60 சதவீத இந்தியர்களின் மரபணுவிலேயே கரோனா தீவிரமாகத் தாக்கும் அபாயம்!


நுரையீரலில் தொற்று ஏற்படுவதை 2 மடங்காக அதிகரிக்கக்கூடிய மரபணுவை, விஞ்ஞானிகள் மனித உடலில் கண்டுபிடித்துள்ளனர். இதனால்தான் கரோனா நோய்த் தொற்று குறிப்பிட்ட இனக்குழுக்களைத் தீவிரமாகத் தாக்கியிருப்பதாக நிரூபித்துள்ளனர். குறிப்பாக இந்தியர்கள், எதனால் கரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் இந்த ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

கரோனா வைரஸ் மனித உடல் மீது தொற்றிக்கொள்ள முயலும்போது, நுரையீரலைச் சுற்றியுள்ள அணுக்களின் அமைப்பில் மனிதருக்கு மனிதர் வித்தியாசம் இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்களில் 60 சதவீதத்தினருக்கு எளிதில் கரோனா பற்றிக்கொள்ளும் மரபணுக் கூறு, பரம்பரை பரம்பரையாக இருந்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளை பூர்விகமாகக் கொண்டவர்களில், 15 சதவீதத்தினருக்கு மட்டுமே நோய் தாக்கும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதுவே, ஆப்பிரிக்க-கரீபியன் மூதாதையர்களின் மரபணுவைத் தாங்கிவந்தவர்களுக்கு 2 சதவீதம் மட்டுமே கரோனா வைரஸ் தீவிரமாகப் பாதிக்கக்கூடிய நிலை உள்ளதாம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மரபியல் துறையின் இணைப் பேராசிரியர் ஜேம்ஸ் டேவீஸ் தனது குழுவினருடன் இணைந்து, இந்த ஆராய்ச்சியை செய்துள்ளார். இவர், கரோனா நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் cutting-edge molecular தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பேராசிரியர் ஜேம்ஸ் டேவிஸ் மற்றும் குழுவினர் இந்த மரபணு ஆராய்ச்சியை மேற்கொண்டனர். மனித உடலின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான அணுக்களில் பொதிந்துள்ள மரபணு தகவல்களைச் சேகரித்து, அவற்றை ஒரு கணினி அல்காரிதமாக மாற்றினர் இந்தக் குழுவினர். குறிப்பிட்ட மரபணுக்களின் டிஎன்ஏ என்னமாதிரி கரோனா வைரஸுக்கு எதிர்வினை ஆற்றுகின்றன என்பதும் நுட்பமாக ஆராயப்பட்டது. LZTFL 1 எனப்படும் மரபணு கொண்டவர்களுக்கே, தடுப்பூசி முழுமையாக வேலை செய்வதாகவும் இதில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, கரோனா நோய் சிகிச்சைக்கு பொதுவான மருந்துகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இந்த ஆய்வு முடிவு நோயாளிகளின் மரபணு அமைப்புக்கு ஏற்ப, புதிய மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. இதுபோக, அவரவர் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை பொறுத்தே கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்திருக்கும்போது, இந்த ஆய்வு புதிய கோணத்துக்கான தேவையை வலியுறுத்தி உள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு, எதனால் கடுமையாக கரோனா பாதிப்பு ஏற்பட்டது, ஏன் இங்கு அதிகம் பேர் கரோனா தீவிரமடைந்து மரணித்தனர் போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் இந்த ஆராய்ச்சி அமைந்துள்ளது. மொத்தத்தில் சமூகப் பொருளாதார காரணிகளுக்கு அப்பால், மரபணுவும் 3-ம் உலக நாடுகளுக்கு எதிராக இருக்கிறதோ என்ற கவலையை இந்த ஆய்வு ஏற்படுத்தியுள்ளது.

x