தமிழ்நாட்டில் 16.6% மாணவர்கள் மட்டுமே டியூசன் செல்வது பாராட்டுக்குரியது... ஆனால்!?


பள்ளிக் கல்வி குறித்த 2021-ம் ஆண்டுக்கான ஏசர் ( ASER) அறிக்கை, இன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 6 வயதிலிருந்து 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2018-ல் ஆண் குழந்தைகள் 63.3 சதவீதமும், பெண் குழந்தைகள் 70 சதவீதமும் அரசுப் பள்ளியில் பயின்றனர். 2021-ல் 73.7 சதவீதம் ஆண் குழந்தைகளும், 78.8 சதவீதம் பெண் குழந்தைகளும் அரசுப் பள்ளியில் பயில்கின்றனர்.

இருபாலரையும் சேர்த்து, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 10 சதவீத மாணவர்கள் தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாறியுள்ளனர். கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம். அரசு, இதைச் சாதகமான அம்சமாக எடுத்துக்கொண்டு, அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதில் முழுமூச்சாகக் கவனம் செலுத்தவேண்டும்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் இருக்கும் முக்கியமான பிரச்சினை, குழந்தைகள் வீட்டில் உள்ளவர்களின் உதவியைப் பெறுவது இங்கே குறைவாக இருக்கிறது. அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் 53.2 சதவீதத்தினர் மட்டுமே பெற்றோர்களின் / குடும்ப உறுப்பினர்களின் உதவியைப் பெறுகின்றனர். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 68.8 சதவீத மாணவர்கள் குடும்ப உறவினர்களின் உதவியைப் பெறுகின்றனர். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி இரண்டையும் சேர்த்து ஒட்டுமொத்தத்தில், படிப்பில் குடும்ப உறுப்பினரின் உதவியை 56 சதவீத மாணவர்கள் மட்டுமே பெறுகின்றனர். ஆனால், தேசிய சராசரி 66.6 சதவீதமாக உள்ளது.

அதுபோலவே, பள்ளி மாணவர்களில் தனிப் பயிற்சி பெறுவதும் தமிழ்நாட்டில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. மேற்கு வங்கம் ஒடிசா போன்ற மாநிலங்களில் 70 சதவீதத்தினருக்கும் அதிகமானோர் தனிப் பயிற்சி பெறுகின்றனர். ஆனால், அது தமிழ்நாட்டில் வெறும் 16.6 சதவீதமாக மட்டுமே இருக்கிறது. ‘பிரைவேட் டியூசன்’ போகாதது நல்ல விஷயம்தான் என்றாலும், தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்கள் வகுப்பறையைத் தவிர வேறு வழிகளில் படிப்புக்கான உதவியைப் பெற இயலாதவர்களாக உள்ளனர் என்பது இதன்மூலம் தெரிகிறது.

6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் பள்ளியில் சேராத குழந்தைகளின் விகிதம், 2018-ல் தமிழ்நாட்டில் 0.3 சதவீதமாக இருந்தது. 2020-ல், அது 6.2 சதவீதம் என்ற அபாயகரமான அளவை எட்டியது. 2021-ல், அது 1.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, பள்ளியில் சேராத குழந்தைகளின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காகக் குறைந்திருக்கிறது. என்றாலும், 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அப்போது இருந்ததை விட இப்போது 4 மடங்கு அதிகமாக இருக்கிறது. பள்ளியில் சேராத குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டுவந்து சேர்ப்பதில், பள்ளிக் கல்வித் துறை செய்ய வேண்டியது இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் கூடுதல் பொறுப்பை நாம் உணர முடிகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தும்போது, இந்த அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

x