மதுரை: தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் அரசுப் பள்ளியில் மகன், மகளை சேர்த்த பெற்றோர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப் படுத்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் மேள, தாளத்துடன் ஊர்வலமாக சென்று அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கக்கோரி பிட் நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10-ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வந்த புதிய மாணவர்களை ஆசிரியர்கள் பென்சில், பேனா, புத்தகம் வழங்கி வரவேற்றனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் யா.ஒத்தக்கடை தொடக்கப் பள்ளியில் மகன், மகளை சேர்ந்த பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு பள்ளி தலைமை ஆசிரியர், ஒத்தக்கடை ஊராட்சி மன்றத் தலைவர் கையெழுத்திட்ட பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியருக்கு ஊராட்சித் தலைவர் முருகேஸ்வரி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தாரை தப்பட்டை இசைக்கப்பட்டு, மலர் தூவி மாணவர்கள் வரவேற்கப்பட்டனர். ஒவ்வொருக்கும் ரோஜா மலர், இனிப்பு வழங்கப்பட்டது. புதிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சரவணன், முன்னாள் மாணவர்கள் முத்து, பிரபு, ரபீக், ஆசிரியர்கள் மோசஸ், மெர்சி, ராஜேஸ்வரி, பானு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய பெற்றோர்கள், "அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்த பெற்றோர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது இதுவே முதல் முறை. இதுபோன்ற பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை களால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும்" என்றனர்.