மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததாலும் இரு தரப்புக்கும் இடையில் நிலவும் ஈகோ யுத்தத்தாலும் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவதிலும், மாணவர் சேர்க்கை தொடங்குவதிலும் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை தொடங்கப்படுவதாக, 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அறிவித்தது மத்திய அரசு. அதற்கு மத்திய அமைச்சரவை 2018-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி ஒப்புதல் வழங்கி, மதுரையில் அந்த மருத்துவமனையை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த மருத்துவமனையை 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டது. இந்த மருத்துவமனையை கட்டுவதற்கு ஜப்பான் நாட்டு ஜைக்கா நிறுவனம் 75 சதவீதம் (கடன்) நிதியும் மீதி 25 சதவீதம் நிதியை மத்திய அரசும் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ம் தேதி ரூ. 1,264 கோடியில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதன்பின், தமிழக அரசு, மதுரையில் ‘எய்ம்ஸ்’ கட்டுவதற்காக, தோப்பூரில் தேர்வு செய்த நிலத்தை 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைத்தது. தொடர்ந்து மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான நிர்வாக இயக்குநர் அறிவிப்பு, கடன் ஒப்பந்தம் கையெழுத்து உள்ளிட்டவை நடந்தது. ஆனாலும், தற்போது வரை மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது.
இதனால், தென் மாவட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த ஜூலை 16-ம் தேதி மதுரை ‘எய்ம்ஸ்’ நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் படிக்க நடப்பாண்டு 50 மாணவர்களை சேர்ப்பது, இப்போதைக்கு தற்காலிகக் கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்படும் என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதற்கான வசதிகளை செய்து கொடுப்பதில் ஏற்பட்ட சிக்கலால், இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கை நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரையுடன் அறிவிக்கப்பட்ட தெலங்கானாவில் பீபீ நகர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு 2020-ம் ஆண்டிலே தற்காலிக கட்டிடத்திலேயே 150 மாணவர்களுக்கான வகுப்புகள் நடக்க ஆரம்பித்தன. 2018-ம் ஆண்டில் அறிவித்த ஜார்கண்ட்டில் கட்டிடம் கட்டுமானம் நிறைவு பெறாவிட்டாலும் அங்கும் 150 மாணவர்களுக்கான எம்பிபிஎஸ் வகுப்புகள் தொடங்கிவிட்டன. இமாச்சலப்பிரதேசத்தில், பிலாஸ்பூரில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையிலும் எம்பிபிஎஸ் மாணவர்கள் வகுப்புகள் தொடங்கிவிட்டன.
மதுரைக்குப் பிறகு, 2019-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கிய அசாம் மாநிலம் கவுகாத்தி, குஜராத் மாநிலம் ராஜ்கோட், ஜம்முவில் சம்பா இங்கெல்லாம் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கான வகுப்புகள் நடக்கின்றன. புறநோயாளிகள் பிரிவை பொறுத்தவரையில் கட்டுமானப்பணி முடியாவிட்டாலும் தெலங்கானா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மகாராஸ்டிரா, ஆந்திரா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் புறநோயாளிகள் சிகிச்சை வேறு கட்டிடங்களில் நடக்கின்றது.
இருப்பினும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நீடிக்கும் கொள்கை முரண்பாடு மோதல் போக்கால் மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைவதிலும், அதற்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதிலும் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் கா.புஷ்பவனம் என்பவர், மதுரை உயர் நீதிமன்றத்தில் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை தற்காலிக கட்டிட வளாகத்தை தேர்வசெய்து புறநோயாளிகள் சிகிச்சை தொடங்க வேண்டும், எம்பிபிஎஸ் வகுப்புகள் நடப்பு ஆண்டிலேயே தொடங்கப்பட வேண்டும், 5 பேர் கொண்ட குழு நிர்வாக குழுவை முழுமையாக நியமித்து கட்டுமானப்பணிகளை தொடங்க வேண்டும் என்றெல்லாம் கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கறிஞர் புஷ்பவனம் நம்மிடம் பேசும்போது, “2018-ம் ஆண்டு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தபோது மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டமதிப்பீடு ரூ.1,264 கோடியாக இருந்தது. தற்போது ரூ.2 ஆயிரம் கோடியை தொட்டுவிட்டது. இன்னும் தாமதமானால் ரூ.2,500 கோடியை தொடவும் வாய்ப்புள்ளது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில், அனைத்து கல்லூரிகளிலும் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. மதுரையில் மட்டும் 50 மாணவர்களை மட்டுமே சேர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தமிழகத்திற்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு பிரச்சினையில் ஆரம்பித்து தற்போது கட்டுமான பணி தொடங்குவது, நிர்வாக குழு அமைப்பது, மாணவர் சேர்க்கை மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை தொடங்குவது வரை பல்வேறு தடைகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது’’ என்றார்.
மாநில சுகாதாரத் துறை உயர் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘‘இது முழுக்க மத்திய அரசு திட்டம். அவர்கள் அமைத்த நிர்வாக குழு, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை தொடங்குவது பற்றி முடிவெடுப்பதாக கூறியுள்ளார்கள். அதற்கான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. கட்டுமானப் பணியை பொறுத்தவரையில் தொடங்குவதற்கு மேலும் ஒரு ஆண்டு தாமதமாக வாய்ப்புள்ளது’’ என்றார்.
இதற்கிடையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் 150 மாணவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு அளித்தும் அதனை பயன்படுத்திக் கொள்ள மாநில அரசு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தத்திற்குரியது’ என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாகப் பேசிய மதுரை எம்பி-யான சு.வெங்கடேசன், ‘‘கட்டுமானப்பணி முடியும் என்பதால் 50 மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி தரலாம் என்றும், அதற்கான இடத்தை ஒதுக்கித் தரவும் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அந்தக் கட்டிடத்தில் நிறைய வசதிகளை பட்டியலிட்டுள்ளது. அந்த வசதிகளைப் பார்த்தால் நிரந்தரக் கல்லூரிக்கு தேவையான பெரிய பட்டியல் போல் உள்ளது. இதற்கான நிதியை யார் தருவார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தையில்லை. மேலும், 50 மாணவர் சேர்க்கை என்பதற்கு முறையான அனுமதியை மத்திய அரசின் மருத்துவ கவுன்சில் வழங்கவில்லை. 50 இடங்களை தாங்களே அதிகரித்துக் கொள்ள தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டா?’’ என்று கேள்வி எழுப்பி இருப்பது, தென் மாவட்ட மக்களின் எய்ம்ஸ் ஏக்கத்தை இன்னும் அதிகரித்திருக்கிறது.