இனிமையாகட்டும் பள்ளி திரும்புதல்!


தமிழ்நாட்டில் நவம்பர் 1 முதல், முதலாவது வகுப்பிலிருந்து 8-வது வகுப்பு வரையிலான வகுப்பு மாணவர்களும் பள்ளிக்குத் திரும்பப் போகின்றனர். மனிதகுல வரலாற்றிலேயே இருந்திராத வகையில் மிகப் பெரிய பெருந்தொற்று நோயிலிருந்து மாணவச் செல்வங்களைக் காக்க, கல்விக்கூடங்கள் ஓராண்டுக்கும் மேலாக மூடியிருந்தன. இப்போது பள்ளிக்குத் திரும்பும் அனைத்து மாணவர்களும் ஒரே மனநிலையில், ஒரே பொருளாதார வசதியில் நிச்சயம் இருக்கமாட்டார்கள். இடைக் காலத்தில் சில குழந்தைகள் தங்களுடைய தாயையோ அல்லது தந்தையையோகூட கோவிட் 19 நோயால் இழந்திருப்பார்கள். ஆசிரியர்களும் பள்ளிக்கூட அலுவலர்களும்கூட இவ்வித பாதிப்புகளுக்கு ஆளாகியிருப்பார்கள்.

பொருளாதார ரீதியிலும் பின்னடைவு இருந்திருக்கும். எனவே அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என்று அனைவரும் இணைந்து செயல்பட்டு மீள வேண்டிய நேரம் இது.

கல்வியை போதிப்பதைவிட, அவர்களை உற்சாகப்படுத்துவதும் நம்பிக்கை ஊட்டுவதும் முக்கியம். காரணம், இது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.

மனதளவில் தயார் செய்வோம்

பள்ளிக்கூடங்களில் ஒரு பெஞ்சுக்கு 2 மாணவர்கள், ஒரு வகுப்பறைக்கு 20 மாணவர்கள், கை கழுவ சோப்பு, வாயை மூடத் துணி என்ற ஏற்பாடுகளையெல்லாம் பள்ளிக்கூடங்கள் செய்திருக்கும். இவற்றையெல்லாம்விட முக்கியம், வரும் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆசிரியர்கள் பேசுவதும் செயல்படுவதும்தான். “இத்தனை நாள் வீட்டில் ஆட்டம் போட்டீர்கள், படிப்பு – எழுத்தெல்லாம் மறந்திருக்கும், ஒழுங்காப் படிங்க, இல்லைன்னா…” என்று குழந்தைகளை மிரட்டக் கூடாது. பெருந்தொற்று தொடர்பாகச் சொல்ல வேண்டிய சுகாதார முன்னேற்பாடுகளை மட்டும் சொல்லிவிட்டு, அவர்களை மனதளவில் மற்ற மாணவர்களுடன் நட்போடு பழக அனுமதிக்க வேண்டும். நேரடியாகப் பாடம், படிப்பு என்று போகாமல் இந்த இடைப்பட்ட நாள்களில் அவர்கள் புதிதாக அறிந்துகொண்டவை என்ன, அவர்களுக்கு விடை தேவைப்படும் கேள்விகள் என்ன, நம்பிக்கையை ஊட்டும் உதாரணங்கள் என்ன என்று உரையாடி மனதைத் தேற்ற வேண்டும்.

ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களும் தங்களுடைய மாணவச் செல்வங்களை நேரில் காண மாட்டோமோ என்று ஏங்கித் தவிப்பவர்கள்தான். கல்வியைப் போதிப்பதைவிட அவர்களை உற்சாகப்படுத்துவதும் நம்பிக்கை ஊட்டுவதும் முக்கியம். காரணம், இது அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம்.

வெற்றியின் முதல் படி!

மாநிலம் முழுவதும் மாணவர்களுடன் உரையாடுவதற்கான பொது வழிகளைக்கூட, தேர்ந்த உளவியலாளர்களிடம் கேட்டு பள்ளி கல்வித் துறை அதை அரசு, தனியார் பள்ளி நிர்வாகிகளுக்குத் தெரிவிக்கலாம். வகுப்பறைகளில் முதலில் சில நாட்களுக்கு இயல்பு நிலை தொடங்கிவிட்டதா என்பதை ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்துகொண்ட பிறகே, பாடங்களைத் தொடங்க வேண்டும். இப்படிப் பாடங்களைத் தொடங்கும்போது, இழந்த நாட்களை நினைத்து வீட்டுப் பாடங்களை எல்லா ஆசிரியர்களும் ஒரே சமயத்தில் திணிக்க முற்படக் கூடாது. தலைமை ஆசிரியரிடம் அல்லது தனியார் பள்ளி நிர்வாகத்திடம் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு வாரத்துக்கெல்லாம் டெஸ்ட், அசைன்மென்ட் என்று ஆசிரியர்கள் அழுத்தம் தரக்கூடாது. நீண்ட தொலைவு ஓட வேண்டிய பேருந்தை ஓட்டுநர்கள், இன்ஜினை ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் ஓடவிட்ட பிறகு நகர்த்துவதற்கு ஒப்பாக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். மாணவர்களும் எதிர்காலம் குறித்து கவலையோ அச்சமோ கொள்ளத் தேவையில்லை. மிகப் பெரிய சோதனைக் காலத்தில், உங்களையும் அறியாமல் நீங்கள் வெற்றிகரமாக மீண்டுவிட்டீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் அடையப்போகும் பல வெற்றிகளுக்கு இது முதல்படி.

பாடங்களைப் படிக்கத் தொடங்கும் முன்பாக மனதை ஒருமுகப்படுத்திக்கொள்ளுங்கள். அன்றாடம் சொல்லித் தரும் பாடத்தை வீட்டுக்குச் செல்லும்போதோ, இரவு படுக்கும்போதோ லேசாக அசைபோடுங்கள். முழுப் பாடத்தையும் நினைவில் கொண்டுவரத் தேவையில்லை, இன்று என்ன பாடம் நடந்தது என்பதை மட்டும் ஒரு வரி நினைத்துப் பாருங்கள். அன்றைக்குச் சொல்லிக் கொடுத்தது முழுதும் உங்கள் மனதில் பதிவாகிவிடும். கீரை, பழங்கள், நவதானியங்கள் என்று எளிமையான உணவைச் சாப்பிடுங்கள். இவை உடலை உரமாக்கும். நிறைய தண்ணீர் குடியுங்கள். நன்றாக விளையாடுங்கள். தினமும் 10 நிமிடம் யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள். ஆடைகளையும் தூய்மையாக அணியுங்கள். நன்றாகப் படிப்பேன், நிறைய தெரிந்துகொள்வேன், உயர் கல்வி படிப்பேன் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே பலமுறை சொல்லிக்கொள்ளுங்கள்.

ஓய்வும் உற்சாகமும்

படிப்பும் விளையாட்டும் இல்லாதபோது உடலுக்கு நன்றாக ஓய்வு கொடுங்கள். படுத்துத் தூங்கினால்தான் ஓய்வு என்றில்லை. கைப்பேசி, தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றைப் பார்ப்பதைப் பொழுதுபோக்கு என்று நினைத்து அதில் நேரத்தைச் செலவிடாதீர்கள். அது உங்களுடைய நேரத்தை வீணாக்குவதுடன், உங்களுடைய கற்றல் திறனையும் மழுங்கடித்துவிடும். வீடுகளில் உள்ளவர்கள், குறிப்பாகப் பெண்கள் தொலைக்காட்சிகளில் தொடர்கள், திரைப்படங்கள் பார்க்கும் வழக்கமிருந்தால் குழந்தைகள் நலனுக்காக அவற்றையெல்லாம் கைவிடுங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் இல்லையென்றாலும் பக்கத்து வீட்டில் படிக்கும் குழந்தைகளுக்காக, இந்தத் தியாகத்தைச் செய்யுங்கள். பெருந்தொற்றுக்காலத்தில் வீட்டோடு இருக்க நேர்ந்ததால் பலருக்கு இந்த வியாதி பற்றிக்கொண்டிருக்கிறது.

பாடப் புத்தகங்கள் படிப்பதில் சோர்வு ஏற்பட்டால், விளையாடுங்கள் அல்லது வேறு நல்ல புத்தகங்களைப் படியுங்கள். ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர்கள் குழுவாக இணைந்து, புதிய திறப்புக்குப் பிறகு மாணவர்களிடையே தோன்றியுள்ள மாற்றங்களைப் பற்றி உங்களுக்குள் விவாதியுங்கள். தலைமை ஆசிரியருடன் இணைந்து மாநிலக் கல்வி அதிகாரிகளுக்குத் தெரிவியுங்கள்.

கல்வித் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு...

மாணவர்களுடைய பாடத் திட்டங்களையும் கற்பிக்கும் முறைகளையும் மாற்றியமைக்கக் கூட உங்களுடைய தகவல்கள் உதவி செய்யும். கல்வித் துறை அதிகாரிகளுக்கு முக்கிய வேண்டுகோள், எல்லா மாணவர்களும் வந்தார்களா, வகுப்புகள் நடக்கின்றனவா என்ற கேள்விகளுடன் நின்றுவிடாமல் மாணவர்களிடையே உடலளவிலும் உள்ளத்தளவிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அறிந்துகொள்ளுங்கள். பள்ளிக்கூடங்களில் வழக்கம்போல ஆண்டு விழா, பேச்சுப் போட்டி, நாடகப் போட்டி, விளையாட்டுப் போட்டி என்று பலவற்றை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் புதிய சூழலுக்கேற்ப அவற்றைத் தயார் செய்யுங்கள். பள்ளி தொடங்கும் நேரத்தைக் காலையில் 10 மணி என்றில்லாமல் 9 மணிக்கே தொடங்கி, மாலையில் விரைவாக வீட்டுக்கு அனுப்புவது பற்றியும் சிந்தியுங்கள். தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் பேருந்து, ரயில்கள் மூலமும் வாகனங்களிலும் பள்ளிக்கூடங்களுக்கு வருகிறார்கள். அவர்கள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வீடு திரும்புவது முக்கியம். இப்போது மழைக்காலமாகவும் இருப்பதால் கூடுதல் கவனம் அவசியம்.

பள்ளிகள் திறந்து மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வரவிருப்பதால் பள்ளிக் கல்வித் துறை மட்டுமல்லாது காவல் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறைகள் ஒருங்கிணைந்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தற்காலிக உடல் நலிவுகளுக்கான மருந்து மாத்திரைகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியைத் தயார் செய்துகொள்ளுங்கள். அருகில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர், செவிலியர்களுடைய செல்பேசி எண்கள் போன்றவற்றைப் பெற்று வைத்துக்கொள்வதும் நல்லது. மாணவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி அல்லது வேறு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சோதனைக்கு உட்படுத்துவது பள்ளிக்கூடங்களின் கடமை. மாதாந்திரத் தேர்வு, வகுப்புத் தேர்வு, வீட்டுப்பாடம் போன்றவற்றில் கெடுபிடிகள் வேண்டாம். படிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினால் போதும்.

அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் பாத்திரங்கள் கழுவுவதிலிருந்து நல்ல குடிநீரைப் பயன்படுத்துவது வரையில் அனைத்தையும் உரியவர்கள் அன்றாடம் சோதித்துப் பார்ப்பது நல்லது. சமையல் பாத்திரங்களைப் போலவே சமைக்கப்படும் அரிசி, காய்கறிகளையும் நல்லதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது கூடுதல் அவசியம். சமையலர்களுக்கும் உதவியாளர்களுக்கும் முழு உடல் பரிசோதனை கட்டாயம். தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கூட ஊழியர்கள் தங்களுடைய பள்ளிக்கூட வளாகங்களை அன்றாடம் இருமுறை சுற்றிவந்து – காலையில் மாணவர்கள் வருவதற்கு முன் – மாலையில் மாணவர்கள் சென்ற பிறகு – பார்வையிடுவது நல்லது. அவரவர் இருப்பிடம் சார்ந்த உள்ளாட்சி மன்றங்களின் உதவியுடன் குப்பைகள், கழிவுகளை அகற்ற வேண்டும். வெறி நாய், பூனை, குரங்கு போன்றவை பள்ளி வளாகங்களுக்குள் வந்தால் அலட்சியமாக இருக்க வேண்டாம். பள்ளிகள் திறந்து மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் வரவிருப்பதால், பள்ளிக் கல்வித் துறை மட்டுமல்லாது காவல் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறைகள் ஒருங்கிணைந்து அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதில் இந்தியாவுக்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் தன்னார்வலர்களையும் உதவிக்கு இணைத்துக் கொள்ளலாம்.

மாணவர்களிடம் அவர்களுடைய குடும்பநிலை, தந்தையாரின் வேலை, வருமானம், வீட்டில் படிப்பதற்கேற்ற சூழல், இணையவழிக் கல்விக்கு அவர்களிடம் இருக்கும் வசதிகள் போன்றவற்றை வினாப்பட்டியல் மூலம் தெரிந்துகொண்டு கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கலாம். அவை மாணவர்களுக்கான கல்வியைத் திட்டமிடவும், மேம்படுத்தவும் உதவும். அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் இணையவழிக் கல்விக்கான அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கலாம். அவை மட்டுமின்றி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்தும் தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய கட்டங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளுடன் இருப்பது கட்டாயம் என்று நிர்ணயித்து தமிழக அரசு சட்டமே இயற்றலாம். பள்ளிக்கூடங்களில் ஆய்வகங்கள், நூலகம், விளையாட்டுத் திடல், பொது நிகழ்ச்சிக்கான அரங்கம் இருக்கும்வகையில் நல்ல காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் உள்ளதாக பாதுகாப்பான கட்டிடங்களுடன் இருப்பதை உறுதிசெய்வது அவசியம். பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கு உள்ளதைப் போன்ற அடித்தளக் கட்டமைப்பு வசதிகள் பள்ளிக்கூடங்களுக்கு அவசியம். பள்ளிக்கட்டிடங்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்புக்காக என்றே பொதுப்பணித் துறையில் தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

கல்விக்கான நிதி என்பது செலவல்ல, அதுதான் எதிர்காலத் தலைமுறைக்கான நிலையான முதலீடு. அதை அனைவரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்!

அரசுகள் கவனிக்க வேண்டியவை...

நாடு முழுவதும் 25 கோடி மாணவர்கள் ஒன்று முதல் 10-வது வகுப்பு வரையில் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்த பள்ளிக்கூடங்கள் 58,897. அவற்றில் தொடக்கப்பள்ளிகள் 35,621, நிடுநிலைப் பள்ளிகள் 9,392, உயர்நிலைப் பள்ளிகள் 5,788, மேல்நிலைப் பள்ளிகள் 8.096. மொத்த ஆசிரியர்கள் 5.6 லட்சம். அரசு பள்ளிக்கூட ஆசிரியர்கள் 2.27 லட்சம், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 77,000, தனியார்ப் பள்ளிகளில் 2.53 லட்சம். தனியார்ப் பள்ளிகளில் கட்டணம் அதிகம் என்ற கூக்குரல்கள் மட்டும் ஒலிக்கின்றன.

தனியார் பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், நிலையான வேலைக்கான ஆணை, பதவி உயர்வு ஆகியவற்றைப் பெற்றுத்தர சட்டமியற்றி தமிழக அரசு முன்னோடியாகத் திகழ வேண்டும். இலவசமாகக் கல்விதரும் அரசுப் பள்ளிகளைவிட, தனியார் பள்ளிகளில்தான் மாணவர்கள் அதிகம் சேர்கிறார்கள். அதற்கு ஒரே காரணம், அங்கு கல்வியின் தரம் அரசுப் பள்ளிகளைவிட அதிகம் என்று பெற்றோர் நினைப்பதும் ஆங்கில வழிக் கல்வியும்தான். அடித்தளக் கட்டமைப்பு வசதிகளும் கவர்ச்சியூட்டுகின்றன. இந்த அம்சங்களை அரசுப் பள்ளிக்கூடங்களில் சேர்ப்பது அவசியம். அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்களுக்குக் கற்பித்தலைத் தவிர வேறு வேலைகளைத் தரக்கூடாது, ஆசிரியர்களும் தாங்கள் பணியாற்றும் ஊரிலேயே தங்கி, நல்ல கல்வியைத் தருவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் படிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்களும் தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்களும் பணிபுரிகிறார்கள். மத்திய அரசு கல்விக்கும் சுகாதாரத்துக்கும் மொத்த ஜிடிபியில் குறைந்தபட்சம் 5 சதவீதம் ஒதுக்க வேண்டாமா என்று கேட்போர் தமிழ்நாட்டில் அதிகம். அந்த ஒதுக்கீட்டை ஒரு சில ஆண்டுகளுக்காவது தமிழக அரசு ஒதுக்கி, அடித்தளக் கட்டமைப்புகளை ஏற்படுத்திவிட்டால், பிறகு வரும் ஆண்டுகளுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம், படிகள், ஓய்வூதியம் வழங்கினால் மட்டும் போதும். இப்போதைய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசுடன் தொடர்புடைய தமிழக பாஜக தலைவர்களும், தங்கள் தலைவர்களிடம் இதுகுறித்து அழுத்தம் தர வேண்டும். கல்விக்கான நிதி என்பது செலவல்ல, அதுதான் எதிர்காலத் தலைமுறைக்கான நிலையான முதலீடு. அதை அனைவரும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்!

x