ஆக்கத்துக்கே அணுசக்தி: நேருவுடன் கைகோத்த ’தம்பி’!


நேருவுடன் ஹோமி பாபா

காம்பிரிட்ஜில் இயற்பியல் படிக்கப்போன ஹோமி பாபாவை, 2-ம் உலகப் போர் திருப்பி அனுப்பியது. இந்தியாவில் முடங்கிய பாபா, அந்தப் போரில் உலகை உலுக்கிய அணுசக்தியை இந்தியாவும் கைகொள்வதற்கான அடித்தளத்தை உருவாக்கிவிட்டு மறைந்தார்.

எல்லை நெடுக எதிரிகளின் தொல்லை அதிகரித்திருக்க, இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தையான டாக்டர் ஹோமி ஜெஹாங்கிர் பாபாவின்(1909-1966) 112-வது பிறந்தநாளை நாடு இன்று(அக்.30) நன்றியோடு நினைவுகூர்கிறது. இன்று, உலகின் பிரதான அணுசக்தி தேசங்களில் ஒன்றாக இந்தியா விளங்குவதற்கு ஹோமி பாபாவே காரணம்.

ஆய்வொன்றை விளக்கும் பாபா

இயல்பிலேயே இயற்பியலில் நாட்டம் கொண்ட ஹோமியின் விருப்பத்துக்கு மாறாக, அவரது தந்தை மெக்கானிக்கல் பொறியியல் பிரிவைப் படிக்க கட்டாயப்படுத்தினார். தந்தையை சமாதானப்படுத்த அந்தத் துறையில் தன்னை நிரூபித்துவிட்டு, இயற்பியல் கனவுடன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்றார் ஹோமி பாபா. அணுவியலில் அடிப்படை கருத்தாக்கங்களை தந்த டென்மார்க் அறிவியலாளரான நீல்ஸ் போர், ஹோமி பாபாவின் ஆசானாக கேம்பிரிட்ஜில் வழிகாட்டினார். அத்துறையில் மென்மேலும் ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு வசதியாக, வெளிநாட்டு வாழ்க்கையே அவருக்கு வாய்க்க இருந்தது. ஆனால், 2-ம் உலகப்போர் ஹோமி பாபாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. நீடித்த போரால் ஹோமியின் ஆய்வுகள் இந்தியாவில் தொடரவும் அதுவே காரணமானது.

நேரு மற்றும் இந்திராவுடன் ஹோமி பாபா

பெங்களூர் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் சி.வி.ராமனுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய பிறகு, வெளிநாட்டு கனவை உதறினார். ’இந்தியாவின் லியோனர்டோ டி வின்சி’ ஹோமியை பின்னாளில் ராமன் புகழக் காரணமானார். அணுசக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது, உலக அமைதிக்கு முக்கியத்துவம் தருவது என நேருவுடன் இணைந்து செயல்பட்டார். நேருவை அண்ணா என்று விளிக்கும் அளவுக்கு இருவரிடையே வாஞ்சை இருந்தது. தேசத்தின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் கனவுகளுக்காக ஹோமியுடன் பின்னிரவு வரை தொலைபேசி உரையாடலில் நேரு ஆழ்ந்திருப்பாராம். பேட்டியொன்றில் இந்திரா காந்தி தந்த தகவல் இது.

அணுசக்தி எரிபொருளுக்காக உலக நாடுகள் தட்டுப்பாடான யுரேனியத்திடம் சரணடைந்திருந்தபோது, இந்தியாவில் தாராளமாகக் கிடைக்கும் தோரியத்தை ஹோமி பாபா வரிந்துகொண்டார். இந்திய அணுசக்தி திட்டத்தின் பாய்ச்சலுக்கு அதுவும் காரணமானது.

ஐன்ஸ்டின்(இடது) உள்ளிட்ட அறிவியலாளர்களுடன் ஹோமி பாபா(வலது)

குவாண்டம் கோட்பாடு உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது, காஸ்மிக் கதிர் உருவாக்கத்தை விவரித்தது, எலெக்ட்ரானும், பாஸிட்ரானும் ஒன்று சேரும்போது துகள்களாகச் சிதறும் என்பதைக் கண்டுபிடித்தது, துணை அணுத் துகள்களான ‘மியோன்’ என்பதன் இருப்பை யூகித்துச் சொன்னது, இந்தியாவின் முதல் எலெக்ட்ரானிக் டிஜிட்டல் கம்ப்யூட்டரை டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் சயின்ஸ் உருவாக்க உந்துதல் தந்தது, 1956-ல் மும்பை அருகே டிராம்பேயில் ஆசியாவின் முதல் அணு உலை அமைய வித்திட்டது என அசாத்திய அறிவியல் அடியெடுப்புகளில் எல்லாம் ஹோமி பாபா இருந்தார். நோபெல் பரிசுக்காக 5 முறை அவர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.

1966 ஜன.24-ல், ஆல்ப் மலைச்சிகரத்தில் நடந்த மர்ம விமான விபத்தில் ஹோமி பாபா உயிரிழந்தார். பாபாவால் இந்தியாவின் அணுசக்தி அசுர பலம் பெறும் என்று கவலையடைந்த அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வால், ஹோமி பாபாவின் விமான விபத்து ஜோடிக்கப்பட்டதாக அமெரிக்க பத்திரிகையாளர்கள் பின்னாளில் எழுதினார்கள்.

ஹோமிபாபாவுக்கான அஞ்சலியாக, ஓடிடி தளமான ’சோனி லிவ்’, அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள தனது ’ராக்கெட் பாய்ஸ்’ என்ற வலைத்தொடரின் பிரத்யேக தொகுப்பை இன்று(அக்.30) வெளியிடுகிறது. ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் என 2 தலைசிறந்த இந்திய விஞ்ஞானிகளின் வாழ்க்கையையும், அறிவியல் சாதனையையும் ’ராக்கெட் பாய்ஸ்’ வலைத்தொடர் பதிவு செய்திருக்கிறது. கீழே இருப்பது ’ராக்கெட் பாய்ஸ்’ ட்ரெய்லர்.

x