அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் தடைபெறாது தொடர்வதற்காக மேலும் 2 கல்விச் சேனல்களை பள்ளிக்கல்வித் துறை கொண்டுவர இருக்கிறது.
கரோனா காரணமாக 3வது கல்வியாண்டாக பள்ளி மாணவர்களுக்கான நேரடி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை இணைய வழி கல்விக்கான ஏற்பாடுகளில், தங்கள் கல்விச் செயல்பாடுகளை உடனடியாக மடை மாற்றிவிட்டன. ஆனால் ஸ்மார்ட் போன், இணைய இணைப்பு, அதற்கான செலவினங்கள் ஆகியவை போதியளவில் கிடைக்கப்பெறாத கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளானார்கள்.
அவர்களுக்காக கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்பித்தல் பணிகள் தொடர ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக பள்ளி ஆசிரியர்கள் முதல் கல்லூரி பேராசிரியர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்ற வீடியோக்கள், கல்வி தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்பட்டன. இலவச தொலைக்காட்சி, அரசு கேபிள் ஆகியவற்றால் அனைத்து வீடுகளிலும் கல்வி தொலைக்காட்சியை காண்பது எளிதானது.
தற்போது மூன்றாம் அலையின் தொடக்க காலத்தில், பொதுத்தேர்வுக்கான 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஏனைய மாணவர்கள் ஆன்லைன் கல்வி அல்லது கல்வி தொலைக்காட்சிக்கு மாற வேண்டியதாயிற்று. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நடைமுறையில் வழங்கப்படும் பாட உள்ளடக்கத்தை அதிகரிக்கும் வகையிலும், அவற்றை ஹெச்டி தரத்தில் ஒளிபரப்பவும் ஏதுவாக, கூடுதல் சானல்களை கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளில் சேர்க்க முடிவாகி உள்ளது.
இதற்காக சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவில் புதிதாய் 2 சானல்கள் மற்றும் தரமான ஒளிபரப்புக்கான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. மேலும் கல்வித் தொலைக்காட்சியில் வழங்கப்படும், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கான, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளும் அதிகரிக்கப்பட உள்ளன.
தனியார் பள்ளிகளின் ஆன்லைன் கல்வியை ஈடு செய்யும் வகையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட கல்வி சேனல்கள், தற்போது தனியார் பள்ளி மாணவர்களும் விரும்பும் வகையிலான தரமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வாய்ப்பாகி உள்ளது.