தேர்வு முறையில் மாற்றம் வேண்டும்!


பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை கூட்டம்

மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உதவாத தற்போது நடைமுறையில் இருக்கும் தேர்வுமுறையை மாற்ற வேண்டும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அதிகாரிகள், ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து, பணப்பலன்களை நிறுத்தி வைக்க சட்டமுன் வடிவைக் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட அதிரடியான பல யோசனைகள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் இன்று (18/09/2021) நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி ஆணையர், பள்ளிக்கல்வி செயலர், மாநிலத்திட்ட இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கல்வியாளர்கள் சங்கமம் அமைப்பின் தலைவர் ஆசிரியர் சிகரம் சதீஷ்குமார், பள்ளிக்கல்வித்துறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்கள் குறித்த கோரிக்கை மனுவை அமைச்சரிடம் நேரடியாக அளித்தார்.

அவரது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

‘தமிழக கல்விமுறையில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் தேர்வு முறையானது மாணவர்களின் மனப்பாடத்திறனை மட்டுமே சோதித்தறியும் வகையில் இருக்கிறது. அதனால் இந்த தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். 6 -ம் வகுப்பு முதல் ஓஎம்ஆர் தாள்களைப் பயன்படுத்தும் வகையிலான தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும். இப்படி மாற்றப்பட்டால் அது பிற்காலத்தில் போட்டித்தேர்வு, நுழைவுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் மாணவர்களுக்கு பெரிதும் உதவிகரமாக அமையும்.

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளும் அரசுப்பள்ளிகள் என்றே அழைக்கப்பட வேண்டும் (ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, நலத்துறை என இருப்பதை மாற்ற வேண்டும்). அனைத்து அரசுப்பள்ளிகளும் ஒரே நிறத்தில் இருக்கும் வகையில் வண்ணம் ஏற்படுத்த வேண்டும் 6-ம் வகுப்பு முதல் அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்களுடன், திருக்குறள் புத்தகத்தையும் சேர்த்து வழங்க வேண்டும்.

அரசு சார்பில் ஒன்றியத்திற்கு ஒரு ஆங்கில வழிப் பள்ளி தொடங்கப்பட வேண்டும். ஒரு வளாகத்திற்குள் இரு மொழிவழிக் கல்விமுறை கூடாது. அது தாய்மொழி வழிக்கல்வியின் வளர்ச்சியைத் தடுக்கும். அனைத்துப் பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் சங்க அமைப்பை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தை வலுப்படுத்த வேண்டும். பிற குழுக்களான கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக்குழு போன்றவற்றை உடனடியாகக் கலைத்திட வேண்டும். இவை பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக தேவையற்ற பிரச்சினைகளை பள்ளிக்குள் கொண்டு வருகின்றன.

கோரிக்கை மனு அளிக்கும் சதீஷ்குமார்

பள்ளிக்குத் தேவையான தளவாடங்களை பள்ளித் தலைமையாசிரியரே வாங்குவதற்கு வகை செய்ய வேண்டும். இதன் மூலம் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற பொருட்கள் வருவது தடுக்கப்படும். அனைத்து மாணவர்களுக்கும் கல்விச்சுற்றுலா என்பதை கட்டாயமாக்க வேண்டும். அதற்கு அரசுப் போக்குவரத்து கழகங்களை பயன்படுத்த வேண்டும்.

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அதிகாரிகள், ஆசிரியர்கள் எவராயினும் அதில் உண்மை இருக்கும்பட்சத்தில் உடனடிப் பணி நீக்கம் செய்யப்படுவதுடன் அவர்களின் பணப்பலன்களை நிறுத்தி வைக்கவும் சட்டமுன்வடிவைக் கொண்டுவர வேண்டும். அதிகாரிகள் கையூட்டுப் பெறுவது தொடர்பாக புகாரளிக்க தனித்தொடர்பு எண்களை ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் நிரந்தர சுகாதாரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையிலிருந்து வெளிவரும் அனைத்து அரசாணைகளும் தமிழில் இருக்க வேண்டும். கணினிக் கல்வி குறித்த அடிப்படை பாடத்திட்டம் தொடக்க நிலையிலிருந்தே வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் போட்டித் தேர்வுக்கென தனிப்பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும். விளையாட்டுப் பாடவேளைகள் கண்டிப்பாக விளையாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை மருத்துவ முகாம் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளன.

x