓய்வுக்குப் பிறகும் 12 பட்டங்கள் வாங்கினேன். கடைசியாக, 2018-ல், ‘எம்ஏ விமன்ஸ் ஸ்டடிஸ்’ என்ற படிப்பை படித்து முடித்தேன். அதோடு போதும் என்று கடந்த 3 ஆண்டுகளாக எதிலும் சேராமல் இருந்தேன். ஆனாலும் படிக்காமல் ஓய்வாக இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்தி படிக்கலாம் என்று போனேன். ஆனால், அதில் எனக்குப் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. அறிவை வளர்த்துக்கொள்ளும் விதமாக அந்தப் படிப்பு இல்லை.

வெறுமனே மனப்பாடம் செய்து படித்து பரீட்சை எழுதும் அளவுக்குத்தான் அதன் கல்விமுறை இருந்தது. அதனால், ஆன்மிகத்தின் பக்கம் திரும்பினேன். அதிலும் நாட்டம் ஏற்படவில்லை. அதனால் திரும்பவும் பட்டப் படிப்புக்கே திரும்பிவிட்டேன். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் படித்து அதிக அளவு பட்டம் பெற்றிருப்பதால் திரும்பவும் அதிலேயே சேர்ந்துவிட்டேன். ஓய்வுக்குப் பிறகு இப்படி ஒவ்வொரு படிப்பாக தேடித்தேடிப் படிப்பதற்கு, மயிலாடுதுறையில் உள்ள ஆல்ஃபா கம்யூட்டர்ஸ் செந்தில்நாதன் எனக்கு ரொம்பவே உதவியா இருக்கார். அவரோட நட்பைப் பயன்படுத்தி, வாய்ப்புக் கிடைத்தால் இன்னமும் படிப்பேன் தம்பி” என்று நம்மையும் மிரட்டினார்.

“இதுவரை படித்ததிலேயே எந்தப் படிப்பு உங்களுக்கு மிகவும் பிடித்தமான படிப்பு?” என்று கேட்டபோது, “அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. ஒன்றைப் படித்தால் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். வேறொன்றைப் படித்தால் மற்றொன்றைத் தெரிந்துகொள்ளலாம். அப்படித்தான் எல்லாப் படிப்பையும் பார்க்கிறேன்” என்று சொன்ன குருமூர்த்தியிடம், “இந்தக் காலத்து மாணவர்களுக்கு என்ன அறிவுரை சொல்ல நினைக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

“இந்தக் காலத்துப் பிள்ளைகள் பாஸ் பண்ணினால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அது வாழ்க்கைக்குப் போதாது. தங்களது வாழ்க்கையை ஒவ்வொருவரும் தாங்கள்தான் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் தற்போது வந்திருக்கிறது. அதனால், 12-ம் வகுப்புப் படிக்கும்போதே எதிர்காலத்தில் என்னவாக ஆகவேண்டும் என்று முடிவெடுத்து விட வேண்டும். அடுத்த 5 வருடத்துக்குள் பொருளாதார நிலையை சரிப்படுத்திக்கொள்ள திட்டமிட வேண்டும். அதன் பிறகு, திட்டமிட்ட இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்க வேண்டும்.

எதையாவது ஜெயிக்க வேண்டும் என்றால் அதையே நினைத்துக் கொண்டு இருக்க வேண்டும்; அதைப்பற்றியே பேசவேண்டும். அதையே கனவு காண வேண்டும். அப்படி ஒரு தொலைநோக்கு திட்டம் இருந்தால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்ற நினைப்பே வரும். அதேபோல நேர மேலாண்மையை கற்றுக்கொள்ள வேண்டும். நேரத்தை மேலாண்மை செய்யத் தெரிந்துவிட்டால், மற்ற எல்லாவற்றையும் எளிதாக மேலாண்மை செய்துவிடலாம் என்பது ஆங்கிலப் பழமொழி. அதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

அதேபோல, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட வெற்றுக் கவர்ச்சிகளால் இன்றைய இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அதைவிடுத்து தங்களது இலக்கை நிர்ணயித்துக்கொண்டு அதைநோக்கிப் பயணப்பட வேண்டும்” என்று சொன்னார் அந்த 82 வயது இளைஞர்.

“பட்டம் வாங்குவது போல போட்டோ ஏதாவது வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டதற்கு, “அதெல்லாம் ஒன்றும் வைத்துக்கொள்ளவில்லை. போட்டோ எடுத்து வைத்துக் கொள்வதற்காகப் பட்டம் வாங்கவில்லை தம்பி” என்று சர்வசாதாரணமாகக் கடந்தார் குருசாமி.

82 வயதிலும், “இன்னும் படிக்க வேண்டும் தம்பி” என்று சொல்லும் குருசாமியிடம், இந்தக் காலத்து இளைஞர்கள் படித்துக்கொள்ள வேண்டிய பாடம் நிறையவே இருக்கின்றது!

x