மாணவர்கள் உருவாக்கிய கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பம்


மணல் சிற்பத்தை உருவாக்கிய மாணவர்களுடன் ஆசிரியர்கள்

டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இன்று கடலூர் சிங்காரத்தோப்பு கடற்கரையில் பள்ளி மாணவர்கள் முயற்சியால், கிறிஸ்துமஸ் தாத்தா உருவம் மணல் சிற்பமாக உருவாக்கப்பட்டது.

தலைமையாசிரியர் மற்றும் ஓவிய ஆசிரியர்

உலகெங்கும் கிறிஸ்துமஸ் திருவிழா 25-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவ மக்கள் ஒருவார காலமாகவே பண்டிகைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இயேசு பிறப்பை அறிவிக்கும் நட்சத்திரங்களை தங்கள் இல்லங்களிலும், தேவாலயங்களிலும் ஜொலிக்கவைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடலூர் சிங்காரத்தோப்பு கடற்கரையில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும்விதமாக, கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தைப் பள்ளி மாணவர்கள் மணல் சிற்பமாக வடித்து வைத்திருந்தனர்.

தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயர் திரு அறிவர் ஜே சார்ஜ் ஸ்டீபன் வழிகாட்டுதலின்படி, கடலூர் தூய தாவீது மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை என்.கங்காதேவி தலைமையில், ஓவிய ஆசிரியர் சாமுவேல் செல்லதுரை மற்றும் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து, சுமார் 2 மணி நேர முயற்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பத்தை உருவாக்கினர்.

இந்த மணல் சிற்பத்தை கடற்கரைக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். மாணவர்களையும் மனதாரப் பாராட்டினர். கிறிஸ்துமஸ் தாத்தா மணல் சிற்பத்தை உருவாக்கிய மாணவ மாணவிகளை தலைமை ஆசிரியர் என். கங்காதேவி பாராட்டி, சான்றிதழ்களையும் வழங்கினார்.

x