தள்ளிப்போகும் பள்ளித் தேர்வுகள்: அவகாசம் போதுமா?


10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இதனையடுத்து, தாமதமாக தொடங்கிய பள்ளிச் செயல்பாடுகள், ஒமைக்ரான் அச்சுறுத்தல் ஆகியவற்றின் மத்தியில் இந்த அவகாசம் மாணவர்களுக்கு போதுமா என்ற ஐயம் எழுந்துள்ளது.

ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளில் முடங்கிக்கிடந்து, பின்னர் தாமதமாக பள்ளிகளுக்கு திரும்பியிருக்கும் மாணவர்களுக்காக விரைவாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களின் பாடச் சுமையை குறைக்கும் வகையில் கணிசமான பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

வழக்கமாக மார்ச் முதல் வாரத்தில் பிளஸ் 2 மற்றும் மார்ச் மூன்றாம் வாரத்தில் 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெறும். இம்முறை பள்ளிகளின் தாமத திறப்பு காரணமாக சுமார் 50 நாட்களுக்கு தேர்வு அட்டவணை தள்ளிப் போயிருக்கிறது. அதே போல காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவற்றுக்கு பதிலாக 2 திருப்புதல் தேர்வுகளை நடத்த தேர்வுத் துறை திட்டமிட்டிருக்கிறது. ஜனவரி மற்றும் மார்ச் மாதங்கள் இந்த திருப்புதல் தேர்வுகள் நடைபெற உள்ளன. மாணவர்களின் அடைவினை அறிந்துகொள்ளவும், பொதுத்தேர்வுக்கான தயாரிப்பினை சீராக்கிக்கொள்ளவும் அவர்களுக்கு இந்த தேர்வுகள் உதவும் என்று சொல்லப்படுகின்றன.

அடுத்தபடியாக 30 முதல் 45 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் கடினமும், நீளமும் கொண்ட பாடப்பகுதிகளுக்கு முக்கியத்துவம் தந்து, குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகளுக்கான பாடப்பகுதிகளும் இதேபோல குறைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் மாணவர்கள் சுமையின்றி தங்கள் அடைவினை எட்ட முடியும் என்று கல்வித்துறை கருதுகிறது. ஆசிரியர்களைப் பொறுத்தவரை, கரோனா தாமதத்திலான பள்ளித்திறப்பு மற்றும் கல்விச் செயல்பாடுகளை இந்த ஏற்பாடுகள் நேர் செய்யும் என்று கருதுகிறார்கள்.

ஆனால் மாணவர்களைப் பொறுத்தவரை திணறல் சூழலே தென்படுகிறது. முழுதாய் ஒரு கல்வியாண்டினை தொலைத்துவிட்டு பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், கற்றலில் வழக்கம்போல ஈடுபடுவதில் தடுமாறி வருகிறார்கள். மேலும், கடந்த 2 வருடங்களாக பழகிப்போன பொதுத்தேர்வு ரத்து தொடர்பான அறிவிப்புகள் மீதும் மாணவர்களின் நப்பாசை தொடர்கிறது. ஒமைக்ரான் பரவலை அடுத்து பெற்றோர் மத்தியிலும் அவை தொடர்பான உரையாடல்கள் அதிகரித்துள்ளன. பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பானால், அவற்றுக்கான முடிவுகளை தீர்மானிக்கும் மதிப்பெண்கள் தேவைக்காகவே திருப்புதல் தேர்வுகள் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் கருதுகிறார்கள்.

ஏனைய எவற்றையும்விட, மூன்றாம் அலையை நோக்கி அதிகரிக்கும் கரோனா பரவல் மற்றும் ஒமைக்ரான் நெருக்கடி ஆகியவை பள்ளிச் செயல்பாடுகளை பாதிக்க உள்ளன. இந்தியாவில் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பெருந்தொற்றுப் பரவல் உச்சம் தொடும் என்ற மருத்துவ அறிவியலாளர்களின் கணிப்பு உண்மையானால், மற்றுமொரு ஆண்டாக மாணவர்களின் அடைவுத்திறனை அறிவது கேள்விக்குள்ளாகும். ஆனால் நடப்பு கல்வியாண்டிலும் பொதுத்தேர்வு ரத்துக்கு, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி தென்படுகிறது.

காரணம் தற்போது பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்கள், கரோனா காரணமாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சியானவராக இருக்கிறார்கள். இப்படி பள்ளிக்கல்வியின் பிரதான 2 பொதுத்தேர்வுகளும் கரோனா காரணமாக ரத்தாவது, அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கவும் கூடும். மேலும் தங்களுடைய அடைவினை முழுவதுமாக அறிந்துகொள்ள வாய்ப்பில்லாததும், மாணவர்கள் தங்களுக்கான உயர்கல்வி ஆர்வத்தை தீர்மானிப்பதிலும் தடுமாற்றத்தை உருவாக்கலாம் என்கிறார்கள்.

x