சென்னை: நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களில் 6 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் பல்வேறுகுழப்பங்களுக்கும், விமர்சனங் களுக்கும் ஆளாகியுள்ளது. இந்நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள விளக்கத்தில், “நாடு முழுவதும் நீட் தேர்வு வெளிப்படைத் தன்மையுடனும், நேர்மையுடனும் நடத்தப்பட்டு வருகிறது. நேர இழப்பு காரணமாக சில கேள்விகளுக்கு விடையளிக்க முடியவில்லை என பஞ்சாப், ஹரியாணா,டெல்லி, சண்டீகர் உயர் நீதிமன்றங்களில் சில தேர்வர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
சிசிடிவி கேமராக்களை கண்காணித்து அதன்பேரில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அதேபோல், இயற்பியல் பிரிவில் முரண்பாடாக இருந்த ஒரு கேள்விக்கு இரு விடைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்தவர்களுக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டது. அவ்வாறு இரண்டில் ஒன்றை தேர்வு செய்து மதிப்பெண் பெற்றவர்களில் 44 பேர் ஆவர். நேர இழப்புக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டவர்களில் 6 பேரும் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள 125 எம்பிபிஎஸ் இடங்களில் 46 மட்டுமே பொதுப் பிரிவுக்கானவை. நடப்பாண்டு நீட் தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்துள்ள நிலையில், 47-வது மாணவர் பொதுப் பிரிவை சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு எய்ம்ஸ் கல்லூரியில் இடம் கிடைக்காது. ஒருவர் முழு மதிப்பெண் பெற்றாலும் விரும்பிய இடம் கிடைக்காது என்றால் தேர்வு முறையை சீரமைப்பதுதான் ஒரே வழி.
கல்வியாளர்கள் வலியுறுத்தல்: கருணை மதிப்பெண்களால் 6 பேர் தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ள நிலையில், அதுகுறித்த எந்த தகவலும் தெரியாததால் தமிழக மாணவர்கள் நேர இழப்பை முன்னிறுத்தி நீதிமன்றத்தை நாடவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உரியதீர்வை காண வேண்டும் என்றுகல்வியாளர்கள், சமூக ஆர்வலர் கள் வலியுறுத்தி உள்ளனர்.