மாணவர் மனசு: பாலியல் புகார்களுக்கு அப்பாலும் மாணவர் நலன் காக்க முன்வருமா?


பள்ளி மாணவியர் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு, பள்ளி வளாகத்தில் வைக்கப்படும் ’மாணவர் மனசு’ என்ற புகார் பெட்டி விடிவு தருவதோடு, இதர பல வகைகளிலும் மாணவர் நலன் காக்க முன்வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் மாணவியர் அவை குறித்த தங்கள் புகார்களை, பள்ளி வளாகங்களில் வைக்கப்படும் புகார் பெட்டிகளில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டிக்கு ’மாணவர் மனசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக பள்ளி வளாகங்களில் பாலியல் தொல்லைகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒருசில மாணவியரின் தற்கொலை சம்பவங்களை அடுத்து, மிகவும் கவலைக்குரியதாகவும் இந்த விவகாரம் விவாதத்துக்கு ஆளானது. அவற்றுக்கு முடிவுகட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு நடப்பு நிலவரம் குறித்துப் பல கட்ட அறிவுறுத்தல்கள் தரப்பட்டதுடன், போக்சோ சட்டம் குறித்தும் அவர்களுக்கு முழுமையாக விளக்கப்பட்டது. அடுத்தபடியாக மாணவர்கள் மத்தியிலான விழிப்புணர்வு நடவடிக்கைக்கும் ஏற்பாடானது.

பாதிப்புக்கு ஆளானவர்கள் மற்றும் அதற்கான அச்சத்துக்கு உரியவர்கள், தேவையான உதவியை நாடுவதற்கு சைல்டு லைன் உட்பட அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டன. கல்வி தகவல் மையத்தில் மாணவ மாணவியரின் புகார்களுக்கு காதுகொடுக்கவும், அவசியமெனில் தொலைதூர கவுன்சிலிங் வழங்கவும், தேவையான ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த அவசர உதவிக்கான எண்கள் பள்ளி வளாகத்திலும், வகுப்பறையிலும் வைக்கப்பட்டதுடன், பாட நூல்களிலும் அச்சிடப்பட்டன.

இந்த வரிசையில் தற்போது, மாணவர் மனசு புகார் பெட்டிக்கான ஏற்பாடுகள் வந்துள்ளன. இதன்படி பாலியல் தொந்தரவுகள் தொடர்பான புகார்களை, தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தாது, மாணவ மாணவியர் இந்தப் புகார் பெட்டியில் அளிக்கலாம். தலைமையாசிரியர் மற்றும் கல்வித் துறை உயரதிகாரிகள் இந்தப் புகார்கள் வாசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில இயக்குநர் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இதன்படி, மாணவர் மனசு புகார் பெட்டி செலவினத்துக்கு ரூ.2,000 ஒதுக்குவதுடன், புகார் பெட்டியை டிச.31-க்குள் பள்ளி வளாகத்தில் நிறுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் புகார்களுக்கு மட்டுமே இந்தப் புகார் பெட்டி என்று சுருக்காது, பல தளங்களிலான தங்களது பிரச்சினைகளை முறையிடவும், தீர்வுக்கான வாயிலாகவும் இந்தப் புகார் பெட்டிகளின் பயன்பாட்டை நீட்டிக்கலாம். மாணவர் மனசு என்ற தலைப்புக்கு ஏற்ப மாணவர்கள் மனதின் அத்தனை சஞ்சலங்களையும் வெளிப்படுத்த புகார் பெட்டியில் வாய்ப்பளிக்கலாம். வகுப்பறை, பள்ளி வளாகம், வசிப்பிடம், நட்பு, உறவு, சமூக இடையீடு என மாணவர் உலகம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் தெரிவிக்க வழி செய்யலாம்.

மாணவர் புகாருக்கான தீர்வுகள் பள்ளி வளாகத்துக்கு வெளியே இருப்பின், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக அவற்றை ஒருங்கிணைக்க உதவலாம். இதன் மூலம் மாணவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதுடன், அவர்களது சமூக ஆர்வம், விழிப்புணர்வு, பொறுப்பு ஆகியவை அதிகரிக்க ஏதுவாகும். மேலும் எழுத்து, வாசிப்பு, தேடல் என கல்வி சார்ந்த திறன்கள் மேம்படவும் வாய்ப்பாகும்.

x