இப்படி இருந்தால் கற்பித்தல் எப்படி நடக்கும்?


அரசுப்பள்ளி மாணவர்கள்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே, அவர்களுக்கென்னப்பா... வேலை செய்யாமல் சம்பளம் வாங்கும் அதிர்ஷ்டக்காரர்கள் என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால், அவர்களுக்கான வேலைப்பளு, பொறுப்புகள் மிக அதிகம் என்பதும், அதில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் ஆசிரியர்கள் அநேகம் பேர் என்பதும் பலர் புத்திக்கு உரைப்பதில்லை. அப்படி அர்ப்பணிப்போடு பணியாற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்போது அரசுப் பள்ளிகள் செயல்படும் விதம் குறித்தும், ஆசிரியர்களின் கையறு நிலையையும் மிக வேதனையோடான தன் மனவோட்டத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த, அரசாங்கம் என்னதான் செய்யவேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி தனது பெயரை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அவர் எழுதியுள்ள ஒரு பதிவு ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களின் குழுக்களில் வைரலாக சுற்றிவருகிறது. அந்தப் பதிவு இதுதான்:

இன்றைய சூழலில் தமிழக அரசால் நடத்தப்படும் அரசுப் பள்ளிக்கூடங்கள் என்பது, கற்பித்தல் பணியைச் செய்வதற்காக இல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகளை செய்யக்கூடிய ஒரு இடமாகவும், கல்வித் துறை சார்ந்த புள்ளிவிவரங்களை வழங்கக் கூடிய இடமாகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கற்பித்தல் பணி என்பது அரசுப்பள்ளியில் முழுமையாக நடைபெறவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசுப் பள்ளிக்கூடங்கள் செயல்படுவதுபோல பொதுமக்களுக்கு தெரியவேண்டும் என்பதுதான் அரசின் நோக்கமாக இருக்கிறது. பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதை, அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் எங்களைப்போன்ற ஆசிரியர்கள் கண்முன்னே பார்த்து வருகிறோம். எத்தனை பள்ளிகளில், அனைத்துப் பாட வேளைகளிலும் பாடம் நடத்தப்பட்டதா என்று கேட்டால், எந்தப் பள்ளிக்கூடமும் இல்லை என்றுதான் சொல்வார்கள்.

காலையில் பள்ளிக்கூடம் வந்ததும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டோம் என்ற தகவலை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அடுத்ததாக, மாணவர்கள் எத்தனை பேர் பள்ளிக்கு வந்து உள்ளார்கள் என்பதை EMIS அப்ளிகேஷன் மூலமாக தெரிவிக்க வேண்டும். அடுத்து, கல்வி அலுவலர்கள் அனுப்பும் கடிதங்கள் தொடர்பாக தேவையான புள்ளிவிவரங்களை இமெயில் பார்த்து உடனடியாக அனுப்ப வேண்டும். தினமும் இந்த வேலைகளை காலையில் வந்தவுடன் செய்து விட்டுத்தான், கற்பித்தல் பணி செய்வதற்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டும். மேற்சொன்ன வேலைகள் முடியும்வரை பல வகுப்பில் ஆசிரியர்கள் இல்லாத சூழலை தினமும் காண முடியும்.

பள்ளிக்கூடம் திறந்து பாடம் நடத்தும் செயலை ஊக்குவிக்காமல் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறோம் என்ற பெயரில் முழுமையாக வகுப்பறையில் கற்றல் நிகழ்வே நடைபெறாமல் இருக்கக்கூடிய சூழலை கல்வித் துறை செய்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாத சூழலை அரசு உருவாக்கி வைத்துள்ளது. மாணவர்கள் நினைத்தால் பள்ளிக்கு வரலாம், இல்லை என்றால் வராமல் கூட இருக்கலாம். ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று யாரும் அவர்களைக் கேள்வி கேட்க முடியாது.

ஒரு வகுப்பறையில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம், அவர்களுக்கு பாடம் நடத்தச் செல்லும் ஆசிரியர் பாதி மாணவர்களுக்கு மேல் வராத சூழல் இருந்தால் எப்படி பாடம் நடத்த முடியும்? அப்படி இருந்தும் கூட அந்த மாணவர்களுக்கு கற்பித்தல் பணியை செய்துவிட்டு, அது தொடர்பான ஒரு சில ஒப்படைப்பு பணிகளை வழங்கினால், வந்த மாணவர்களில் பலர் அடுத்த நாள் பள்ளிக்கு வருவது இல்லை.

பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்துங்கள் என்று அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடுகிறார்கள். பல மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் தொடர்பு எண்களாக அவர்களுடைய செல் நம்பரையே கொடுத்திருப்பதால், ஆசிரியர்கள் அனுப்பும் எந்த ஒரு தகவலையும் அவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் சொல்வதே இல்லை. இதுபோன்ற செயல்பாடுகளினால், அந்த மாணவர்களை பெற்றோர்களோ ஆசிரியர்களோ கட்டுப்படுத்த முடியாத சூழல் இருக்கிறது.

பல மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்போன்களை எடுத்து வருகிறார்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அவர்களுக்கு தெரியாமலோ, அல்லது ஆசிரியர்கள் வகுப்பில் இல்லாத இடைவேளை நேரங்களிலோ வகுப்பறையிலேயே வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்வதை தற்போது சாதாரணமாகக் காணமுடிகிறது.

அரசுப்பள்ளியில்..

பல பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஏதோ ஒரு அடிப்படையில் பிரிவுகளை ஏற்படுத்திக்கொண்டு, அடிக்கடி சண்டையிடும் வழக்கமும் இருக்கிறது. பல பள்ளிகளில் சிறுவயது மாணவர்களே ஏதேதோ போதை வஸ்துகளைப் பயன்படுத்தக் கூடிய நிலையைப் பார்க்க முடிகிறது. அதுகுறித்து அவர்களை கண்டிக்கவோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ அரசுப் பள்ளிகளில் எந்தவித ஏற்பாடும் இல்லை.

அரசுப் பள்ளிகளில் பணிபுரியக்கூடிய ஆசிரியர்கள், தினமும் மன உளைச்சலில் பள்ளிக்கூடங்களுக்கு வந்து செல்லக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஒருபுறம், அவர்கள் தங்கள் விருப்பம்போல கற்பித்தல் பணியைச் செய்ய முடியவில்லை. இன்னொருபுறம், மாணவர்களை பள்ளிக்கு தினமும் வர வைப்பதற்கோ அல்லது அவர்கள் ஒழுங்கீனமாக செயல்படும் போது அவர்களை கட்டுப்படுத்துவதற்கோ எந்தவிதச் செயலையும் செய்ய முடியவில்லை. இப்படியான மனநிலையில் இருக்கும் ஆசிரியர், எவ்வாறு பள்ளியில் வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று தெரியவில்லை.

இதற்கிடையில் பல மாவட்டங்களில் இருக்கும் கல்வித் துறை உயர் அலுவலர்கள், அந்த மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளிகளுக்கு தாளாளர்கள் போல தினமும் பல உத்தரவுகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசுப் பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்துவதற்கு இருக்கும் நேரத்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுடன் இருக்கும் வேளையில், தினமும் 2 டெஸ்டுகள் வைக்க வேண்டும். வாரத்துக்கு 10 டெஸ்ட் வைக்க வேண்டும். அதை உடனடியாக திருத்தி, மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும் என விடாப்பிடியாக உத்தரவுகளை வழங்கி வருகிறார்கள்.

இந்த வேலைகளை தினமும் செய்து வந்தால், எப்போதுதான் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு நேரம் இருக்கும் என்பதை இவர்கள் எப்போதும் நினைத்தே பார்க்க மாட்டார்களா? அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் படிக்கும் வகுப்புக்குரிய குறைந்தபட்ச கற்றல் திறன் கூட இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. மாணவரின் கற்றல் திறன் மிகவும் பின்தங்கியுள்ளது. குறைந்தபட்சம் வாசிப்பு பயிற்சி, எழுத்துப் பயிற்சி இல்லாமலே மேல்நிலை வகுப்பு வரை வந்து விடுகிறார்கள்.

அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை அரசு எப்போது எடுக்க ஆரம்பித்ததோ, அப்போதே அரசுப் பள்ளிகள் அனைத்தும் நாசமாகப் போய்விட்டன. புள்ளி விவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு அரசு, மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது.

அதுபோல அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களை ஏதோ அடிமைகள் என நினைத்துக்கொண்டு, பள்ளிக்கு பார்வையிட வருகிறோம் என்ற பெயரில் கல்வித் துறை அலுவலர்கள் ஒருமையில் பேசுவது, மரியாதைக் குறைவான தொணியில் அழைப்பது போன்ற செயல்களை மிகவும் சர்வ சாதாரணமாக செய்து வருகிறார்கள். அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர் வேலைக்கு வந்தாச்சு, பிழைப்புக்காக சம்பளம் வாங்குகிறோம். எதுவும் சொல்லிவிட்டுப் போகட்டும் என்ற மனநிலையில் பல ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைகளை சரிப்படுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை.

அரசுப் பள்ளிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை வருடந்தோறும் ஒதுக்கீடு செய்கிறோம் என்று அறிக்கை விடும் அமைச்சர்கள், அந்தப் பணம் எந்த அளவு முறையாக பயன்படுத்தப்படுகிறது என்பதைச் சொல்ல முடியுமா? வருடம்தோறும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அறிவியல் உபகரணங்கள் மிகவும் மட்டமான தரத்தில் வழங்கி, எதையும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதை எத்தனை உயர் அலுவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளார்கள் என்று சொல்ல முடியுமா?

பல பள்ளிகளில், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி கூட இல்லாத சூழல்தான் இருக்கிறது. அப்படியே இருந்தாலும் கழிப்பிட பராமரிப்பு என்பதே பல அரசுப் பள்ளிகளில் இல்லை என்றே சொல்லலாம். அதை செய்வதற்கு யாரும் முறையாக நியமனம் செய்யப்படவில்லை. நியமனம் செய்யப்பட்டவர்கள் சுத்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை பயன்படுத்தாமல் வெறுமனே பெயரளவுக்கு அதைச் சுத்தம் செய்வதுபோல நடந்து கொள்கிறார்கள்.

எதற்கெடுத்தாலும் உத்தரவுகளை மட்டும் இடக்கூடிய அரசாங்கமும், அவர்களின்கீழ் செயல்படும் உயர் அலுவலர்களும் பள்ளிக்கூடத்தின் எதார்த்த நிலையை எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை. கற்பித்தல் பணி நடைபெறாமல் எப்படி அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராகச் செயல்படும் முடியும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்.

தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு வேலைகளையும் செய்வதற்கு தனித் தனியாக ஆட்கள் இருப்பார்கள். மாணவர்கள் ஒழுங்கீனமான செயல்களில் நடந்து கொண்டால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். மாணவர்களின் வருகைப் பதிவேடு குறைவாக இருந்தால், பெற்றோர்களை அழைத்து அதற்கான காரணம் கேட்டு எதிர்காலத்தில் அது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவது மட்டுமே முதன்மையான பணியாக இருக்கும்.

பாடம் நடத்துவதை தவிர, அரசுப் பள்ளிகளைப் போல புள்ளிவிவரங்களை வழங்கும் நபர் போல எப்போதும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் செயல்பட வேண்டிய அவசியமில்லை. குறைந்தபட்சம் தனியார் பள்ளிகளில் கற்பித்தல் பணி நடைபெறுகிறது. மாணவர்களை தொடர்ந்து கண்காணிப்பு செய்கிறார்கள். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி ஓரளவு நன்றாக இருக்கிறது. மாணவர்களின் வருகை அதிகமாக இருக்கிறது.

ஆனால், அரசுப் பள்ளிகளில் நிலைமை அப்படியா இருக்கிறது? அதற்கு நேர்மாறாக இருக்கும்போது அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களோ அல்லது கல்வித் துறை அலுவலர்கள் அல்லது அரசியல்வாதிகளோ எப்படி தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.

அரசும், கல்வித் துறை அலுவலர்களும் அரசுப் பள்ளிகளை உயிரோட்டம் உள்ளதாக மாற்றவேண்டிய தருணத்தை புரிந்துகொள்ளாமல், அவர்களுடைய அதிகாரத்தை செலுத்தும் இடமாக மட்டுமே தொடர்ந்து பார்த்து வருவது அரசுப்பள்ளிகள் இன்னும் சில ஆண்டுகளில் இல்லாமல் போய்விடும் சூழலை உருவாக்கிவிடும்.

கல்வித் துறையில் அரசு அதிக கவனம் செலுத்தி, அரசுப் பள்ளிகளை கற்பித்தல் பணி சிறப்பாக நடைபெறக்கூடிய இடமாக அமைத்துக் கொடுத்தால் மட்டுமே, அரசுப் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்பதுதான் எங்களைப்போன்ற ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- இத்தகைய மாற்றம் மிக விரைவில் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில், கற்பித்தல் பணியை முழுமையாக செய்யமுடியாத சூழலில் போராடும் அரசுப் பள்ளி ஆசிரியர்

x