ஆதரவற்ற குழந்தைகளின் காப்பான்... நெகிழவைக்கும் ஆசிரியர்!


ஆசிரியர் பழனிகுமார்

ஏட்டுக்கல்வியை போதிப்பது மட்டுமே ஆசிரியரின் பணி அல்ல; கண்ணில் பார்க்கும் எளிய மனிதர்களை அதிலும் ஆதரவின்றித் தவிக்கும் ஏழைக் குழந்தைகளை கைதூக்கிவிடுவதும் ஆசிரியரின் பணிதான் என நெகிழ்ச்சியோடு சொல்லும் பழனிகுமார், தன் சேவை குணத்தால் பிரமிப்பூட்டும் ஆசான்!

கல்விப்பணிக்கு அப்பாலும் மாணவர்களின் நலனுக்காகக் களமாடும் இவரது தொடர் முயற்சிகள் கவனம் குவிப்பவை. அந்தவரிசையில் இப்போது ஆதரவற்ற 3 குழந்தைகளுக்கு இவர் செய்திருக்கும் முன்னெடுப்புகள் கவனிக்கத்தக்கவை.

மூன்று குழந்தைகள்

தென்காசி மாவட்டத்தின் சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பாயி. இவரது கணவர் கோபால். இந்தத் தம்பதியின் மகளான ஜெயாவுக்கும் கூலித்தொழிலாளியான முத்தையாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு 3 பெண்குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் வறுமை காரணமாக மனம் ஒடிந்த ஜெயா, விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். அடுத்த 4 நாட்களிலேயே 3 குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி கரைசேர்ப்பது என்னும் அச்சத்தில், அவரது கணவர் முத்தையாவும் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் நடந்து மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், இந்தத் தம்பதியின் மூத்தமகள் பானுமதி இப்போது 6-வது வகுப்பும், 2-வது மகள் அனுஷ்கா 4-ம் வகுப்பும், கடைசி மகள் முத்துலெட்சுமி 2-ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்த மூவரும், இப்போது சொக்கம்பட்டி கிராமத்தில் தன் பாட்டி கருப்பாயியின் அரவணைப்பில் வளர்ந்துவருகின்றனர். இந்தக் குழந்தைகளுக்காக முகநூல் நண்பர்களின் முயற்சியோடு தொடர் உதவிகளைச் செய்துவருகிறார் ஆசிரியர் பழனிகுமார். இத்தனைக்கும், இவர் பணி செய்யும் பள்ளியைச் சேர்ந்தவர்கள் அல்ல இந்தக் குழந்தைகள். ஆனாலும் இவர்களுக்கான உதவியை மனிதநேயத்தோடு செய்கிறார் ஆசிரியர் பழனிகுமார்.

இதுகுறித்து பழனிகுமார் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, ‘நான் கிருஷ்ணாபுரத்தில் உள்ள திருநாவுக்கரசுப் பள்ளி ஆசிரியர். அரசு உதவிபெறும் எங்கள் பள்ளிக்கென ஒரு முகநூல் பக்கமும் இருக்கிறது. அதில் முன்னாள் மாணவர்களும், பல நல்ல உள்ளம் படைத்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் முயற்சியால் எங்கள் பள்ளி குழந்தைகளுக்கு 4 புது சீருடைகள், தொடுதிரையுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ், ஷூ, சாக்ஸ் என சகலவசதிகளும் செய்துகொடுத்துள்ளோம். எங்கள் பக்கத்துப் பகுதியான சொக்கம்பட்டியில் பெற்றோர் இல்லாமல் 3 குழந்தைகள் தவிப்பதாகத் தகவல் கிடைத்தது. எங்கள் பள்ளிக்குழந்தைகளாக இல்லாவிட்டாலும் அவர்களும் குழந்தைகள்தானே என மனம் துடித்தது. நேரில் போய் பார்த்தேன். பாட்டியின் அரவணைப்பில் அவர்கள் இருந்தார்கள். பாட்டிக்கோ 67 வயது ஆகிறது. குழந்தைகளோ மிகவும் சிறியவர்களாக இருந்தார்கள். உடனே அவர்களுக்கு ஏதாவது உதவவேண்டும் என முடிவெடுத்தேன்.

அப்போதுதான் அவர்கள் வீட்டில் தண்ணீர் வசதி இல்லாததும், பாட்டி வெகுதூரம் நடந்துபோய் சிரமப்பட்டு தண்ணீர் பிடித்துவருவதும் தெரியவந்தது. உடனே, எங்கள் பள்ளியின் முகநூல் பக்கத்தில் இந்தக் குழந்தைகளின் சிரமம் குறித்து எழுதினோம். பலரும் நேசக்கரம் நீட்டினார்கள். ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதி வந்து சேர்ந்தது. அதன்மூலம் அவர்களுக்கு இப்போதைய தேவையான போர்வெல் வசதி அமைத்துக் கொடுத்தோம். மழைபெய்தால் ஒழுகும் இந்த வீட்டுக்கு பதிலாக, பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் நிதிபெற்று வீடுகட்டிக்கொடுக்கும் முயற்சியிலும் இருக்கிறோம்.

உண்மையில் இந்த ஏழைக்குழந்தைகளுக்கு உதவும்வகையில் அந்த முகநூல் பக்கத்தில் பதிவிட்டு, இவர்களுக்கு உதவிகள் கிடைக்க சம்மதித்த பள்ளியின் நிர்வாகிகள் செல்லம்மாள், ரெங்கநாயகி ஆகியோருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 3 குழந்தைகளுக்கும் தலா 5 புத்தாடைகள், அவர்கள் வீட்டுக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளோம். தொடர்ந்து அந்தக் குழந்தைகளை கண்காணித்து வருகிறோம். அவர்கள் வீட்டுக்குப் போகும்போதே குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் உள்ளிட்ட தின்பண்டங்களோடுதான் போவேன். என்னைப் பார்த்ததுமே ‘அப்பா’ என அழைப்பார்கள். இந்தப் பாசத்துக்கு மேல், அன்புக்கு மேல் உலகில் என்ன சார் இருக்கு?’’ என மனம் நிறைவாகப் பேசுகிறார் ஆசிரியர் பழனிகுமார்.

x