உயர்கல்வியை உதாசீனப்படுத்தும் மோடி அரசு!


தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கைக்கான எதிர்ப்பு, பெரும்பாலும் மும்மொழி திட்டத்தின் அடிப்படையிலேயே முன்வைக்கப்பட்டு வருகிறது. பள்ளிக் கல்வி என்ற நிலையில் அதிகம் கவனம் செலுத்தப்படுகிறது. தேசிய கல்வி கொள்கை உயர்கல்வியில் செய்யவிருக்கும் மாற்றத்தைப் பற்றி அதிகம் இங்கே பேசப்படவில்லை.

உயர்கல்வியில் GER ( Gross Enrolment Ratio) விகிதத்தை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவது என்று தேசிய கல்விக் கொள்கையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்கெனவே தமிழ்நாட்டில் எட்டி விட்டோம் என்று நாம் பேசி வருகிறோம்.

இந்தியாவில் உயர்கல்வியில் GER அதிகரிக்காததற்கு முதன்மையாக 2 காரணங்கள் உள்ளன: ஒன்று - பள்ளிக் கல்வியை முடிப்பவர்களின் எண்ணிக்கை இங்கே குறைவாக உள்ளது. இரண்டு- உயர்கல்வி முடித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் இங்கு குறைவாக உள்ளது.

வறுமை காரணமாக பள்ளிக் கல்வியை முடிப்பதற்கு முன்பே, வேலை தேடவேண்டிய நிர்ப்பந்தம் இங்கே பலருக்கும் இருக்கிறது. 2017-18 -ல் வெளியான நேஷனல் சேம்பிள் சர்வே நிறுவனத்தின் ( NSSO) புள்ளிவிவரப்படி 15 முதல் 19 வரையிலான வயது கொண்டவர்கள் வேலைக்குப்போக ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வயதிலான மக்கள்தொகையில் 15.6 சதவீதம் பேர் வேலைக்குப் போகிறவர்களாகவும் வேலை தேடுகிறவர்களாகவும் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

எனவே, இடைநிற்றலின்றி பள்ளிக் கல்வியை முடிப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கு வறுமை ஒழிப்புத் திட்டங்களோடு இணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளே உள்ளன.

பள்ளிக் கல்வியை முடித்து உயர்கல்வி பெறுகிறவர்கள் எந்த அளவுக்கு வேலை வாய்ப்பைப் பெறுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைசேஷன் ( NSSO) புள்ளிவிவரத்தின்படி இளநிலை பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களில் 8.9 சதவீதம் பேரும் முதுநிலைப் படிப்பு (post graduate) படித்தவர்கள் 8.7 சதவீதம் பேரும் 2004 -2005-ம் ஆண்டுகளில் வேலை இல்லாதவர்களாக இருந்தனர். 2011-12-ம் ஆண்டுகளில் இதில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. வேலைவாய்ப்பு அதிகரித்தது.

அப்போது பட்டப்படிப்பு முடித்தவர்களில் 7.6 சதவீதம் பேரும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் 7.5 சதவீதம் பேரும் வேலை இல்லாமல் இருந்தனர். ஆனால், பாஜக ஆட்சி வந்ததற்குப் பிறகு பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி வேலையின்மையை அதிகரிக்கச்செய்தது. 2017 - 18 -ம் ஆண்டில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களில் 17.2 சதவீதம் பேரும், முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்களில் 14.6 சதவீதம் பேரும் வேலை இல்லாமல் இருந்தனர். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இது இன்னும் பல மடங்கு உயர்ந்து இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் மட்டுமே சுமார் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர். தனியார் துறைகளில் வேலை பார்த்தவர்கள் சுமார் 60 லட்சம் பேருக்கு மேல் வேலை இழந்துள்ளனர்.

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ள சூழலில், உயர் கல்வியை விரிவுபடுத்துவதற்காகப் புதிதாக ஏராளமான பல்கலைக்கழகங்களையும், கல்லூரிகளையும் ஆரம்பிக்கப் போகிறோம் எனவும், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்காக ஒதுக்கப் போகிறோமென்றும் தேசிய கல்விக் கொள்கையில் உறுதி கூறப்பட்டிருக்கிறது.

இப்படி ஒருபுறம் வாக்குறுதி அளித்துக்கொண்டே, இன்னொருபுறம் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை மோடி அரசு குறைத்துவருகிறது. 202-21 பட்ஜெட்டில் உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை 39,466.52 கோடி. ஆனால், திருத்தப்பட்ட பட்ஜெட்டில் அதில் சுமார் 6,500 கோடி குறைக்கப்பட்டு அது 32,900 கோடி என ஆக்கப்பட்டது. 2021-22 க்கான பட்ஜெட்டில் உயர்கல்விக்கான ஒதுக்கீடு 38,350.65 கோடி. அது 2020-21 பட்ஜெட்டைவிட சுமார் 1,000 கோடி குறைவு.

உயர்கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் இப்படி பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கும் மோடி அரசு தேசிய கல்விக் கொள்கையில் கூறியுள்ளபடி நிதி ஒதுக்க சாத்தியம் உள்ளதா? ஆட்சியாளர்கள்தான் இதற்கு பதில் சொல்லவேண்டும்

x