67% மாணவர்களுக்கு கணக்கில் பிணக்கு: தேசிய கணித தினத்தில் தகவல்


இந்தியாவில் 67 சதவீத மாணவர்கள் கணக்குப் பாடத்தில் கற்றல் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருவதாக, ஆய்வு ஒன்றின் முடிவு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் பிறந்து உலகின் மிகச்சிறந்த கணித மேதையாக புகழ் பெற்றவர் சீனிவாச ராமானுஜம். மாணவர், இளையோர் மத்தியில் கணிதம் மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்காக அவரது பிறந்தநாளான டிசம்பர் 22, தேசிய கணித நாளாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. சீனிவாச ராமானுஜத்தின் நினைவைப் போற்றுவதுடன், மாணவர் மத்தியில் கணிதம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இன்றைய தேசிய கணித தினத்தை முன்னிட்டு, இந்திய மாணவர்களின் கணிதப் பாடம் சார்ந்த கற்றல்-கற்பித்தல் தொடர்பான ஆய்வு ஒன்றின் முடிவு வெளியாகி உள்ளது. பெருந்தொற்று காலத்தில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் படித்த மாணவர்கள் மத்தியில், ஆன்லைன் கல்வி வழங்கும் தனியார் பயிற்சி நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறது.

ஆன்லைன் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், ஆன்லைனை விட நேரடி வகுப்பு கற்றலே சிறந்தது எனத் தெரிய வருகிறது. ஆய்வின் குறிப்பிட்ட 2 முடிவுகள் முக்கியமானவை.

இதன்படி, சுமார் 67 சதவீத மாணவர்கள் கணிதப் பாடத்தை கற்பதில் கற்றல் சார்ந்த சங்கடங்களை அதிகம் சந்தித்து வருகின்றனர். கணிதம் என்பதைக் கடினமாகவும், ஆசிரியர் உதவியின்றி வீட்டிலேயே படிப்பதில் கணிதப் பாடம் சிரமம் தந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் கல்வியைவிட நேரடி வகுப்புக் கல்வியின் அவசியத்தை இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஆனபோதும், 76 சதவீத மாணவர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் படிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் கற்றலில் சிரமங்கள் இருந்தபோதும், பிரத்யேகமாக ஆன்லைன் வாயிலாகவே தனிப்பயிற்சி முதல் சிறப்பு செயலிகள் வரை சந்தையில் கிடைப்பதைப் பணம் செலுத்திப் படிக்கின்றனர். ஆனால், இந்த வசதியற்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை விட நேரடி கல்வியே உதவக்கூடியது என்ற உண்மையும் இதிலிருந்து தெரிய வருகிறது.

சீனிவாச ராமானுஜம்

சீனிவாச ராமானுஜத்தின் 134-வது பிறந்த நாளான இன்று, அவரது நினைவைப் போற்றும் வகையில் மாணவர் மத்தியில் கணித பாடத்தின் மீதான ஆர்வத்தை விதைக்கும் ஏற்பாடுகள் நாடு முழுதும் நடைபெற்று வருகின்றன. உலகின் மிகச் சிறந்த கணித மேதையாக போற்றப்படும் ராமனுஜமும், இளம்பிராயத்தில் கற்றலில் தடுமாற்றங்களைக் கொண்டிருந்தவர்தான். அவர் பிறந்தது முதல் சம வயதினரைப்போல சரியாகப் பேசாதது கண்டு, பெற்றோர் கவலையடைந்திருந்தனர். பள்ளியில் சேர்ந்த பிறகே அவரது பேச்சு துரிதமானது.

அதேபோல கணிதத்தில் ஆர்வமாக இருந்தபோதும், இதர பாடங்களைப் படிப்பதில் ராமானுஜமும் தடுமாற்றங்களை சந்தித்து மீண்டிருக்கிறார். எனவே, கற்கும் வயதில் கற்றல் சார்ந்த தடுமாற்றங்கள் இயல்பானவையே. கற்றல் செயல்பாடுகள் ஆர்வத்தோடும், முழுமூச்சாகவும் தொடரும்போது மாணவருள் மறைந்திருக்கும் திறமைகள் தாமாக வெளிப்படும். தேசிய கணித தினத்தன்று, கணிதமேதை ராமானுஜம் வாயிலாக இந்த உண்மையையும் நாம் அறிந்துகொள்வோம்.

x