பின்தங்கும் பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சித் துறை!


கடந்த அதிமுக ஆட்சியில் மிகக்கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான துறைகளில் முக்கியமானது பள்ளிக் கல்வித் துறை. துக்ளக் தர்பார் போல, தினம் ஒரு அறிவிப்பு, மறுநாளே அதைத் திரும்பப்பெறும் உத்தரவு என்று அதிகாரிகளும், அமைச்சரும் மாறிமாறி கூத்தடித்தார்கள். அதிமுக ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று வாக்களித்தவர்களில் கணிசமானோர், கல்வித் துறை மீதான அதிருப்தியில் இருந்தவர்கள் என்று தாராளமாகச் சொல்லலாம். ஆனால், புதிய அரசு கல்வித் துறையில் விடியலை ஏற்படுத்தியிருக்கிறதா என்றால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்காமல், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவே முடியாது என்று கல்வியாளர்கள் பலமுறை வலியுறுத்திவிட்டார்கள். ஆனால், இன்னமும் ஓராசிரியர் பள்ளி முறை தொடர்கிறது. 8-ம் வகுப்பு வரையுள்ள சில நடுநிலைப் பள்ளிகளில் 5-க்கும் குறைவான ஆசிரியர்களே இருக்கிறார்கள். மேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற முக்கியப் பணியிடங்களே காலியாகக் கிடக்கின்றன. இதை நிரப்ப, எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை பள்ளிக் கல்வித் துறை.

கரோனா காலத்தில் வேலையிழப்பு மற்றும் ஊதிய குறைப்பு காரணமாக, ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றினார்கள். இப்படி மட்டும், சுமார் இரண்டரை லட்சம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான கூடுதல் வசதிகள் குறித்தும் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எல்லா ஊர் அரசு தொடக்கப் பள்ளிகளிலும் மழலையர் பள்ளிகளையும் தொடங்கும் அரசின் திட்டமும் விரிவடையவில்லை.

இந்தச் சூழலில் இதோ பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. முதல்வர் ஸ்டாலின் அரசுப் பள்ளி ஒன்றை ஆய்வு செய்தது பேசுபொருளாகியிருக்கிறது. கூடவே, ’இல்லம் தேடி கல்வி’ எனும் அவரது சிறப்புத் திட்டத்தை எதிர்த்தும், வரவேற்றும் விவாதங்களும் நடக்கின்றன.

பிரின்ஸ் கஜேந்திரபாபு

அரசுக்கு ஈகோ பிரச்சினையா?

உண்மையில் கல்வியாளர்கள் எதிர்பார்த்தது என்ன, இந்த அரசின் செயல்பாடுகள் எப்படியிருக்கிறது என்று ’பொதுப் பள்ளிகளுக்கான மேடை’ பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டபோது, ”அக்டோபரில் பெருந்தொற்றின் 3-ம் அலை உச்சத்தில் இருக்கும் என்று ஜூன் மாதம் ஐசிஎம்ஆர் எச்சரித்தது. அதனடிப்படையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளி செல்ல முடியாத சூழலில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை வகுப்போம் என்று ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். ஆனால், அந்தத் திட்டம் குறித்த இறுதி முடிவை எடுக்கவே செப்டம்பர் இறுதியாகிவிட்டது. அந்தத் திட்டத்தைத் தொடங்கும் முன்பே பள்ளிக்கூடம் திறப்பு குறித்த அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

அப்படியான சூழலில், அந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்? ஆனால், இன்றைய அரசு இதை ஈகோ பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, வீம்புக்கு ’இல்லம் தேடி கல்வி’ திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. 2 வருடங்களாக கற்றல் திறனில் பின்தங்கியிருக்கும் குழந்தையை, வெறும் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் தன்னார்வலர் ஒருவர், வெறும் ஆறே மாதத்தில் சரி செய்துவிடுவார் என்றால், அப்புறம் எதற்கு 30, 40 ஆயிரம் சம்பளம் பெறும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்? இப்படிக் கேட்க வைக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம் போலத் தெரிகிறது. இப்படியே போனால், இந்த ஆட்சி 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது அரசுப் பள்ளிக்கூடம் என்று ஒன்று இருக்குமா என்பதே சந்தேகம்தான்” என்றார்.

உமா மகேஸ்வரி

ரூ. 200 கோடியையும் அரசு பள்ளிகளுக்கே தாங்க...

”மத்திய கல்விக் கொள்கையை முற்றாக நிராகரித்துவிட்டு, தமிழகத்திற்கென தனியாக புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்பது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஆனால், இன்றோ மத்திய கல்விக்கொள்கையின் கூறுகளைத்தான் தமிழக அரசு சட்டமாகவும் திட்டமாகவும் நிறைவேற்றுகிறது. உதாரணமாக, கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வி இயக்குநருக்கு மேல் ஆணையர் என்ற பெயரில் ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தப் பதவியை ரத்து செய்வார்கள் என்று பார்த்தால், புதிதாக வந்த திமுக அரசோ அந்தப் பதவியை வைத்துக்கொண்டு, இயக்குநர் பதவியை ஒழித்துவிட்டு அனைத்து பொறுப்புகளையும் பள்ளிக்கல்வி ஆணையரிடமே ஒப்படைத்துவிட்டது.

கல்வி உரிமை பெறும் சட்டத்தின்கீழ் ஒவ்வொரு தனியார் பள்ளியும் 25 சதவீத மாணவர்களுக்கு இலவச கல்வி தர வேண்டும் என்ற விதி, அரசுப் பள்ளிகள் அதிகம் இல்லாத பிஹார் போன்ற மாநிலங்களுக்கே பொருத்தமானது. தமிழ்நாட்டில் அந்த நிதியை முழுமையாக அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு ஏற்கவில்லை. கல்வியில் அக்கறையுள்ள எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்களிடம் கருத்துகேட்டுத் திட்டங்களைத் தீட்டினாலே போதுமானது. வயது வந்தோருக்குத்தான் முறைசாரா கல்வி பயனளிக்கும். குழந்தைகளுக்கு முறைசார் பள்ளிக்கல்வி அளிப்பதே அரசின் கடமை என்பதை உணர்ந்து, இல்லம் தேடி கல்விக்கென ஒதுக்கப்பட்ட 200 கோடி ரூபாயையும் அரசுப் பள்ளிகளுக்கே திருப்பிவிட முதல்வர் ஆணையிட வேண்டும்” என்கிறார் கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரி.

சிவா

கற்றல் பின்னடைவு

”கல்வித் துறையில் மாற்றம் கொண்டுவருவதை வலியுறுத்த பின்லாந்து பற்றிப் பேசுவோர், அங்கே ஆசிரியர்கள் எப்படி வார்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும் பேச வேண்டுமல்லவா? தமிழ்நாட்டில் ஆசிரியர்களை உருவாக்குகிற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும் சரி, கல்வியியல் கல்லூரிகளும் சரி, உருப்படியான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் செயல்படவில்லை. அதை மாற்றாமல், இங்கே கல்வித் துறையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்ப்பது வீண் வேலை. மத்திய கல்விக் கொள்கையில் ஏராளமான பாதகமான அறிவிப்புகள் இருந்தாலும், ஓரிரு நல்ல அம்சங்களும் இருந்தன. அதில் ஒன்று, கற்றல் பின்னடைவு கொண்ட மாணவர்களுக்குத் தன்னார்வலர்களைக் கொண்டு பாடம் கற்பிப்பது.

அதாவது, 5-ம் வகுப்பு படித்தாலும் 3-ம் வகுப்பு பாடத்தை வாசிக்கத் தெரியாத மாணவர்களுக்குத் தன்னார்வலர்களைக் கொண்டு சொல்லித்தந்து, அவர்களின் கற்றல் பின்னடைவை களையும் திட்டம். இது உண்மையிலேயே வரவேற்க வேண்டிய அம்சம். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் இருப்பதால், அதில் மிகவும் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்குக் கூடுதல் கவனத்துடன் சொல்லித்தருவது ஆசிரியர்களுக்குச் சிரமமான காரியம். அதைத் தன்னார்வலர்கள் செய்தால் வரவேற்கத்தான் வேண்டும்” என்கிறார் ’கலகல’ வகுப்பறை சிவா.

கல்வி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ”இடித்துக்கட்ட வேண்டிய நிலையில் உள்ள பாழடைந்த கட்டிடமாக இருக்கிறது தமிழக கல்வித் துறை. அதை முற்றிலும் சீரமைக்க வேண்டிய அரசு வெறும் வெள்ளையடிக்கும் வேலையை மட்டும் பார்க்கக்கூடாது. கரோனாவை கட்டுப்படுத்த குழு, பொருளாதாரத்திற்கென தனிக்குழு அமைத்ததுபோல பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கவும் ஒரு குழு அமைக்க வேண்டும்” என்றார்.

வீ.ந.சோ

தமிழ் வளர்ச்சித் துறை

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஏமாற்றம் தருகிற மற்றொரு முக்கியமான துறை தமிழ் வளர்ச்சித் துறை. கடந்த ஆட்சியில் பள்ளிக் கல்விக்குத் தனி அமைச்சரும், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைக்குத் தனி அமைச்சரும் இருந்தார்கள். ஆனால், இப்போது தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுதான் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறையைக் கூடுதலாகக் கவனிக்கிறார். தொழில் துறையில் செலுத்துகிற அதே கவனத்தை தமிழ் வளர்ச்சித் துறை மீது செலுத்த அவருக்கு ஆர்வம் இருக்கிறது என்றாலும், நேரமில்லை.

பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி கட்டாயம், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தமிழ், இந்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ், தமிழக வேலைவாய்ப்புகளில் 75 சதவீதம் தமிழர்களுக்கே என்று பெரிய பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறது திமுக. ஆனால், சின்னச் சின்ன விஷயங்களில்கூட அதனால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. ஒவ்வொரு வட்ட, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் தமிழ் அலுவல் மொழி வளர்ச்சிப் பிரிவு ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு மாநகராட்சியிலும் செம்மொழிப் பூங்கா ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதுபற்றி திருச்சியைச் சேர்ந்த தமிழார்வலர் வீ.ந.சோமசுந்தரத்திடம் கேட்டபோது, ”தமிழ் வளர்ச்சித் துறைக்கு அந்தத் துறையில் உண்மையான அக்கறைகொண்ட தங்கம் தென்னரசு அமைச்சராக இருப்பது எங்களைப் போன்றோருக்கு மகிழ்ச்சி. எளிதில் தொடர்புகொள்ளும் அமைச்சரான அவர்தான், தமிழறிஞர் இளங்குமரனாருக்கு அரசு மரியாதை கிடைக்கவும், இளங்குமரனார் மற்றும் தொ.ப.வின் நூல்களை அரசுடமையாக்கவும் ஏற்பாடு செய்தார். இருப்பினும் தமிழ் வளர்ச்சித் துறை இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. உதாரணமாக, தமிழ் ஆட்சிமொழி ஆணையம் உடனே தேவை. கர்நாடகாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பே அது இருக்கிறது. அதுவும் வெறும் ஆலோசனைக்குழுவாக இல்லாமல், தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக உள்ளது.

மேலும், அரசு அதிகாரிகளோ, அமைச்சர்களோ கன்னடம் அல்லாத மொழியில் பேசினால், கன்னட வளர்ச்சித் துறை அமைச்சர் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவிப்பார். கேரளா, ஆந்திரா, தெலங்கானாவிலும் அந்தந்த மாநில ஆட்சிமொழி ஆணையம் உள்ளது. தமிழகத்திலும் அதை ஏற்படுத்த வேண்டும். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கிறது. ஆனால், அதை நிரப்புகிற ஊழியர்கள் ஆங்கிலத்தில்தான் கணினி தட்டச்சு செய்கிறார்கள். மின்வாரியத்திலும் இதே நிலைதான்.

தமிழ்நாட்டில் பல அரசாணைகளே தமிழில் இல்லை. கர்நாடகாவில், ஆங்கிலத்தில் ஏதாவது ஆவணம் வந்தால் நான் கையெழுத்துப்போட மாட்டேன் என்று முதல்வராக இருந்த சித்தராமையா அறிவித்தார். அப்படியான அறிவிப்பு இங்கேயும் வர வேண்டும்” என்றார்.

அறநிலையத் துறையைப் போல தமிழ் வளர்ச்சித் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். நிறைவேறுமா?

x