திருச்சியில் மருத்துவ மாணவர் தற்கொலை!


ரஞ்சித்குமார்

மருத்துவம் படிக்க இடம் கிடைக்காது என்று மனமொடிந்து தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் பற்றிய செய்திகள், கடந்த ஒருவார காலமாக நம்மை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், அரும்பாடுபட்டு படித்து, அரசு மருத்துவக் கல்லூரியில் இடம்கிடைத்து, மருத்துவம் படித்த மாணவர் ஒருவர் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், சின்ன மண்டவாடி பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து மகன் ரஞ்சித்குமார் (24 ). இவர், திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படித்து, தற்போது ஹவுஸ் சர்ஜன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ரஞ்சித்குமார், மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். நேற்று மதியத்திலிருந்து இவரது அறைக்கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த இவரது நண்பர் ஒருவர் இன்று காலையில் அறையின் பின்பக்க ஜன்னலை திறந்து பார்த்திருக்கிறார். அப்போதுதான், அறையினுள்ளே ரஞ்சித்குமார் நைலான் கயிற்றால் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து மாணவர்கள் அளித்த தகவலின்பேரில் அங்குவந்த போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து சக மாணவர்களிடம் போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், ரஞ்சித்குமாருக்கு பல பாடங்களில் அரியர் இருப்பதாகவும், இவருடன் படிக்கும் சக மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவராக பணிபுரிய உள்ளதால், மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்திருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்பு இவருக்கு காதல் தோல்வியும் ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஞ்சித்குமாரின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்குமா என்ற கோணத்திலும், போலீஸார் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

காரணம் எதுவாயினும், ரத்தம் சிந்தி, உழைத்து தங்கள் பிள்ளைகளை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்ற பெற்றோரின் எண்ணத்தை, லட்சியத்தை உதாசீனப்படுத்தி விட்டு, இப்படி தன் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் மனப்பாங்கு சரியானதில்லை என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

x