நீட் தேர்வு என்றாலே மாணவர்களின் மரணம்தான் மனதை உலுக்குகிறது. அறிந்தோ, அறியாமலோ தன்னை ஒரு மருத்துவராக கனவுகாணும் மாணவர்கள், அந்தக் கனவு நிறைவேறாது என்று தெரிந்தால் உடனே தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் அவலம் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோளாக மன்னார்குடியைச் சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி, ஒருவருடத்துக்கு முன் தனது முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார்.
இப்போதும் அப்படியே அந்தப் பதிவு பொருந்தி வருகிறது. அது அவர் எழுதியதுதானா என்பதை உறுதிசெய்ய அவரிடம் பேசினோம். ” நான்தான் எழுதியிருந்தேன். ஆனால், நீங்கள் இப்போது படிப்பதில் நான் எழுதியதைவிட அதிகமான விஷயங்கள் அதில் செருகப்பட்டிருக்கிறது. அதனால் நானே அதை திருத்தி உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லி, அதன்படியே அனுப்பியும் வைத்தார். அவரின் அந்த மன்றாடல் வேண்டுகோள் இதோ...
"உன் கழுத்துல அந்த ஸ்டெதாஸ்கோப் மாட்டி ஒரு வாட்டி பாத்துரணும். பாத்துட்டேன்னா நான் நிம்மதியா கண்ணை மூடுவேன்" என்று குழந்தைகளிடம் பேசும் பெற்றோர்களுக்கானது இந்தப் பதிவு.
சென்ற ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில், அதில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் சிலர், தற்கொலை செய்து கொண்டனர். இந்த ஆண்டு, நீட் ரிசல்ட் வருவதற்கு முன்பே 3 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 12-ம் வகுப்பில் 700/1200 மதிப்பெண் பெற்று, மருத்துவர் ஆக துளியும் விருப்பம் இல்லாமல், தனது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் 3 முறை நீட் எழுதிய மாணவனும் இதில் ஒருவர்.
12-ம் வகுப்பில் 700, 800 மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை படித்து தேர்ச்சி பெறுவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதே எதார்த்தம். பெற்றோர்களே ! நீங்கள் நினைப்பதை விட மருத்துவப் படிப்பு மிக மிக கடினம். அதுமட்டுமில்லாமல் இப்போது ஏகப்பட்ட மருத்துவர்கள் உள்ளார்கள் தமிழகத்தில். இனிமேல் புதிதாக மருத்துவராகி சேவை செய்வது ரொம்ப கஷ்டம்.
10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் 100-க்கு 98, 99 மதிப்பெண் வாங்கிய மாணவர்கள் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டில் தேர்ச்சி கூட பெற முடியாமல், எவ்வளவு பேர் பெயில் ஆவார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ?
அப்படி பெயில் ஆனவர்கள், அரியர்களுடன் இரண்டாம் ஆண்டுக்கு செல்ல முடியாது. முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் போக முடியும். நீங்கள் நினைப்பது போல இந்தப் படிப்பு 5 ஆண்டுகள் கிடையாது.
முதல் ஆண்டு - 1 வருடம், இரண்டாவது ஆண்டு - ஒன்றரை வருடங்கள், மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகள் – தலா ஒரு வருடம். அத்துடன் ஹவுஸ் சர்ஜன் – ஒரு வருடம்.
ஆக, பெயில் ஆகாமல் தேர்ச்சி பெற்றாலே மொத்தம் ஐந்தே முக்கால் ஆண்டுகள் ஆகி விடும். இடையில் பெயில் ஆனால் 6 ஆண்டுகள், 7 ஆண்டுகள் என நீண்டு கொண்டே போகும். ஒரு வழியா படிச்சு முடிச்சு டிகிரி வாங்கியாச்சு. அடுத்து என்ன செய்வது?
பெரிய மருத்துவமனைகளில் பணி மருத்துவராக பணியில் சேரலாம். மாசம் இருபத்தஞ்சு.. முப்பது ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.
தனியாக க்ளினிக் ஆரம்பித்தால், "அவர் வெறும் எம்.பி.பி.எஸ் டாக்டர்தான், அவர்கிட்ட போவாத. எம்.டி டாக்டர் கிட்ட போ" என்பார்கள். இதுதான் மக்களின் மனநிலை.
சரி. எம்.டி படிக்கணும்னா, அதுக்கும் நீட் நுழைவுத்தேர்வு இருக்கு. அதுக்கு 2-3 வருஷம் தயார் ஆகணும். அதுக்கப்புறம் எம்.டி. சேர்ந்து 3 வருஷம் படிக்கணும். இதெல்லாம் முடிக்க 35 வயதாகிடும். (கொஞ்சமே கொஞ்சம் பேர் அதற்குள் முடிப்பவர்களும் இருக்கிறார்கள்) சரி பரவாயில்லை, லேட் ஆனா என்ன... அதான் எம்.டி முடிச்சாச்சே, இனிமே நல்ல பிரகாசமான எதிர்காலம் இருக்குன்னு நீங்க நினைக்கலாம்.
அங்க தான் ட்விஸ்ட். டாக்டர்களுக்கு மொத்தம் 3 ஆப்ஷன்தான் இருக்கு.
1.அரசுப் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யலாம். அப்படி அரசுப் பணியில் சேர்ந்த மருத்துவர்கள் , ஊதியம் போதவில்லை என்று போராட்டம் நடத்தும்போது, "அதான் க்ளினிக்ல நல்லா சம்பாரிக்கிறாங்களே. இவனுங்க பாக்குற வேலைக்கு இந்த சம்பளம் போதாதா?" என்று மருத்துவர்களை திட்டியவர்களில் நீங்களும் ஒருவர் என்பதை மறவாதீர்கள்
2.கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வேலைக்கு சேரலாம். ஆனால், அங்கே நாம் 12-வது முடித்தவுடன் தொலைக்காட்சியில் கொடுத்த பேட்டியில் செய்வதாகச் சொல்லிய சேவையெல்லாம் செய்ய முடியாது. மருத்துவமனையின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் வேலை செய்ய முடியும். சுயமாக ஏதும் செய்ய முடியாது.
3.இன்றைய காலகட்டத்தில் சொந்தமா இடம் வாங்கி, க்ளினிக் கட்டுவது ரொம்பச் சிரமம். அப்படியே கட்டினாலும், நோயாளிகள் வர மாட்டார்கள். ஒண்ணு அரசு மருத்துவமனைக்குப் போவார்கள். இல்லைனா, கார்ப்பரேட் மருத்துவமனை, இல்லைனா அதே ஊரில் ரொம்ப வருஷமா வைத்தியம் பார்க்கும் சீனியர் டாக்டரிடம் தான் போவார்கள். க்ளினிக்கில் கூட்டம் வர எப்படியும் 5 முதல்10 வருடங்கள் ஆகிவிடும் .
க்ளினிக்கில் வெற்றிபெற, புத்தக அறிவோ, நோயாளிகளின் நாடி துடிப்பை பார்த்தால் மட்டுமோ போதாது. அவர்களின் மன ஓட்டத்தை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். அப்படியே எல்லாம் செய்தாலும், கடைசியா அவர்கள் ஒரு வார்த்தை வைத்திருப்பார்கள். அதான் "கைராசி". கைராசி இல்லாத டாக்டர்னு ஒருத்தரை முத்திரை குத்திட்டாங்கன்னா அவ்ளோ தான். க்ளினிக்ல ஒக்காந்து ஈ தான் ஓட்டணும்.
இறுதியாக இரண்டு விஷயங்களை தெளிவாக சொல்கிறேன்.
1.எனக்கு மெடிக்கல் ஃபீல்டு பிடிக்காது என்று சொல்லும் பிள்ளைகளை மருத்துவம் படிக்கக் கட்டாயப்படுத்தாதீர்கள். ஒரு மெடிக்கல் சீட்டை வீணாக்காதீர்கள். உங்கள் ஆசையை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் விரும்பும் படிப்பை படிக்க வையுங்கள். பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் டாக்டரான யாரும் மருத்துவ துறையில் சோபித்தது இல்லை.
(உடனே , நீங்க டாக்டர் தானே... உங்க பசங்க டாக்டராக விருப்பமில்லன்னு சொன்னால் விட்ருவீங்களா? என்று என்னை கேட்பீர்கள். எஸ்! கட்டாயப்படுத்தவே மாட்டேன். எங்கள் குழந்தைகளுக்கு என்ன விருப்பமோ அதையே படிக்க வைப்போம்.)
2."மருத்துவம் படிப்பதுதான் என் கனவு. ஆனால், இந்த நீட் தேர்வினால் அது தடைப்பட்டுவிட்டது" என்று வருந்தும் மாணவர்களே, "அடுத்த ஆண்டு நீட் தேர்வு ரத்தாகும் என்று நமது மாநில அரசு உறுதியாகக் கூறியுள்ளது. எனவே, இந்த ஆண்டு ப்ளஸ் டூ வில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் மருத்துவம் பயில முடியாமல் போன மாணவர்கள், தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, வேறு படிப்பில் சேருங்கள்.
எம்.பி.பி.எஸ் கிடைக்கவில்லையென்றால் ஜெனடிக் எஞ்சினியரிங், ரோபோட்டிக்ஸ், மைக்ரோபயாலஜி, அக்ரி போன்ற படிப்புகளில் சேர்த்து விடுங்கள். அவை தான் எதிர்காலத்தில் மிகவும் அதிக வாய்ப்புள்ள படிப்புகளாக இருக்கப்போகிறது.
நம் மாநில அரசு கூறுவதைப்போல அடுத்த ஆண்டு நீட் தேர்வு ரத்தாகி, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்தால், நீங்கள் இந்த ஆண்டு எடுத்த மதிப்பெண்ணை வைத்து அடுத்த ஆண்டு சேர வாய்ப்புள்ளது.
(இதே போன்ற நிகழ்வு 2007-ம் ஆண்டு நடந்தது. 2004, 2005, 2006-ம் ஆண்டுகளில் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று , நுழைவு தேர்வில் கட் ஆஃப் கம்மி ஆனதால் எம்.பி.பி.எஸ் கிடைக்காத 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 2007-ம் ஆண்டு நுழைவுத்தேர்வு ரத்தாகி 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்ந்தார்கள். )
அதனால் நம்பிக்கையை விடாதீர்கள்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
பெற்றோர்களே ! உங்கள் காலத்தில் இருந்த "பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா" என்று தோளில் கோட் போட்டு பாடும் முரளி, "வானத்தைப் போல பிரபுதேவா" போன்ற டாக்டர் கேரக்டர்களை மனதிலிருந்து எடுத்து விடுங்கள். ஆதித்ய வர்மா அர்ஜுன் ரெட்டியை நினைத்துக் கொள்ளுங்கள். இதுதான் இன்றைய நிலை.
டாக்டர் பிரகாஷ்மூர்த்தி எம்.பி.பி.எஸ், எம்,டி
மன்னார்குடி