சாலையோர நூலகத்துக்குக் கட்டிடம் கிடைக்குமா?


புத்தகக் காதலர்களின் உலகம் எப்போதும் அழகானது. நெகிழ்வான தருணங்களைத் தன்னுள் கொண்ட உலகம் அது. அப்படியான அற்புத உலகின் பிரஜையான சையது ஈராக்கின் சாலையோரப் புத்தக விற்பனைக் கடைக்குக் கட்டிடம் கிடைக்க வேண்டும் என குவிந்துவரும் ஆதரவு கர்நாடக மக்களை நெகிழவைத்திருக்கிறது.

வாங்க வேண்டாம்... வாசிக்கலாம்

கர்நாடக மாநிலம் மைசூருவில் வசிக்கும் சையது ஈசாக் (63) புத்தக ஆர்வலர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் புத்தகங்களை விற்பனை செய்துவருகிறார். அவரிடம் புத்தகங்களை வாங்க மட்டுமல்ல, அந்தப் புத்தகங்களை வாங்காமல் அங்கேயே நின்றபடி வாசிக்கவும் ஏராளமானோர் வருவதுண்டு. விற்பனைக்காக இருக்கும் புத்தகங்களை வாசிக்க அனைவருக்கும் அவர் அனுமதி அளித்திருப்பதுதான் அதற்குக் காரணம். ஏறத்தாழ ஒரு சாலையோர நூலகமாகவே அவரது புத்தகக் கடை செயல்படுகிறது.

பண வசதி இல்லாததால் புத்தகங்களை வைக்க கட்டிடம் கட்டவோ, வாடகைக்கு இடம் பிடிக்கவோ முடியவில்லை. இருப்பினும் வீதியிலேயே புத்தகங்களை வைத்திருந்து நூலகமாக நடத்திவருகிறார் சையது ஈசாக்.

கடைக்குத் தீவைத்த விஷமிகள்

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8-ம் நாள் இரவு யாரோ விஷமிகள் சிலர் அவருடைய சாலையோர நூலகத்துக்குத் தீ வைத்துவிட்டனர். சேமிப்புப் புத்தகங்கள் அனைத்தையும் பறிகொடுத்தது பெரிய இழப்புதான் என்றாலும் சையது ஈசாக் மனம் கலங்கவில்லை. மீண்டும் நூலகம் நடத்த, தெரிந்தவர்களிடம் புத்தகங்களைக் கேட்டு திரட்டினார்.

பெங்களூரு கம்ப்யூட்டர் நகரம் என்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஏராளமானோர் இதை சமூகவலைதளங்கள் வழியாகப் பரப்பினர். படிப்பறிவு அதிகம் இல்லாத சையதின் புத்தகக் காதல் பலரின் நெஞ்சங்களையும் கரைய வைத்தது. முதல் படியாக அவர்கள் தாங்கள் படித்து முடித்த புத்தகங்களையெல்லாம் அவருடைய முகவரிக்குத் தங்கள் செலவிலேயே அனுப்பினர். இதனால் நெகிழ்ந்த சையது தான் குடியிருக்கும் சிறிய வீட்டில் அவற்றைச் சேர்த்து வைத்தார். ஒரு கட்டத்தில் வீடு கொள்ளாமல் புத்தகங்கள் குவியத் தொடங்கியதால் நெருங்கிய நண்பர்களிடம் கொடுத்து பத்திரப்படுத்தி வருகிறார்.

நூலகம் எரிந்த இடத்துக்கு தினமும் காலையில் ஏழு மணிக்குச் செல்கிறார். கையில் 22 தினசரிகளை வாங்கிக்கொள்கிறார். மைசூருவில் கிடைக்கும் எல்லா மொழி செய்தித்தாள்களும் அவரிடம் இருக்கின்றன. வருகிறவர்கள் அமர்ந்து படிக்க மாநகராட்சி சாலையில் இறக்கியுள்ள சிமென்ட் சிலாபுகளே இருக்கைகளாகிவிடுகின்றன. ஆட்டோ டிரைவர்கள் முதல் மாணவர்கள் வரையில் பலரும் செய்தித்தாள்களை இப்போது வாசிக்கின்றனர்.

கைவிரித்த அரசு அதிகாரிகள்

அவருடைய நிலையைக் கேள்விப்பட்டதும் தகவல்தொழில்நுட்ப பொறியாளர்கள் பலர் ரூ.35 லட்சம் வரை நிதி திரட்டினர். ஆனால் அவருக்கு மைசூரு வளர்ச்சி ஆணையமும் மாநகராட்சியும் இணைந்து கட்டிடம் கட்டித்தரும் என்று கூறியதால் பணத்தை திரும்பத் தந்துவிட்டனர். ஆணையம் இடத்தை ஒதுக்கத்தான் செய்தது. எனினும், அதன் பின்னர் மாநகராட்சி சார்பில் கட்டித் தருவதாக கூறிய ஆணையரும் துணை ஆணையரும் மாறிவிட்டனர். புதிய ஆணையர் இதுபற்றி எதுவுமே தெரியாது என்று கைவிரித்துவிட்டார். பெருநகர வளர்ச்சி ஆணையம் தன்னால் இடம்தான் தர முடியும், பணம் தர முடியாது என்று கூறிவிட்டது.

இவருடைய நிலை கண்டு கொல்கத்தா, டெல்லி, மும்பை போன்ற நகரங்களிலிருந்தும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்தும் இதுவரை எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் புத்தகக் காதலர்கள் அனுப்பியுள்ளனர்.

சாலையோர நூலகத்தை நடத்திவந்த சையதுவுக்கு அரசு அதிகாரிகள் தாங்களாக முன்வந்து உதவியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் பின்வாங்கிவிட்டனர். இது மக்களுடைய அறிவை வளர்க்கும் நூலகம் என்பதால் அரசியல் கட்சிகள் ஒதுங்கி நிற்கின்றன போலும்!

எல்லாவற்றையும் தாண்டி தனது நூலகத்துக்குக் கட்டிடம் கிடைத்துவிடும் என்று உறுதியாக நம்புகிறார் சையது ஈசாக். நல்லது நடக்கும், நிச்சயமாக!

x