கரூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இன்று(டிச.4) காலையிலும் மழை விடாததில், மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது.
காலை 8 மணியாகியும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பொறுத்துப் பார்த்த ஒரு மாணவன், நேரடியாக ஆட்சியர் பிரபு சங்கரை ட்விட்டரில் தொடர்பு கொண்டான். பள்ளி ஆசிரியருக்கு விடுப்புக் கடிதம் எழுதுவது போல ஆட்சியருக்கும் ஒரு மடல் தீட்டினான். ‘ஐயா, மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்கிறது. ஆகையால் இன்று மட்டும் விமுறை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்ற, பிளஸ் 2 படிக்கும் ஈஸ்வரமூர்த்தியின் ட்விட்டர் பதிவுக்கு உடனடியாக பதிலும் வந்தது.
’தற்போது மழை குறைந்துவிட்டது. பள்ளிக்கு கிளம்பிப் போங்க தம்பி. நண்பர்களையும் கிளம்பச் சொல்லுங்க. நிறைய படிக்க வேண்டி இருக்கு’ என்று பரிவும், கண்டிப்புமாக ஆட்சியர் பிரபு சங்கர் ட்விட்டரில் பதில் தந்தார்.
கரூர் மாவட்டத்தின் 18-வது கலெக்டராக 6 மாதங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற பிரபு சங்கர், அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அடிப்படையில் மருத்துவரான பிரபு சங்கர், சமயோசிதமான செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரர். அண்மையில், கரூர் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை பள்ளி மாணவி தற்கொலையைத் தொடர்ந்து இச்சம்பவம் மாநிலத்தை உலுக்கியது.
கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் உடனடியாக பெற்றோர் மற்றும் பள்ளி மாணவியருக்கு ஒரு திறந்த மடல் அனுப்பினார். ’பாலியல் வன்முறையில் ஈடுபடும் நபரே இங்கு தவறிழைத்தவர் மற்றும் தண்டனைக்குரியவர் ஆவார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் எவ்வகையிலும் குற்ற உணர்வு கொள்ளத் தேவையில்லை’ என்று தொடங்கும் அந்த நீண்ட கடிதத்தில், பாலியல் புகார் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை நேரடியாக தொடர்பு கொள்வதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணையும் அறிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலமாக முன்மாதிரி விழிப்புணர்வு நடவடிக்கையையும் கொண்டு வந்தார். ‘நிமிர்ந்து நில், துணிந்து செல்’ என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண், 14417 என்ற கல்வி உதவி வழிகாட்டி மையத்தின் எண் ஆகியவற்றுடன், பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணையும், அனைத்து மாணவ மாணவியரின் புத்தகங்களிலும் அச்சிட ஏற்பாடு செய்தார். பிரபு சங்கரின் முன்னெடுப்புக்கு வரவேற்பு கிடைக்கவே , சமூகநலத் துறை இயக்குநர் வளர்மதி உடனடியாக இந்த ஏற்பாட்டை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் வாயிலாக உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் இத்தனை அணுக்கமாகச் செயல்படுவதால், அவரிடம் நேரிடையாக மழை விடுமுறை கோரும் அளவுக்கு நெருக்கமாகவும் மாணவர்கள் உணர்கிறார்கள்.
இந்த மழை விடுமுறை கோரிக்கையில் மாணவர்கள் மனத்தாங்கலாக இருப்பதற்கும் காரணமுண்டு. மாவட்டத்தில் அந்த அளவுக்கு மழை பெய்திருப்பதுடன், பல ஊர்களில் பள்ளி வளாகங்கள் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காணப்படுகின்றன. கிராமப்புற தொடக்கப் பள்ளிகள் சிலவற்றில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை.