பள்ளிக் கட்டிடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்க!


இடிந்து விழுந்த வானதிராயபுரம் பள்ளிக் கட்டிடம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மழையின் காரணமாக பல ஊர்களில் வீடுகள் இடிந்து விழுவது அன்றாடம் செய்தியாகி வருகின்றது. ஒவ்வொரு செங்கல்லாக பார்த்துப்பார்த்து கட்டிய வீடுகளே இந்த அடைமழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடியும்போது, ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்டிருக்கும் பள்ளிக் கட்டிடங்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அந்தக் கேள்விக்கு விடையாக, நவ.17 அன்று நடந்தது அந்த விபத்து. நெய்வேலி அருகே, வானதிராயபுரம் கிராமத்தில் இருந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழுந்தது. அன்றைக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தக் கட்டிடம் 1996-ம் ஆண்டு கட்டப்பட்டது. 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 30 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

கடந்த அக்.11 அன்று, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, பள்ளியின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்துவிழ ஆரம்பித்தது. இதைக்கண்ட மாணவிகள் உடனடியாக வகுப்பறையில் இருந்து வெளியேறிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் வகுப்பறையின் மேற்கூரை பூச்சு முழுவதுமாக பெயர்ந்து விழுந்திருக்கிறது.

கரோனா ஊரடங்கு காலத்தில், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே ஆணைகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் வெளிப்புற சன்ஷேடு பகுதி சிமென்ட் பூச்சு திடீரென பெயர்ந்து விழுந்தது. இங்கு 25 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இக்கட்டிடம் கடந்த 1996-97-ம் கல்வி ஆண்டில் கட்டப்பட்டு, கடந்த 2018-19-ம் ஆண்டு பராமரிப்பும் செய்யப்பட்டடுள்ளது.

வேடசந்தூர் பள்ளி மேற்கூரை

அதற்கு சிலமாதங்களுக்கு முன்பு, இதேபோல வல்லநாடு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே விளையாடப் போயிருந்ததால், அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பின்னர் பாதி இடிந்த நிலையில் இருந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து தள்ளினார்கள். இதுபோல ஏராளமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஆண்டுதோறும் பருவமழை தொடங்கும் முன்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுவது வழக்கம். அதில், சேதமடைந்துள்ள கட்டிடங்கள் உள்ளனவா, மின் சாதனங்களில் மின்கசிவு இருக்கிறதா, உயர் மின்அழுத்த கம்பிகள் அறுந்துள்ளனவா? என்பது உட்பட பல்வேறு விஷயங்களைக் கவனித்து அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படும். ஆனால், அதனால் பெரிதாக எவ்விதப் பயன்களும், செயல்பாடுகளும் இருக்காது.

சதீஷ்குமார்

இதுகுறித்து, கல்வியாளர்கள் சங்கமத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.சதீஷ்குமார் அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியிள்ளார். அவரிடம் பேசினோம். ’’தமிழ்நாடு முழுதும் மிகக் கனமான மழை பரவலாகத் தொடர்ந்து பெய்து வருகின்றது. இதன்காரணமாக நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத அரசுக் கட்டிடங்கள் பலவும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. இந்த நேரத்தில் மிக முக்கியமாக தினந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் வந்துசெல்லக்கூடிய பள்ளிக்கட்டிடங்களின் உறுதித்தன்மையைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக அவசியம்.

தொடக்கப் பள்ளி தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்த விபரங்கள் கோரப்பட்டு, உடனடியாக அதைப் புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முன்பே இத்தகைய விவரங்கள் பெறப்பட்டிருந்தால், அதன் அடிப்படையில் போர்க்கால அடிப்படையில் கட்டிடங்களின் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தக்காரர்களை அனுமதிக்காமல், நிதியை முறையாகக் கையாள பள்ளியின் மேலாண்மைக் குழுவிற்கே நிதி அதிகாரத்தை அளிக்கவேண்டும். ஏனெனில், கடந்தமுறை கஜாப் புயலின்பொழுது பள்ளிப் புனரமைக்கு ஒதுக்கப்பட்ட நிதி முறையாகச் செலவு செய்யப்படாமல் கட்டிட ஒப்பந்ததாரர்களால் கையாடல் செய்யப்பட்டது.

அரசு நிதி எங்கும் முறைகேடாகப் பயன்படுத்தப்படக் கூடாது, அதிலும் மாணவர்களுக்கான நிதி என்பது தேசத்தின் வளர்ச்சிக்கானது என்பதில் அரசு மிகக் கவனம்கொள்ள வேண்டும். பள்ளிக் கட்டிடங்கள் மாணவர்களின் உயிருடன் தொடர்புடையவை என்பதால், பள்ளிகளின் உறுதித்தன்மையை ஆய்வுசெய்து, அதற்கான புனரமைப்புக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்” என்றார்.

நிவாரணப் பணிகள் எந்த அளவுக்கு முக்கியமோ, அதைவிட முன்னெச்சரிக்கைப் பணிகளும் மிக முக்கியம். அதிலும் இளம் சிறாரின் உயிரைக் காக்கும் இந்தப் பணிக்கு அரசு உடனடியாக தனிக் கவனம் செலுத்திட வேண்டும்.

x