ஆன்லைன் வகுப்புக்கும் தடை: அரையாண்டு விடுமுறையை முழுமையாக்கிய அரசு உத்தரவு


அரையாண்டு விடுமுறையில் ஆன்லைன் வகுப்பு நடத்தும் தனியார் பள்ளிகள் மீது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்கும்படி மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் டிச.25 முதல் ஜன.2 வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், அரசின் இந்த உத்தரவை மீறி தமிழகத்தின் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சனி, ஞாயிறு விடுமுறைக்கு அப்பால் திங்கள்(டிச.27) முதல் இயங்குவதாக அறிவித்தன. குறிப்பாக இதர வகுப்புகளை விட அரசுப் பொதுத்தேர்வுக்கான, 10 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் வழக்கம்போல தங்கள் செயல்பாடுகளில் திங்களன்று ஈடுபட்டன.

தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை அவற்றின் தேர்வு முடிவுகளே, அந்தப் பள்ளிகளின் இருப்பைத் தீர்மானிக்கின்றன. களத்திலுள்ள போட்டி தனியார் பள்ளிகள் மத்தியில் தனித்து தெரியவும், பெற்றோர்களை ஈர்க்கவும் பள்ளித் தேர்ச்சி மற்றும் முதன்மை மதிப்பெண்களையே முதலீடாக இவை கொண்டுள்ளன. மேலும், கரோனா காரணமாக குறைந்துள்ள வேலை நாட்களின் பற்றாக்குறையைச் சமாளிக்க, அவை திணறி வந்தன. அவற்றுக்காக அரையாண்டு விடுமுறையை அரசு அறிவித்திருந்தபோதும், அவை மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரவழைத்திருந்தன.

அரசின் விடுமுறை அறிவிப்பை நம்பி வெளியூர் சென்றிருந்த குடும்பத்தினர், இதனால் சிரமத்துக்கு ஆளானார்கள். தனியார் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மெட்ரிக் பள்ளி இயக்குநரகத்துக்குப் புகார்கள் குவிந்தன. இதையடுத்து தனியார் பள்ளிகளின் திறப்புக்கு எதிராக, திங்களன்றே மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் சுற்றறிக்கை விடுத்தது.

அதன்படி மாவட்டந்தோறும் அரையாண்டு விடுமுறையில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகள் குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவானது. இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகள் தயாராகின. ஆனால், இந்த விடுமுறை இடைவெளியில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தடை விதித்தது.

மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை என்பது, முழுமையாக விடுமுறையாகவே இருக்கும்படி அரசு கவனம் செலுத்துகிறது. ஒன்றரை ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நேரடிப் பள்ளிச் செயல்பாடுகள் தொடங்கிய நிலையில், அந்த இடைவெளியை நிரவும் வகையிலான பாடங்களை மட்டுமே நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. மாணவர் பயிலும் வகுப்புக்கான பாடங்களுக்குப் பதிலாக, கரோனா விடுமுறையில் தவறவிட்ட பாடங்களின் இழப்பை நேர்செய்யும் வகையில் இந்த பிரிட்ஜ் கோர்ஸ் பாடங்கள் சில வாரங்களுக்கு பயிற்றுவிக்க உத்தரவாயின. அப்போதுதான், அடுத்தபடியாக தற்போதைய கல்வி ஆண்டின் பாடங்களை மாணவர்கள் புரிந்துகொள்ளவும், கற்றல் பணிகளை எவ்வித அழுத்தமும் இன்றி மேற்கொள்ளவும் முடியும்.

அரசுப் பள்ளிகள் இந்த உத்தரவை முறையாகச் செயல்படுத்த, பரவலான தனியார் பள்ளிகள் நேரடியாக கல்வி ஆண்டுக்கான பாடங்களை நடத்த ஆரம்பித்தன. இதனால் மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானார்கள். அதிலும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழக்கமாய் டிசம்பர் இறுதிக்குள் பாடங்கள் முழுதுமாய் முடிக்கப்பட்டு, ஜனவரி முதல் திருப்புதல் தேர்வுகள் மட்டுமே நடைபெறும். கிடைத்த ஓரிரு மாத அவகாசத்தில், 7 மாத கற்றல் செயல்பாடுகள் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டன. இதனால் மாணவர்களின் இயல்பான கற்றல் பாதிக்கப்பட்டதுடன், அழுத்தத்துக்கும் ஆளானார்கள். இதற்கிடையே அரசு அறிவித்த அரையாண்டு விடுமுறை இந்த மாணவர்களுக்கு சற்றே இளைப்பாறல் தந்தது. ஆனால், அந்த விடுமுறையிலும் செயல்படுவதென தனியார் பள்ளிகள் முடிவெடுத்ததில், மாணவ மாணவியர் ஏமாற்றத்துக்கு ஆளானார்கள்.

அரசு உத்தரவை மீறிய பள்ளிகளை மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் கண்டித்ததை அடுத்து, தற்போது அந்தப் பள்ளிகள் விடுமுறையை உறுதி செய்துள்ளன. மேலும் இந்த விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், பொதி அளவுக்கு வீட்டுப் பாடங்களை தந்ததுடன், அரைமனதாய் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவ மாணவியரின் மகிழ்ச்சியும், இளைப்பாறலும் ஒருவழியாக உறுதி செய்யப்பட்டுள்ளன.

x