தமிழகத்தில் ’நீட்’ தேர்வை முன்வைத்து, உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, நீட் மாணவர்களுக்கான தற்போதைய அக்கறை மற்றும் ஆலோசனைகளுக்கு அப்பால், கூடுதல் அரவணைப்பு வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
நடப்பாண்டு ’நீட்’ தேர்வு வெளியாகும் முன்னரே, அது குறித்த அச்சத்தில், தேர்வெழுதிய 3 மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
அந்த வரிசையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் என்ற மாணவரும் நீட் தேர்வில் உரிய மதிப்பெண்கள் கிடைக்காத மன அழுத்தத்தில் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார். 5 நாட்களுக்கு முன்னர் விஷமருந்திய அவர், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பலனின்றி நேற்று(நவ.7) இறந்தார். இந்த வகையில், நடப்பாண்டின் நீட் காரணமாக பலியான மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆகியுள்ளது.
நீட் தேர்வு ரத்துக்கான முனைப்புகளுடன், அத்தேர்வுக்கு தயாராகும் மற்றும் தேர்வெழுதிய மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதிகரிக்கும் உயிரிழப்புகள், மாணவர்களுக்கான கூடுதல் அரவணைப்பைக் கோருகின்றன.
முக்கியமாக, 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு அன்றாடப் பாடங்களுடன் இணையாக வாழ்வியல் பாடங்களையும் தந்தாக வேண்டியுள்ளது. பொதுத்தேர்வின் பெயரால் 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு விளையாட்டு, பொது வாசிப்பு, நன்னெறி பாடவேளைகள் புறக்கணிக்கப்படுகின்றன. தனியாரோ, அரசுப் பள்ளியோ தேர்ச்சி விழுக்காட்டுக்காக ஆசிரியர்கள் தரப்பிலிருந்து மிகை அழுத்தம் தரப்படுகின்றது. பெற்றோர் மற்றும் சுற்றத்தார் தரப்பிலிருந்தும் இந்த அழுத்தம் இன்னும் கூடுதலாகிறது.
இந்த அழுத்தங்களில் இருந்து மாணவர்களைக் காக்க, நீட் தேர்வை ஒட்டி மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கு அப்பால், பள்ளிப் பிராயத்தின் 14 வயதிலிருந்தே மனதளவில் பக்குவமூட்டும் அரவணைப்பை வழங்க வேண்டும். ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்பிலும், மாணவருக்கு அதிகமான அழுத்தம் சேராது பார்த்துக்கொள்வதும் அவசியம்.
தமிழகத்தில் 1,10,971 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களின் மனநல ஆரோக்கியத்துக்காக 333 மனநல மருத்துவர்களைக் கொண்டு, 21,756 மாணவர்களுக்கான மன உளைச்சலைப் போக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை மேற்கொண்டுள்ளது. ஆனால் நடைமுறை விபரீதங்களைப் பார்க்கும்போது, இந்த முயற்சிகள் போதாது என்றே முடிவுக்கு வர வேண்டியதாகிறது. எனவே, தற்போது வழங்கிவரும் நீட் மாணவர்களுக்கான அரவணைப்புக்கு அப்பால், பெற்றோருக்கான ஆலோசனைகளை வழங்குவதும் முக்கியமாகிறது. ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சியின் அங்கமாக, மாணவர்களை மன அழுத்தத்தில் தள்ளாது கற்றல் கற்பித்தலை தொடர்வது குறித்தும், வகுப்பறை அளவில் மாணவர்களுக்கு மன ஆலோசனை வழங்கவும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை அளிக்கலாம்.