கரோனா கால கற்றல் இடைவெளியைப் பூர்த்திசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் நலிவுற்ற நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் நல்லதொரு விடியலைத் தந்திருக்கிறது. ஆம், இந்த திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கிராமங்கள்தோறும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுவதன் மூலம் இந்தக் கலைஞர்களின் வாழ்வாதாரத்துக்கும் வழி பிறந்திருக்கிறது.
கற்றல் இடைவெளியைக் குறைக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் இணைய வசதி கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு, கல்வி இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறது. இதை சரிசெய்யும் விதமாக ’இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு.
இந்நிலையில், இத்திட்டத்துக்கு திக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டவர்களே எதிர்கருத்துச் சொன்னார்கள். “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்' என்பது ஆர்எஸ்எஸ்ஸின் கல்விக் கொள்கையின் நுழைவே” என்று விமர்சித்தார் வீரமணி. “இந்தத் திட்டம் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு ஆழ்ந்து பரிசீலிக்க வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டவர்களும் எதிர்வினையாற்றினார்கள்.
இதற்கெல்லாம் பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘’சித்தாந்தரீதியான கொள்கைகொண்ட தன்னார்வலர்களை இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் அனுமதிக்கமாட்டோம். பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பின்புலத்தை முழுமையாக ஆராய்ந்த பிறகே திட்டத்தில் அனுமதிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் தமிழகத்தில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட மாட்டாது” என்றார். இதனால் சர்ச்சைகள் ஓய்ந்தன.
என்றாலும் ஆசிரியர்களில் ஒரு பிரிவினர் மத்தியில், இந்தத் திட்டத்துக்கு இன்னும் எதிர்ப்பு இருக்கவே செய்கிறது. இன்னொருபுறம், ரூ.200 கோடியில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒருதரப்பில் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவாரூர் மாவட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர் க.தங்கபாபு, "காலத்திற்கேற்ற மாற்றம்தான் தற்போதைய இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.
கரோனா விடுமுறைக்குப் பிறகு பள்ளிதிறந்த முதல்நாளில் 2-ம் வகுப்பு தேறிய மாணவனிடம் ‘ப’ எழுதுடா என்றபோது, ‘முடியாது’ என்றான். நான் சற்று அதிர்ந்துதான் போனேன். தெரியாது என்பதற்கும் முடியாது என்பதற்கும் உள்ள வேறுபாடுகளையும், நுணுக்கங்களையும் கரோனா கால இடைவெளி மாணவர்களிடையே உருவாக்கி உள்ளது.
இந்தக் கற்றல் இடைவெளியை சரி செய்ய ஆசிரியர்களுக்கு பேருதவி செய்யும் பணியாக இந்தத் திட்டம் அமைந்திருக்கிறது. இதில் 1.7 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்திருக்கிறார்கள். 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு மாலை 5 முதல் 7 மணி வரை அந்தந்தக் குடியிருப்புகளில் உள்ள பாதுகாப்பான இடங்களில் வகுப்பு நடக்கும். இத்திட்டம் நிச்சயம் ஒரு மாபெரும் கல்விப் புரட்சியை ஏற்படுத்தும்" என்றார்.
மக்களிடம் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாட்டுப்புறக் கலைஞர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். முதல்கட்டமாக, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், இது மாநிலம் முழுமைக்கும் இப்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின், மாநில ஒருங்கிணைப்பாளரும், நாட்டுப்புறக் கலைஞர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சி அளித்துள்ள லயோலா கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறையின் தலைவர் பேராசிரியர் காளீஸ்வரன், ’’கரோனா காலத்தில் 11 சதவீத குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள். 8-ம் வகுப்பு படித்த 5 சதவீத பெண் குழந்தைகள் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். 2 சதவீத குழந்தைகள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.
1 சதவீத குழந்தைகள், ‘எனக்கு படிப்பே பிடிக்கவில்லை’ எனச்சொல்லி இருக்கிறார்கள். இவற்றை எல்லாம் சரிசெய்யும் விதத்தில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது அரசு.
இத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் பயனடைவது போலவே இன்னொரு பக்கம், தமிழகம் முழுவதுமுள்ள நாட்டுப்புறக் கலைஞர்களும் பயனடைகிறார்கள். மொத்தமுள்ள 413 ஒன்றியங்களுக்கும், ஒரு ஒன்றியத்துக்கு ஒரு குழு வீதம் 413 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு குழுவிலும் 10 நபர்கள் வீதம் 4,130 நாட்டுப்புறக் கலைஞர்களின் குடும்பங்கள் பசியின்றி வாழ வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக தமிழக அரசுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
மயிலாடுதுறை ஒன்றியத்தில் கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கும் நாட்டுப்புறக் கலைஞர் டி.அருள் நம்மிடம் பேசும்போது, ‘’பெரும்பாலான நாட்டுப்புறக் கலைஞர்கள் வாய்ப்புகள் இல்லாததால் மாற்று வேலைகளுக்குப் போய்விட்டார்கள். ராஜா வேஷம் கட்டியவர்கள் வயல் வேலைக்கும், கட்டிட வேலைக்கும் கூலியாளாக போய்விட்டார்கள். இதனால் மனம் வருந்திப்போயிருந்த கலைஞர்களுக்கு, மீண்டும் அரிதாரம் பூசும் வாய்ப்பை இந்த திட்டம் தந்திருக்கிறது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தங்களின் கலைத்திறனை மக்கள் முன்னால் நிகழ்த்திக் காட்டும் மிகப்பெரிய மனதிருப்தி தற்போது கிடைத்திருக்கிறது. மக்களின் ரசிப்பும், கைத்தட்டலும் கிடைக்கும்போதுதான் ஒரு கலைஞனாக மனதுக்கு மிகப்பெரிய நிம்மதி கிடைக்கிறது. அரசாங்கம் தரும் தொகை அதிகமில்லையென்றாலும், எதுவுமே இல்லாத இந்த நேரத்தில் அது கிடைத்திருப்பது மிகப்பெரிது” என்றார்.
திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர் தனலெட்சுமி, ‘’ சோலைவனம் என்ற எங்கள் கலைக்குழுவில் உள்ளவர்கள் எல்லோருமே அடித்தட்டுமக்கள்தான். கலைநிகழ்ச்சிகள் நடத்தித்தான் வாழ்க்கை நடத்திவந்தோம். இரண்டு வருடமாக வாய்ப்புக்கள் இல்லாததால் மிகவும் பாதிக்கப்பட்டுக் கிடந்த எங்களுக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பாக இல்லம் தேடி கல்வித்திட்டம் வந்திருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊதியத்தைக் கையில் வாங்குவது மிகப்பெரிய ஆறுதலைத் தந்திருக்கிறது” என்றார்.
காலையிலேயே தொடங்கி விடுகிறது இவர்களின் கலைப்பயணம். கல்வித்துறை அலுவலர்கள் திட்டமிட்டிருக்கும் வழித்தடத்தில் உள்ள இரண்டு பள்ளிகள், இரண்டு பொதுஇடங்கள் என தினமும் நான்கு இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். ஒரு இடத்தில் ஒன்றரை மணிநேரம் நிகழ்ச்சி நடக்கிறது. இப்படி நான்கு இடங்களிலுமாக ஆறு மணி நேரம் நிகழ்ச்சிக்கும், இரண்டு மணி நேரம் போக்குவரத்துக்கும் ஆகிவிடுகிறது. ஆகமொத்தம் எட்டுமணி நேரம் வேலை செய்கிறார்கள். இதற்காக ஒரு குழுவுக்கு ஒரு நாள் ஊதியமாக 12 ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. தனியாக நிகழ்ச்சி நடத்தும் போது ஒருவருக்கு ஒரு நிகழ்ச்சிக்கு 3 ஆயிரம் வரைக்கும் வருமானம் கிடைக்குமாம். இப்போது ஒரு நாளைக்கு செலவெல்லாம் போக 700 ரூபாய்தான் கிடைக்கிறது என்றாலும் ஆத்ம திருப்தியுடன் இந்தக் கலைப்பயணத்தைத் தொடர்கிறார்கள் நலிவுற்றுக் கிடக்கும் நாட்டுப்புறக் கலைஞர்கள்
எல்லா கதவுகளும் மூடப்பட்டிருந்த நிலையில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் சிறிது வெளிச்சத்தை காட்டியிருக்கும் இல்லம் தேடி கல்வித் திட்டம், அதன் நோக்கத்திலும் வெற்றிபெறட்டும். அதன்மூலம் மாணவர்களுடன் சேர்ந்து நாட்டுப்புறக் கலைஞர்களும் ஏற்றம் பெறட்டும்!