14417 உதவிக்கு 8 மடங்காக எகிறிய அழைப்புகள்


பள்ளிக்கூடங்களில் அதிகரிக்கும் பாலியல் தொந்தரவுகள் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கான ’14417’ உதவி எண்ணுக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழைப்புகள் அதிகரித்து வருகின்றன.

4 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறைக்காக கொண்டுவரப்பட்ட பிரத்யேக இலவச அழைப்பு எண் ’14417’. பள்ளிக் கல்வித் துறை செயல்பாடுகள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கான உதவிகளை ஒருங்கிணைத்தல், உயர் கல்விக்கு ஆலோசனை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த இலவச அழைப்பு மையம் வழங்கி வந்தது. வரும் அழைப்புகளை செவிமெடுப்பது, முக்கியமான ஐயங்களுக்கு போதிய விளக்கம் அளிப்பது ஆகியவற்றுக்காக இங்கே அதற்கென பயிற்சி பெற்றோர் பணியமர்த்தப்பட்டார்கள்.

கல்வித் தகவல் மையம் என்ற பெயரில் செயல்பட்ட இந்த உதவி மையத்தில், உயர் கல்வி தொடர்பான விளக்கங்களுக்கு அப்பால், மாணவர்களின் மன அழுத்தம், மனச்சோர்வு தொடர்பான சங்கடங்களுக்கும் தொலைபேசி வாயிலாகவே கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. இவற்றின் மூலம் விரக்தி மற்றும் தற்கொலை எண்ணம் நிரம்பியவர்கள் விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பாகவே அவற்றைத் தடுக்கவும் முடிந்தது.

கரோனா உச்சத்திலிருந்தபோது பொதுத்தேர்வு நடத்தலாமா வேண்டாமா என்ற முடிவை எட்டுவதற்காக, பெற்றோர்கள் தொடர்பு கொள்வதற்கான எண்ணாகவும் 14417 பெரும்பங்கு வகித்தது. அப்போது இரண்டே நாளில் சுமார் 40 ஆயிரம் அழைப்புகள் இம்மையத்துக்கு குவிந்தனவாம்.

அடுத்த கட்டமாக தற்போது பள்ளிகளில் அதிகரிக்கும் பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்கும் உதவி எண்ணாகவும் 14417 சேர்க்கப்பட்டது. இந்த எண் குறித்து பள்ளிகள், வகுப்பறைகளில் விழிப்புணர்வு செய்யப்பட்டதோடு பிள்ளைகளின் பாடநூல்களிலும் அவை அச்சேறின.

அதற்கு முன்பாக நாளொன்றுக்கு 150 என்பதாக இருந்த சராசரி அழைப்புகள் தற்போது 1,200 வரை அதிகரித்துள்ளன. மாணவ மாணவியர், பெற்றோர் மட்டுமன்றி பொதுநல ஆர்வலர்களும் இந்த எண்ணை அழைத்து விளக்கங்கள் பெற்று வருகிறார்கள். போக்சோ சட்டம் தொடர்பான விளக்கங்கள், பொதுமக்கள் மத்தியிலான போக்சோ அச்சுறுத்தல்கள் குறித்தும் ஐயங்கள்,புகார்களுக்கான அழைப்புகள் வருகின்றன. உயர்கல்வி ஆலோசனை மற்றும் தற்கொலை மனநிலை தொடர்பான அழைப்புகள் வழக்கம்போல அதிகரிப்பதால், அவற்றுக்கான ஆலோசனைகளையும் இம்மையத்தினர் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக காமதேனு இணையதளத்திடம் பேசிய கல்வித் தகவல் மையத்தின் சென்னை பொறுப்பாளர் பால் ராபின்சன், “10 கவுன்சிலர்கள், 14 அழைப்பு ஏற்பாளார்கள் என 24 பேர் பணியில் இருக்கிறார்கள். இவர்கள் 3 நடையாக 24 மணி நேரமும், வாரத்தின் 7 நாட்களிலும் அழைப்புகளை செவிமெடுக்க காத்திருக்கிறார்கள். எங்களுக்கு வரும் அழைப்புகளில் பெரும்பாலானவை, பிரச்சினை தொடர்பான விளக்கங்களை பெற்ற வகையிலேயே தீர்வை எட்டிவிடுகின்றன. அவசியமான சில அழைப்புகளுக்கு தேவையைப் பொறுத்து கல்வித் துறை, காவல் துறை ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டி வரும். சில பள்ளிகள் மீதான சாதாரண புகார்களுக்கு, நாங்களே பள்ளி நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு விசாரித்துள்ளோம். கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக மாற்றுச் சான்றிதழ் வழங்காது இழுத்தடித்த பள்ளிகள், இம்மாதிரி விசாரிப்புக்கு உடனடியாக டிசி வழங்க ஆவன செய்திருக்கின்றன” என்றார்.

தங்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதற்கு பொறுப்பான சிலர் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையே, மாணவர்களுக்கு தெம்பூட்டக் கூடியது. அதிலேயே விபரீத முடிவுகளுக்கான எண்ணங்கள் கரைந்து போகவும் வாய்ப்புண்டு.

பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பதின்ம வயதினர் வரை, அவர்கள் சந்திக்கும் அனைத்து சங்கடங்களையும் கல்வி தகவல் மையத்தினர் செவிமெடுத்து தீர்வு காண உதவுகிறார்கள். அதற்கான 14417 என்ற இலவச எண் குறித்து விழிப்புணர்வு பெறுவதோடு, அவற்றை அவசியமானோருக்கு பரப்பவும் செய்வோம்.

x