மாணவர்களை ஈர்க்கும் சூரியகுமாரின் ‘குறள் அங்காடி’


நூல் வெளியீட்டு விழாவில்...

பள்ளி மாணவர்களிடம் எளிதாகத் திருக்குறளை கொண்டு சேர்க்கவும், அதை வாழ்க்கைக்கான நீதியாக அவர்கள் மனதில் ஆழமாகப் பதியவைக்கவும் வகை செய்யும் விதமாக, ‘குறள் அங்காடி’ என்ற நூலை இயற்றியிருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் சூரியகுமார்.

நூலை வெளியிடும் ஆளுநர்

திருவாரூர் மாவட்டம், தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியரான சூரியகுமார், எழுத்தாளர் வட்டத்தில் ஆதலையூர் சூரியகுமார் என அறியப்படுபவர். இவர் எழுதிய 'குறள் அங்காடி' நூல் கடந்த 11-ம் தேதி பாரதியார் பிறந்த நாளில் சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்நூலை வெளியிட்டு, பாராட்டிப் பேசியிருப்பதே அதன் சிறப்புக்குச் சான்று.

இதுவரை வந்துள்ள திருக்குறள் உரை நூல்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டது. திருக்குறளுக்குப் பொருள் சொல்லும் பொதுவான உரை நூல்கள் மட்டுமே இதுவரை எழுதப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் குறள் அங்காடியோ, மாணவர்களின் கற்றலை மட்டுமே மனதில் கொண்டு மாணவர்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வகுப்பினருக்கும் அதற்குரிய திருக்குறள்கள், ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒரு நீதிக்கதை, விதவிதமான பயிற்சிகள் என்று அந்த அதிகாரத்தை படித்து முடித்து அதிலுள்ள பயிற்சிகளை மேற்கொண்டாலே அதன் பொருள், அதன் கருத்துகள், அதில் சொல்லப்பட்டிருக்கும் நீதி என அனைத்தும் மாணவர்களின் மனதில் ஆழப்பதிந்துவிடும். அவர்களின் வாழ்நாள் முழுதும் அது மறக்கவே மறக்காது.

குறள் அங்காடி நூல்

உதாரணத்துக்கு, அன்புடைமை அதிகாரத்தில், ஒவ்வொரு குறளுக்கும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியான வார்த்தைகளில் பொருள் தரப்பட்டுள்ளது. அந்த அதிகாரம் முடிந்ததும் அந்த அதிகாரத்தை முழுவதுமாக உள்ளடக்கிய பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. நான்கு விடைகளில் நல்ல விடை எது? என்ற தலைப்பில் ஒரு வினா தரப்பட்டு, நான்கு விடைகள் தரப்பட்டுள்ளன. குறளில் ஒரு வரி தரப்பட்டு அதில் ஒரு சொல் இல்லாமல் உள்ளது. ‘ஒளிந்த சொல் நினைந்து சொல்’ என்று அதற்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது.

இதேபோல, காணாமல் போன எழுத்தைக் கண்டுபிடி, சின்னக் கேள்விக்கு என்ன பதில், விளக்கமாக விளக்குங்கள் என்று அனைத்துத் தரப்பு வினாக்களும் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான முடிவுகளும் தரப்பட்டுள்ளன. இப்படி பொருளோடும், வினாவோடும், அதற்கான விடையோடும் ஒவ்வொரு அதிகாரத்தையும் படித்து முடிக்கும்போது அதில் தேர்ந்தவர்களாகி விடுகிறார்கள் மாணவர்கள். வகுப்பு இடைவேளைகளில் கூட மாணவர்கள், ’’தாழ்’ என்றால் என்னடா?” என்று சக மாணவனிடம் கேட்கும்போது நூல் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அறிந்துகொள்ள முடிகிறது.

ஆதலையூர் சூரியகுமார்

“இப்படி ஒரு நூலை எழுத வேண்டும் என்ற சிந்தனை எப்படி வந்தது?” என்ற கேள்வியோடு ஆதலையூர் சூரியகுமாரை சந்தித்தோம்.

’’2016-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் திருக்குறளை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து தமிழக பள்ளிக் கல்வித் துறை 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகளில் நீதிக்கதைகளுடன் இணைத்து திருக்குறளை நடத்த வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது.

அந்த சமயத்தில் தான் முழுக்க முழுக்க மாணவர்களுக்கான திருக்குறள் நூலை ஏன் எழுதக்கூடாது என்று யோசித்தேன். அப்படித்தான் இந்த நூலை எழுத ஆரம்பித்தேன். வகுப்பு வாரியாக தனித்தனியாக எழுதப்பட்டுள்ளது. தற்போது மொத்தமாக தொகுத்தும் 700 பக்க அளவில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் அதிகாரம் வாரியாக ஒவ்வொரு குறளுக்கும் பொருள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து மாணவர்கள் எளிதாக அணுகும் வண்ணம் எளிய பயிற்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முத்தாய்ப்பாக ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒரு நீதிக் கதை சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை 2017–லேயே எழுதிவிட்டேன். முதலில் எங்கள் பள்ளி மாணவர்களிடம் சோதித்துப் பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது. அதில் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு பிறகு சிறிது மாற்றங்கள் செய்தேன்.

10 ம் வகுப்புக்குரிய தனி நூலாக ...

அதன்பிறகு சக ஆசிரியர்கள் மூலமாக மற்ற பள்ளிகளிலும் இதைப் பயன்படுத்தி திருக்குறளை பயிற்றுவித்தபோது அது மாணவர்களிடம் கூடுதல் ஆர்வத்தையும், கற்றல் மாற்றத்தையும் ஏற்படுத்தியதாக ஆசிரியர்கள் சொன்னார்கள். எனது இந்த முயற்சியை சென்னை உயர் நீதிமன்றமும் பாராட்டியிருக்கிறது. என்ன கேட்டாலும் அதற்கு தீர்வை திருக்குறள் சொல்கிறது. அந்த அடிப்படையிலேயே இந்த நூலுக்கு ‘குறள் அங்காடி’ என்ற பெயரைச் சூட்டினேன். மாணவர்களிடம் மட்டுமல்லாது இதை பொதுவெளியில் வெளியிட்டால் அனைவருக்குமே பலனாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் தற்போது தொகுப்பு நூலை வெளியிட்டிருக்கிறேன்.

திருக்குறளின் மேன்மை, அதன் உலகளாவிய பொதுத் தன்மை, ஆகியவற்றின் அடிப்படையிலேயே திருக்குறள், சான்றோர் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நான் எழுதிய 'குறள் அங்காடி' நூலை தமிழக ஆளுநர் வெளியிட்டிருப்பது திருக்குறளுக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பெருமையாகும். குறள் சொல்லும் நீதியின் குரல் எங்கும் ஒலிக்க வேண்டும் அதற்காகவே இந்த முயற்சி” என்றார் சூரியகுமார்.

மாணவர்களுடன் நூலாசிரியர்

தொடர்ந்து பேசிய சூரியகுமார், இந்தத் திருக்குறள் நன்னெறி, மாணவர்கள் மத்தியில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

" ‘இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயஞ் செய்து விடல்’

என்ற திருக்குறள் என் வகுப்பறையில் மிகவும் பிரசித்தமானது. மாணவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திருக்குறள் இது. மாணவர்களுக்குள் ஏற்படும் சண்டைகள் சிறுபொழுதுகூட நிலைக்காது. குறள்வழி நின்று மோதலை மறந்து ஒன்றாகிவிடுவார்கள்.

மழைக்காலம் என்றால் மாணவர்களுக்கு குறளே கொண்டாட்டமாகிவிடும். 'வான் சிறப்பு' அதிகாரத்தின் 10 திருக்குறளையும் மனப்பாடமாக ஒப்புவிப்பார்கள். மழையின் சிறப்பையும் மழைநீரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பற்றி வகுப்பறையில் விவாதம் நடக்கும். அதிலிருந்து கேள்விகளை ஒரு பிரிவு மாணவர்கள் கேட்க மறுபிரிவு மாணவர்கள் பதிலளிப்பார்கள்.

வகுப்பு வாரியாக..

இப்படி நட்பு, நட்பாராய்தல், விருந்தோம்பல் போன்ற அதிகாரங்கள் நடத்தும்போது, அதில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளோடு இணைத்துக் கூறினால், அவர்களும் இதற்கு தொடர்புடைய தங்கள் அனுபவங்களைக் கூறுகிறார்கள். அவர்களின் வாழ்க்கையோடு திருக்குறள் கலந்திருப்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதை நான் அறிய முடிகிறது. அவர்கள் அதன்வழி நடக்க ஆரம்பிக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

என்னைப் பொறுத்தவரை மாணவர்களை 1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்வதை விட, அறிந்து வைத்திருப்பதே சிறந்தது என்று கருதுகிறேன். அதையும்விட அவர்களின் மனதுக்குப் பிடித்த ஒரே ஒரு திருக்குறளின்படி அவர்கள் வாழ்ந்து காட்டவேண்டும். அப்படி வாழ நினைத்தால், அதுவே இந்நூலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக இருக்கும்” என்றார் சூரியகுமார்.

அரசுப் பள்ளி ஆசிரியர் சூரியகுமாரின் இந்த நல்முயற்சி, நம் மாணவர் சமுதாயத்துக்கு நற்பலன்களைக் குவிக்கட்டும்.

x