திராவிடப் பல்கலைக்கழகத்தில் மூடப்படும் அபாயத்தில் தமிழ்த்துறை!


திராவிடப் பல்கலைக் கழகம்

‘வாராது வந்த மாமணியை காப்போம் என்ற தலைப்பில்’ ஆந்திர மாநிலம் குப்பம் என்ற இடத்தில் உள்ள திராவிடப் பல்கலைக்கழக்தின் தமிழ் துறையானது மாணவர்கள் இல்லாததால் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக ஒரு தகவல் சமூகவலைதளங்களில் வேகமாக சுற்றிவருகிறது. தகவல் உண்மைதானா என இதுபற்றி விசாரித்தால் தகவல் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் இருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் குப்பம் பகுதி தமிழகத்தின் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. கிருஷ்ணகிரியிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரம்தான். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொகுதி இது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக இருந்த வி.ஐ.சுப்ரமணியன் முயற்சியால் 1997-ம் ஆண்டு இங்கு திராவிடப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. 2005 முதல் இங்கே தமிழ்த்துறை செயல்பட்டு வருகிறது. தமிழ்த்துறையில் எம்.ஏ, எம்.ஃபில், பி.ஹெச்டி., ஆகிய பிரிவுகள் இருக்கின்றன. ஆறு பேராசிரியர்கள் பணியிடங்கள் இருக்கின்றன. அதில் இருவர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் தற்போது நான்குபேர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள்.

இங்கு படிக்க 30 மாணவர்களுக்கு அனுமதியளிக்கப் பட்டிருக்கிறது. இவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி, உணவு உட்பட படிப்புச்செலவு முழுவதும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஏற்றுக் கொள்கிறது. ஒரு பைசா செலவில்லாமல் படித்து முடித்துவிட்டு வெளியே வந்துவிடலாம். ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து, ஆறு என்கிற அளவிலேயே மாணவர்கள் சேர்கிறார்கள். கடந்த ஆண்டு மூவர் மட்டுமே சேர்ந்தனர். அதனால் பல்கலைக் கழகத்தை ஆய்வுசெய்த ஆந்திர அரசு, போதுமான மாணவர்கள் இல்லாத பட்சத்தில் தமிழ்துறையை மூடிவிடலாம் என வாய்மொழியாக தெரிவித்திருக்கிறது.

மாரியப்பன்

இதுகுறித்து திராவிடப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப்பேராசிரியர் பொருநை க. மாரியப்பனிடம் பேசினோம். ‘’ இது ஆந்திராவில் இருக்கிறது என்பதால் ஏதோ வெகு தொலைவில் இருப்பதாக தமிழக மாணவர்கள் நினைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து சேரமறுக்கிறார்கள். எங்களால் இதுகுறித்து போதுமான விளம்பரங்கள் செய்ய இயலவில்லை. பல்கலைக்கழகம் சார்பில் ஆந்திர மாநிலத்தில் மட்டும் பத்திரிகையில் சேர்க்கை அறிவிப்பு விளம்பரம் கொடுக்கப்படுகிறது. அது தமிழ்நாட்டில் யாருக்கும் எட்டுவதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பகுதிகளான கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட கிராமங்களுக்குச் சென்று இந்த பல்கலைக்கழக குறித்து மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லியும்கூட அதனால் பயனில்லை. முழுநேர வகுப்புக்கள் மூலம் அடிப்படை தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றையும்கூட இணைத்துக் கற்றுக் கொடுக்கிறோம். எதிர்காலத்துக்கு பயன்படும் வகையிலான கல்விமுறை உள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதிவரையிலும் தான் சேர்க்கைக்கான தேதி இருந்தது. தற்போது அது ஜனவரி 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அரசு செலவில் தங்கி, தமிழ்படிக்க இது பொன்னான வாய்ப்பு. இதனை தமிழக மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த ஆண்டு குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது திராவிட பல்கலைக் கழகத்தில் சேர்ந்து தமிழ் படிக்க முன்வந்தால் தான் தமிழ்த்துறை உயிரோடு இருக்கும்” என்று வருத்ததோடு சொன்னார் அவர்.

தமிழ், தமிழர் என்று உரக்கச்சொல்லும் தலைவர்களும், தமிழக அரசும் விரைவாகச் செயல்பட்டு ஆந்திர மாநிலத்தின் திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கை.

x