மதுரை அருகே அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஒருவர், நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக இனிமையும் எளிமையுமாகப் பாடம் நடத்தி, அறிவியல் என்றாலே அலர்ஜி என நினைக்கும் மாணவர்களையும் அறிவியலை நேசிக்கவைத்திருக்கிறார்.
பொதுவாகவே பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் பாடம் என்றால், கொஞ்சம் வேப்பங்காய்தான். அறிவியல் ஆசிரியர்களை அவ்வளவு எளிதில் நெருங்கிவிடவும் மாட்டார்கள். ஆனால், மதுரை அருகே கொட்டாம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் நா.தவமணி, தன்னுடைய தனித்துவமான கற்பித்தல் பாணியால் மாணவர்களை அறிவியலின் மீது ஆர்வம்கொள்ளச் செய்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இவரது அறிவியல் வகுப்பறையில் மாணவர்கள் ஆர்வமில்லாமலேயே இருந்துள்ளனர். அதைக் கவனித்த தவமணி, நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக அறிவியலைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளார். அது மாணவர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தவே. தற்போது அறிவியலை அவர்களின் நேசத்துக்குரிய பாடமாக மாற்றிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தவமணி, ‘‘மேலூர் அருகே நாகப்பன் செவல்பட்டி கிராமம்தான் என்னுடைய சொந்த ஊர். 2004-ல் போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதே ஆண்டில் சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டம் புதுபட்டினம் என்ற கிராமத்தில் உள்ள பள்ளியில் பணிநியமனம் பெற்றேன். மீனவ சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள்தான் அங்கு அதிகம் படிக்க வருவார்கள். ஆசிரியரான ஆர்வத்தில் எப்படியாவது இப்பணியில் அசத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், ஏராளமான முன் தயாரிப்புடன் வழக்கமான வகுப்பறை கற்பித்தல் முறையில் பாடம் நடத்தினேன். ஆனால், மாணவர்கள் கவனிக்கவும், படிக்கவும் ஆர்வமில்லாமல் இருந்தார்கள். அவர்களை எப்படி படிக்கவைக்கப்போகிறேன் என்ற பயமும், சோர்வும் என் மனதில் ஏற்பட்டன” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்கிறார்.
பின்னர், அந்தச் சவால்களைக் கடந்து வென்ற கதையையும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
“என்னுடைய வகுப்பறையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். ஒரு கட்டத்தில் அவர்களைக் கூச்சல் போடவிடாமல் அமைதியாக இருக்க வைப்பதே எனக்குப் பெரிய வேலையாகிவிட்டது. நான் வேலைக்கு வருவதற்கு முன் அடிப்படையில் நாட்டுப்புறப் பாடல் கலைஞன். 1988-89-ம் ஆண்டு கல்வியாண்டில் மதுரையில் தியாகராஜர் கல்வியியல் கல்லூரியில் பிஎட் படித்தபோது கொல்லங்குடி கருப்பாயியின் கிராமியப் பாடல்கள் பரவலாக பேசப்பட்டன. அவரது பாடல்களால் ஈர்க்கப்பட்டு கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நானே நாட்டுப்புறப் பாடல்கள் தயார் செய்து பாடுவேன். அங்கு கிடைத்த பாராட்டுகள், என்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் நாட்டுப்புறப் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது. கல்லூரி முடித்து வேலை கிடைக்காததால் தொடர்ந்து வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தேன். இந்தச் சூழலில்தான் நாகப்பட்டினத்தில் ஆசிரியர் பணி கிடைத்தது. அதனால், அறிவியல் பாடத்தில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கு நாட்டுப்புறப் பாடல் வாயிலாக பாடம் நடத்த முடிவு செய்தேன். பாடங்களை அப்படியே பாடல் வரிகளாக்கி அதற்கு தனி இசையும், ராகத்தையும் கொடுத்து பாடம் நடத்த ஆரம்பித்தேன். உதாரணமாக, அறிவியலில் உலோகங்கள், அலோகங்கள் என்று இருக்கிறது. அதையெல்லாம் புரிந்துகொள்ள மாணவர்கள் கொஞ்சம் திணறுவார்கள். அன்றாடம் வாழ்க்கையில் என்னென்ன உலோகங்களைப் பயன்படுத்துகிறோம் எனப் பட்டியலிட்டு நாட்டுப்புறப் பாடல்கள் வழியாக நடத்தியபோது அது மாணவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்தது. கடினமானவை என மாணவர்கள் கருதும் விஷயங்களை இப்படி இசை வடிவில் எளிமைப்படுத்தித் தந்ததால் மாணவர்கள் ஆர்வமாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள். நன்றாகப் படிக்கவும் ஆரம்பித்தார்கள்.
2007-ல் கொட்டாம்பட்டி பள்ளிக்கு மாறுதலாகி வந்தேன். இந்தப் பள்ளியில் அதே பாணியில் பாடம் நடத்த ஆரம்பித்தேன். மாணவர்கள் என்னுடைய வகுப்பிற்காக ஆர்வமாகக் காத்திருக்கும் நிலை இயல்பாகவே உருவாகிவிட்டது. இயற்பியலில் நீளத்தின் அலகு மீட்டர், நிறையின் அலகு கிலோகிராம், காலத்தின் அலகு வினாடி போன்ற அடிப்படை அலகுகளையும் நாட்டுப்புற இசையால் எளிமையாகப் புரியவைக்கும் விதம் மாணவர்களுக்குப் பிடித்துப்போனது.
2013-14, 2014 -15-ம் கல்வியாண்டுகளில் தொடர்ச்சியாக இரு ஆண்டுகளில் என்னுடைய வகுப்பில் 12 மாணவர்கள் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்தார்கள். கடந்த 2 ஆண்டாகப் பொதுத்தேர்வு நடக்கவில்லை. அதற்கு முன்பும் நல்ல மதிப்பெண் எடுத்தார்கள். நான் போட்டித்தேர்வு மூலம் அரசுப் பணிக்கு வந்த அனுபவத்தில் மாணவர்களுக்குப் பள்ளி காலத்திலே டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகளில் அதிகப்படியாகக் கேட்கப்படும் வினாக்களையும் நாட்டுப்புறப் பாடல் வடிவில், ‘கேட்டுக்கோ, தெரிஞ்சிக்கோ, புரிஞ்சிக்கோ’ என்ற பாணியில் நடத்தி புரியவைப்பேன். அப்படி என்னிடம் படித்த மாணவி ஒருவர் விஏஓ-ஆக அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். வகுப்பறைக் கல்வியை மாணவர்கள் விரும்புகிற வகையில் வழங்கினால் அவர்களிடம் எந்தக் கல்வியையும் கொண்டு சேர்க்கலாம் என்பதே என்னுடைய கருத்து” என்கிறார் தவமணி.
வகுப்பறைக் கல்வியில் மட்டுமில்லாது டெங்கு, கரோனா, எச்ஐவி பற்றிய சமூக விழிப்புணர்வு பாடல்களை அரசு நிகழ்ச்சிகளில் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் தவமணி. 1992-ல், அறிவொளி இயக்கத்தில் இவர் எழுதி பாடிய ‘சங்க தமிழ் பூமி இது’ தொகுப்புப் பாடல்கள், அன்றைய காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு லட்சம் கேசட்டுகள் வரை போடப்பட்டு பட்டித்தொட்டியெல்லாம் சென்றுசேர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு என மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களையும் நாட்டுப்புற பாடல்கள் வடிவில் தவமணி வழங்கிவருகிறார்.
இசையின் வலிமையால் எதையும் சாதிக்க முடியும் என்பார்கள். ஆசிரியர் தவமணி இசையை ஒரு தவம் போல பயன்படுத்தி, மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றிவருவதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!