இது ஒரு கடலோடியின் கனவு!


மெல்பின் ராபின்

”குழந்தைப் பருவத்திலிருந்தே நான் பார்த்து வருகிறேன். நாளுக்கு நாள் கடல் தனது எல்லையை விரித்துக்கொண்டே வருகிறது. கடல் இப்படித் தனது பரப்பை விரித்துக்கொள்வதில் இருந்து நம்மை நாம் தற்காத்துக்கொள்ள தடுப்புச்சுவர், தூண்டில் வளைவைத் தாண்டிய சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. இந்த எண்ணம் தான் என்னைப் பொறியியல் படிக்கவைத்தது” என ஆத்மார்த்தமாகத் தொடங்குகிறார் மெல்பின் ராபின்.

மெல்பின் ராபின்

குமரி மாவட்டத்தின் சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த மெல்பின் ராபினுக்கு, சிறு வயது முதலே கடற்கரைகளின் மீது அலாதி காதலுண்டு. ‘நெகிழி இல்லாத நெய்தல் படை’ என்னும் அமைப்பை நிர்வகித்துவருகிறார் மெல்பின். வாரம் ஒரு கடற்கரை என இவரும், இவரின் நண்பர்களும் சேர்ந்து கடற்கரையிலும், கடலுக்குள் தேங்கிக் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றிவருகின்றனர். இப்படி இதுவரை 64 மீனவ கிராமங்களில் தங்களால் முடிந்தவரைக்கும் கழிவுகளை அகற்றி இருக்கிறார்கள். தான் சார்ந்த கடற்கரை சமூகம் எதிர்நோக்கிய கடலரிப்பு பிரச்சினையே, மெல்பினை பொறியியலில் சிவில் படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்தது. இப்போது, தான் எண்ணியபடியே தனது கடலோடி சமூகத்துக்காக அரியதொரு கண்டுபிடிப்பை தந்துவிட்டு, அதற்கான பதிப்புரிமையையும் வாங்கிக் காத்திருக்கிறார்.

இதுகுறித்து கேட்டதும் சந்தோஷமாகப் பேசத் தொடங்கினார் மெல்பின் ராபின். “கடற்கரை கிராமங்கள், நாளுக்கு நாள் கடலரிப்பால் வீடுகளை இழந்த வண்ணமே உள்ளன. கடந்த 2 வருடத்தில் மட்டும் எங்கள் ஊரிலேயே 15 வீடுகள் கடல் அலையால் இடிந்து விழுந்தன. இப்படிக் கடந்த 8 ஆண்டுகளில் 500-க்கும் அதிகமான வீடுகள் போயுள்ளன. இதற்கெல்லாம் தடுப்புச்சுவர்களும், தூண்டில் வளைவுமே நம் கண்முன் இருக்கும் தீர்வாக முன்வைக்கப்படுகின்றன. தூண்டில் வளைவு அமைத்திருக்கும் பகுதியில் வெளியேற முடியாத தண்ணீர், தூண்டில் வளைவு அமைக்கப்படாத பக்கத்து மீனவ கிராமத்தின் வழியாக வெளியேறுகிறது. இதனால், தூண்டில் வளைவு அமைக்கப்படாத மீனவ கிராமம் தண்ணீருக்குள் சிக்கிக் கொள்கிறது. அங்கே, கடலரிப்பும் சர்வசாதாரணமாக நிகழ்கிறது. இதையெல்லாம் உள்வாங்கி இருந்த நான், கல்லூரியில் படித்தபோதே இதுகுறித்த ஆராய்ச்சியிலும் இறங்கினேன்.

கடலில் பிளாஸ்டிக் கழிவைச் சேகரித்து அகற்றும் மெல்பின்

எங்கள் கிராமத்தின் பக்கத்துக் கிராமமான கேரளத்தின் பொழியூரில், இயற்கையான மணல்திட்டு இருக்கிறது. கடலோர கிராமங்களில், நிலத்தடி நீர் இன்னும் உப்புத்தன்மையில்லாமல் நன்றாக இருக்க இந்தத் திட்டும் ஒரு காரணம். இப்போது சுற்றிச் சுற்றி அமைக்கப்படும் தூண்டில் வளைவும், தடுப்புச்சுவரும் இன்னும் சில ஆண்டுகளில் இந்த மணல் மேட்டையும் கேடாக்கிவிடும். எந்தப்பகுதியிலும் வெளியேற முடியாத தண்ணீர், இனி இந்த மணல் மேட்டின் வழியாக வெளியேறத் தொடங்கும். இந்த மணல் திட்டு அழிந்தால் தமிழக, கேரள எல்லையோரப் பகுதிகளில் இருக்கும் 10 கிராமங்கள், மக்கள் வாழவே தகுதியில்லாதப் பகுதிகளாகிவிடும். குடிதண்ணீர் இல்லாத பகுதியில் மக்கள் வசிப்பது சாத்தியம் அற்றதுதானே?’’ என்றார் மெல்பின்.

சின்னத்துறை கிராமத்தில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் கடல் 160 மீட்டர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில் 3 வரிசை வீடுகள் இப்போது இல்லை என்கிறார் மெல்பின். கூடவே, கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவு, தடுப்புச்சுவருக்கு மாற்றாக ஒரு புதிய திட்டத்தையும் வடிவமைத்துள்ள இவர், அதற்கு ‘கான்கிரீட் ரிங் செக்மென்ட்’ எனப் பெயர் வைத்துள்ளார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விளக்கும் மெல்பின்...

தனது கண்டுபிடிப்பு குறித்து அறிவியல்பூர்வமான தகவல்களைப் பேசத் தொடங்கினார் மெல்பின். “கடற்கரையில் இருந்து 60 மீட்டருக்கு அப்பால் பெரிய பெரிய பந்து போன்ற 10 கற்களை வட்ட வடிவில் போடவேண்டும். இது செயற்கைப் பவளப்பாறை போன்று செயல்படும். இதில் ஒவ்வொரு கல்லும் பிரம்மாண்ட சைஸில் இருக்கும். கட்டுமானப் பொருட்களின் கழிவைக் கொண்டே இந்தப் பந்து போன்ற கல்லை உருவாக்க வேண்டும். இதன் மூலம் டன் கணக்கில் விரயம் ஆகும் கட்டுமானக் கழிவையும் நாம் மறுசுழற்சி செய்யமுடியும். இந்தக் கல்லை போட்டுவிட்டு அதன் பின்பு, அதிலிருந்து சிறிது தூரம் தள்ளி தடுப்புச்சுவர் ஏற்படுத்த வேண்டும். இப்போது இந்தப் பெரிய கற்களில் மோதும் கடல் அலையானது தடுப்புச்சுவரின் பக்கத்தில் வரும்போது 50 சதவீதம் வேகம் குறைந்திருக்கும். அதேபோல், நாம் போட்ட பந்துக் கற்களுக்கும், இந்தத் தடுப்புச்சுவருக்கும் இடையில் அதிகமாக கடற்கரை மண் சேகரமாகும். காலப்போக்கில் இந்தப் பகுதியில் இயற்கையாகவே மணல்திட்டு உருவாகிவிடும்.

பிளாஸ்டிக் விழிப்புணர்வு...

பந்துக் கற்களுக்கும் தடுப்புச்சுவருக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் தண்ணீர் குளம்போல் தேங்கிக் கிடக்கும். கடலில் புதிதாக உருவாகும் அலை சீற்றத்தோடு வந்து பந்துக் கற்களில் மோதி, அதன் இடைவெளிகளின் வழியாக வீரியம் குறைந்து இந்த குளம்போல் தேங்கியிருக்கும் தண்ணீர் பகுதிக்கு வரும். இப்போது குளத்தின் கரைப் பகுதியைக் கற்பனை செய்துபாருங்கள். கூடுதலாக வரும் தண்ணீர் சின்ன சலனத்தைக் கரையில் ஏற்படுத்திவிட்டு நகர்ந்துவிடும். அப்படிக் கடல் சீற்றத்தையும் கூட பெட்டிப் பாம்பாக அடக்கிவிடலாம்” என்கிறார் மெல்பின்.

மெல்பின் தனது கண்டுபிடிப்புக்கு முறையாக காப்புரிமையும் பெற்றுள்ளார். இவரது தந்தை ராபின் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளி. 12 வயதிலேயே மீன்பிடித் தொழிலுக்கு வந்துவிட்ட ராபின், இப்போது அந்தமான் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் இருந்தே பழங்காலத்து ஊரின் அமைப்பையும், கடல் கொள்ளை கொண்டுபோன வீடுகளின் கதைகளையும் அறிந்திருக்கிறார் மெல்பின். இவருக்கு இன்னொரு ஆதங்கமும் இருக்கிறது. “பல மீனவ கிராமங்களிலும் இயற்கையாக உள்ள மணல் திட்டுகளை அழித்துவிட்டு தூண்டில் வளைவு அமைக்கிறார்கள்” என்று ஆதங்கப்படும் மெல்பின், ”ஆனால், எனது கண்டுபிடிப்பானது இயற்கையாகவே மணல் திட்டை உருவாக்கும்” என்கிறார்.

ராபின்

தனது அரிய கண்டுபிடிப்பை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்தும் விளக்கியிருக்கிறார் மெல்பின். கேரள மீன்வளத் துறை உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து விளக்கியுள்ளார். “இது எனது கண்டுபிடிப்பு மட்டும் அல்ல... கடலோர கிராம மக்கள் கடல் அரிப்பால் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்னும் கடலோடியின் ஏக்கமும் கூட’’ என்கிறார் மெல்பின் ராபின்.

இந்தக் கடலோடி இளைஞனின் கனவு விரைவில் கைகூடட்டும்; கடலோடிகளின் கடலரிப்புக் கவலைகள் இனியாவது தீரட்டும்!

x