இல்லம் தேடிக் கல்வி நெறிமுறைகளை மீறியதால் கலைப்பயணக் குழு நீக்கம்


திருச்சி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி பயணக் குழுவில் உள்ள ஒருவர் நெறிமுறைகளை மீறியதால், கலைப்பணிக் குழு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி, இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும்பொருட்டு, ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்தபிறகு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம்வரை மாணவர்களின் கற்றல்திறனை மேம்படுத்த ‘இல்லம் தேடிக் கல்வி திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இல்லம் தேடிக் கல்வி திட்டமானது திருச்சி உட்பட 12 மாவட்டங்களில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட முடிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து திருச்சியில் தன்னார்வலர்களுக்கு அதற்கான பயிற்சி வகுப்புகள் நவ.2-ம் தேதி நடத்தப்பட்டன.

அதன்பிறகு, திருச்சி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழுக்கள் முழுவீச்சில் ஈடுபட்டுவந்தனர். இதில் சர்மிளா சங்கர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி மேல்சட்டை அணிந்தவாறு அரசு மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிக்கொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் காட்சி அங்குள்ள சமூக ஆர்வலர்களால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு பரபரப்பானது.

இதையடுத்து, கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால், அக்குழு மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப்பயணக் குழு முழுமையாக விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் இருந்து நீக்கப்படுவதாக திருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

x