45-வது சென்னை புத்தகக் காட்சி; முதல்வர் தொடங்கி வைக்கிறார்


தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 45-வது சென்னை புத்தகக் காட்சி அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், 45-வது சென்னை புத்தகக் காட்சி 2022 ஜன.6 முதல் 23-ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற இருக்கிறது. தொடக்க நாளான ஜன.6-ம் தேதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்கிறார் என்று பபாசி தெரிவித்துள்ளது.

வாரநாட்களில் மதியம் 3 முதல் இரவு 8.30 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையும் புத்தகக் காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு ரூ.10 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பபாசி நிர்வாகிகள், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் புதிய தலைவராக குமரன் பதிப்பகம் வைரவன், செயலாளராக நாதம் கீதம் புக்ஸ் முருகன், பொருளாளராக லியோ புக்ஸ் குமரன் ஆகியோர் தேர்வாகினர். நிரந்தர புத்தகக் காட்சி உறுப்பினர்களாக ஹரிபிரசாத், மகேந்திரன், ராம்குமார், சங்கர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

புதிய நிர்வாகிகளின் முன்னிலையில், 800 அரங்குகள் இடம்பெற உள்ள 2022 புத்தகக் காட்சியின் ஆயத்தப் பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

x