மாணவனை ஆசானாக்கினால் கற்றல் இடைவெளி குறையும்!


கல்வி வழிகாட்டிகளுடன் ‘இன்வால்வ்’ இளைஞர்கள்

எதிலெதிலோ இந்தியாவின் நீண்ட நெடிய பாரம்பரியம் குறித்து பெருமை பேசுபவர்கள், உயர்கல்வியில் நாடு கொண்டிருக்கும் பாரம்பரியம் குறித்துப் பேசுவதில்லை. உலகின் மிகவும் பழமையான இன்றுவரை அழியாமல் செயலாற்றிவருவது, இத்தாலியின் போலோக்னா (Bologna) பல்கலைக்கழகம். இது 1088-ல் நிறுவப்பட்டது.

அதற்கும் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியாவில் பவுத்த அமைப்பினால் நாளந்தா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. நாளந்தாவுக்கும் முன்பே தட்சசீலம் உருவாக்கப்பட்டுவிட்டது. இருப்பினும் தட்சசீலத்தில் பவுத்தமும் அதை ஒட்டிய கல்வி மட்டுமே போதிக்கப்பட்டன. நாளந்தாவில் மதம், வரலாறு, சட்டம், மொழி, மருத்துவம், பொது சுகாதாரம், கட்டிடக் கலை, சிற்பக் கலை, வானியல், கணிதம் ஆகிய பல்வேறு கல்விப் புலங்கள் கற்பிக்கப்பட்டது. அங்குப் படித்த முன்னாள் சீன மாணவர்களின் குறிப்புகள் வழி தெரியவந்துள்ளது.

அதிலும் 7-ம் நூற்றாண்டிலேயே உறைவிடப் பல்கலைக்கழகமாக நாளந்தா செயல்பட்டதால், இந்திய மாணவர்கள் மட்டுமின்றி சீனா, கொரியா, ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த பத்தாயிரம் மாணவர்களுக்குத் தங்க இடமும் உயர்தரக் கல்வியும் வழங்கப்பட்டதாக வரலாறு பேசுகிறது. உலகின் முதல் ஆசிரியராக அறியப்படும் சீனாவைச் சேர்ந்த யி ஜிங், நாளந்தாவில் மருத்துவம் பயின்றவராம். இத்தனை பெருமைக்குரிய பாரம்பரியம் இன்றுவரை போலோக்னா பல்கலைக்கழகம்போல நீடிக்க வரலாறு அனுமதிக்கவில்லை.

மறைந்துபோன பெருமிதம்!

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சிதைக்கப்பட்ட நாளந்தா அண்மையில் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கு இடையில் இத்தனை காலம் இந்தியா உயர்கல்வியில் என்ன சாதித்துவிட்டது? உயர்கல்வி போகட்டும். கல்வியில் உலகுக்கே கலங்கரை விளக்கமாக விளங்கிய தேசத்தில், இன்று நம் கண்முன்னே பூதாகரமாக மாறியிருக்கும் சிக்கல் பள்ளி மாணவர்கள் மத்தியில் நீக்கமற நிறைந்திருக்கும் ’கற்றல் இடைவெளி’.

இந்தச் சொல்லைக் கேட்டதும் கரோனா காலம் ஏற்படுத்திய நெருக்கடிகளில் ஒன்று, தற்காலிகமான சிக்கல் என்று கடந்து சென்றிடலாகாது. ஏனெனில் அசர், ப்ரோப், கார்ட்-நெக் விலேஜ், விப்ரோ-இஐ உள்ளிட்ட கல்வி ஆய்வு நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நடத்தி வரும் ஆய்வில் மொழி அறிவில், அடிப்படைக் கணிதத் திறனில் நமது குழந்தைகள் மிகவும் பின்தங்கியிருப்பதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவருகிறது.

இத்தகைய ஆய்வை நம்பத் தயாராக இல்லை என்பவர்களுக்கு, இந்திய மனித வள மேம்பாட்டு ஆய்வும் இதை உறுதிப்படுத்துகிறது. ’அரசுப் பள்ளிகளின் தோல்வி இது’ என்பவர்கள், அமர்த்திய சென் மற்றும் ஜீன் ட்ரீஸ் இணைந்து எழுதிய ‘Uncertain Glory’ புத்தகத்தை வாசிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பெருவாரியான தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் தங்களது வகுப்புக்குரிய பாட அறிவுடன் இல்லை என்பதை, இந்த புத்தகம் தரவுகளின் அடிப்படையில் அலசி ஆராய்ந்துள்ளது. இத்தனை பெரிய சிக்கலைக் களைய, ‘இனி செய்வதற்கு ஒன்றுமில்லை’ என்பீர்களானால், அதுவே பொறுப்புணர்வை மீட்பதற்கு எதிரான அழிவுச்சிந்தனை என்றும் கவலையுடன் அமர்த்திய சென் எழுதியுள்ளார்.

அஸ்வினி

ஐடி வேலையை உதறிய தருணம்!

இந்நிலையில் இந்தியப் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளிக்குத் தீர்வு காண, இளைஞர் அணி ஒன்று முயன்றுவருகிறது. சென்னையிலும் பெங்களூருவிலும் இயங்கிவரும் ‘இன்வால்வ் லேர்னிங் சொல்யூஷன்ஸ்’ அறக்கட்டளை (Involve Learning Solutions Foundation) என்ற கல்விக்கான புத்தொழில் நிறுவனத்தை 2016-ல் சென்னையில் பி.இ படித்துவந்த மாணவர்கள் சிலர் கூடித் தொடங்கினர். கல்லூரி நேரம் போக, தனியார் பள்ளி ஒன்றின் பிளஸ் 2 மாணவர்களிடம் காணப்பட்ட கற்றல் இடைவெளியைப் போக்கக் கணிதப் பாடத்தையும் ஆங்கில மொழிப் பாடத்தையும் கற்பித்தலில் இந்த முயற்சி தொடங்கியுள்ளது. பிறகு சென்னை, பெங்களூருவில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு தங்களது முயற்சியை விரிவுபடுத்தி உள்ளனர். இவ்வாறு, கடந்த ஐந்தாாண்டுகளில் 6,500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கற்றல் இடைவெளியைப் போக்க உதவியுள்ளனர்.

பதினோறு இளைஞர்கள் கொண்ட இந்நிறுவனத்தில், சென்னை மாணவர்களை வளர்த்தெடுக்கும் பொறுப்பை பி.இ முடித்த அஸ்வினி, நரம்பியலில் முனைவர் பட்டம் பெற்ற பிரதீபா, பி.பி.ஏ முடித்த சிந்து ஆகியோர் ஏற்றுள்ளனர். அதிலும் சிறப்புப் பாடத்திட்டத்தை வகுப்பது, கரோனா காலத்துக்குப் பின்பு மாணவர்களிடம் காணப்படும் நடத்தைக் கோளாறுகளைக் களைய நீதிநெறிப் பாடத்திட்டத்தை வடிவமைப்பது, பெரிய வகுப்பு மாணவர்கள் சிறிய வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கும் ’பியர் டீச்சிங்’ (Peer Teaching) திட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றில் துடிப்புடன் செயலாற்றிவரும் அஸ்வினியுடன் இது குறித்து உரையாடினோம்.

நம் கையில் தீர்வு உள்ளதே

தனியார் பள்ளிகளும் ஒசத்தி இல்லை!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியலில் பி.இ படித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே, தன்னார்வலராக பள்ளி மாணவர்களுக்கு உதவியிருக்கிறார் அஸ்வினி. பட்டம் பெற்றதும் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்திருக்கிறார். ஆனால், அந்தப் பணி மனநிறைவை அளிக்கவில்லை. கல்லூரி நாட்களில் ஆத்மதிருப்திக்காக செய்ததை முழுநேரப் பணியாக செய்ய முடிவெடுத்து, ‘இன்வால்வ்’ கல்வி புத்தொழில் நிறுவனத்தின் முக்கிய அங்கமாக மாறியிருக்கிறார்.

“சென்னையில் உள்ள 8 மாநகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவர்கள் 600 பேருடன் இதுவரை இணைந்து கற்றல்-கற்பித்தல் சோதனைகளை கடந்த மூன்றாண்டுகளில் செய்துள்ளேன். இடையில் தனியார் பள்ளி மாணவர்களுடனும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கிறேன். அப்போது, பணம் செலவழித்து தனியார் பள்ளியில் குழந்தைகளை சேர்த்துவிட்டால் புத்திசாலி ஆகிவிடுவார்கள் என்பதே மாயை என்பது புரிந்தது. கல்விக் கட்டணத்துக்கும் தரம் உயர்ந்த கல்விக்கும் தொடர்பு இல்லை.

பல தனியார் பள்ளிகளில் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்பாக ‘Father’ என்று கரும்பலகையில் எழுதினால் ‘Factory’ என்றே வாசித்தார்கள். 4-ம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு ‘A’ என்ற எழுத்தைப் பார்த்து வாசிக்கக்கூட தெரியவில்லை. ஒரே வகுப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இருக்கும்போது யாரிடமும் கவனம் செலுத்த முடியாத நிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. இதுதவிர ஒற்றை ஆசிரியர் கொண்ட பள்ளி நிலைமை இன்றும் பரவலாக உள்ளதே.

ஙமாணவர்களை ஆசானாக மாற்றும் பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்றுகொண்டால் மாயாஜாலம் நிகழும்’ என்பதை ஒரு கட்டத்தில் கண்டுபிடித்தோம். இதற்கு நாங்கள் மேற்கொண்ட கள பரிசோதனைகளும் எங்களுக்கு வழிகாட்டிய சிங்கப்பூரைச் சேர்ந்த சிறந்த கல்வி ஆசான்களும் உதவினர். உதாரணத்துக்கு, 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவரிடம் நான்கு 4-ம் வகுப்பு மாணவர்களை ஒப்படைத்துவிடுவோம். அந்த 9-ம் வகுப்பு மாணவர் 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு உள்ள பாட சந்தேகங்களை நிவர்த்தி செய்வார். அதற்கான பயிற்சியை பெரிய வகுப்பு மாணவத் தலைவர்களுக்கு அளிப்பதே எங்களது பணி” என்றார் அஸ்வினி.

மாணவர் ஆசானாகும் தருணம்

21-ம் நூற்றாண்டுத் திறன்கள்!

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மாணவர்களிடமும் கற்றல் இடைவெளி காணப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு பேச்சுத் திறன், சிக்கல்களுக்குத் தீர்வு காணும் ஆற்றல், குழுவாக இணைந்து செயல்படும் பாங்கு உள்ளிட்ட 21-ம் நூற்றாண்டுத் திறன்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இவை, அந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகின்றன. இவற்றை அனைத்துவிதமான குழந்தைகளுக்கும் கற்பிக்க முயல்கின்றனர் ‘இன்வால்வ்’ நிறுவனத்தினர்.

விளையாட்டாகப் படிக்கலாம்...

’நான் எதுக்காகப் படிக்கணும்?’

வழக்கத்தைவிடவும் கரோனா காலம் எல்லா தரப்பு குழந்தைகளுக்கும் கற்றலில் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. கிட்டத்தட்ட இரண்டாண்டு காலம் முறைப்படுத்தப்பட்ட கல்வி முறையிலிருந்து விலகி இருந்ததால் கேட்டல், வாசித்தல், எழுதுதல் ஆகியவற்றை மறந்தது மட்டுமல்ல, மேலும் பல சிக்கல்கள் குழந்தைகள் மனத்தில் முளைத்துவிட்டன. பின்தங்கியச் சூழலில் வசிக்கும் மாணவர்களை கரோனா காலம் குழந்தைத் தொழிலாளராக்கிவிட்டது.

“பள்ளி நடக்காததால் அக்கம் பக்கம் வேலைக்குப் போனேன்... இப்ப வேலையும் இல்ல படிப்பும் வரல... நான் எதுக்காக படிக்கணும்?” என்று கேள்வி எழுப்பும் பதின்பருவ குழந்தைகள் அதிகரித்துவிட்டனர். இவ்வாறு வேலைக்குச் செல்லும் நிர்பந்தம் ஏற்படாத சிறுவர்கள்கூட, அதிக எண்ணிக்கையில் போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பது தெரியவருகிறது. பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு, இப்பிள்ளைகள் பள்ளி வந்தாலும் அவர்கள் கல்வி பயிலும் மனநிலையில் இல்லை. இத்தகைய குழந்தைகளுக்காகவும் புதிய பாடத்திட்டத்தை அஸ்வினியும் அவரது குழுவினரும் வகுத்துள்ளனர்.

“நீதிநெறி பாடத்திட்டத்தை கரோனாவுக்கு பிந்தைய கால சவாலை எதிர்கொள்ளவே பிரத்யேகமாக தயாரித்துள்ளோம். போதனையாக அல்லாமல் சுவாரசியமான குறும்படங்கள், கதைகள், பாடல்களை வைத்து தயாரித்துள்ளோம். நேரடியாக மாணவர்கள் பங்கேற்று தங்களுக்கான விழுமியங்களை இதன் மூலம் உணர்வார்கள். அதை முற்றிலும் இலவசமாக அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கத் தயாராக இருக்கிறோம்” என்றார், இடைவிடாது கற்றல் இடைவெளியைப் போக்கச் செயலாற்றிவரும் அஸ்வினி.

x